பொதுப் போக்குவரத்து சாதனங்களில் சகிக்க முடியாத பேச்சுக்கள்

அஷ்ஷைக் பளீல்

கடந்த வாரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் ஒருவர் தனக்கு ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.அந்த பஸ்ஸில் இருந்த பெரும்பாலானவர்களுக்கு கேட்கும் வகையில் அவற்றுக்கெல்லாம் அவர் தமிழில் உச்ச தொனியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் ஹஜ் உம்ரா முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வருவதையும் அவரது பெயரையும் ஊரையும் என்னால் உரையாடல் வாயிலாக புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவு அவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.தொலைபேசி அழைப்புகள் வராத வேளைகளில் அவர் சப்தமிட்டு திக்ரு செய்து கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது.

எனவே நான் அவரது முகத்தை இரண்டு மூன்று தடவை பார்த்து எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். ஆனால் அவர் தொலைபேசி உரையாடலை பண்பாடாக அமைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. நான் அவரது ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு பஸ் வண்டிக்குள் இருந்த வண்ணமே மிக மெதுவாக தொலைபேசி அழைப்பை எடுத்து இந்தப் பெயருடைய நபரது நடவடிக்கை பற்றிச் சொன்னேன். சற்று நேரத்தில் இந்த நபரது தொலைபேசி அலற ஆரம்பித்தது. அப்போது நான் அழைத்த நபர் அவரோடு பேசினார் என்று நினைக்கின்றேன்.

அதற்குப் பிறகு வந்த அழைப்புகளுக்கு அவர் ‘நான் பஸ்ஸில் பிரயாணம் செய்கிறேன் வீட்டிற்குச் சென்று பதிலளிக்கிறேன்’ என்று மாத்திரம் பதிலளித்தார். எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

எனது நண்பர் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இப்போது சத்தம் நின்று விட்டதா என்று கேட்டார் நான் ‘ஆம்’ என்றேன்.

இது ஒரு சம்பவம் மட்டும் தான்.

மற்றுமொரு சம்பவம்.

நான் பஸ் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது எனக்குப் பின்னால் இருந்த ஆசனத்தில் ஒருவர் முஸ்லிம்களது தோற்றத்தில் ஆடை அணிந்து அமர்ந்திருந்தார். அவர் கையடக்கத் தொலைபேசி வியாபாரம் செய்வதை அவருடைய உரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன். அவரது உரையாடல்களும் முன்னைய நபரைப் போல் இல்லாத போதும் எல்லையைக் கடந்து, நான் கூட சங்கடத்தினால் திருப்பித் திருப்பி பார்க்க வேண்டிய அளவுக்கு இருந்தது.

அவர் தொலைபேசியின் வகைகள் விலைகள் தொடர்பாக எல்லாம் வாடிக்கையாளர்களுடன் மிகவும் சுதந்திரமாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. இரண்டு மூன்று தடவை திரும்பிப் பார்த்து அவருக்கு எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். ஆனாலும் அவர் கேட்ட பாடு இல்லை .ஆனால் அவரது சத்தம் சற்று குறைவாக இருந்ததால் நான் ஏற்கனவே சொன்னது போன்ற ஒரு நடவடிக்கையை நான் மேற்கொள்ளும் பெரிய தேவை இருக்கவில்லை.

இவை இரண்டு உதாரணங்கள் மாத்திரமே.

இந்த ஆக்கத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் நாம் எத்தகைய ஒரு காலகட்டத்தை இலங்கையில் கடந்து வந்திருக்கிறோம் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் இந்த நாட்டின் பிரஜைகள். எமக்கு பேச்சுரிமை,எழுத்துரிமை, வாக்குரிமை என்பன உள்ளன. பகிரங்கமான இடங்களில் தமிழில் பேசலாம். தமிழ் இந்த நாட்டின் அரச கரும மொழிகளில் ஒன்று என்பதெல்லாம் உண்மைகள் தான்.

ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் மிகுந்த அவதானத்துடன் அடக்கமாகவும் நடந்து கொள்ளவேண்டியது எமது கடமையாகும். ‘வேண்டாப் பெண்டாட்டி கைபட்டாலும் கால் பட்டாலும் குற்றம்’ என்ற சூழ்நிலை இருக்கின்றது. எமது சகல நடவடிக்கைகளும் பேச்சுக்களும் கவனமாக அவதானித்துபடுவதை நாம் மறந்து விடலாகாது.

பொது இடங்களில் பேசலாம். உடனடியாகப் பேசவேண்டியவற்றைப் பேசத்தானே வேண்டும்.ஆனால் எவ்வளவு பேசினால் போதுமோ அந்த அளவில் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். மிகுதமுள்ளதை வீட்டில் போய் பேசுகிறேன் என்று பேச்சைக் குறுக்கிக் கொள்ளலாம். பொருத்தமான அளவில் தான் சத்தமும் இருக்க வேண்டும்.

واغضض من صوتك

லுக்மான்(அலை) அவர்கள் தனது மைந்தனுக்குக் கூறிய உபதேசத்தில் “உனது சத்தத்தை தாழ்த்திக் கொள்வாயாக” என்றார்கள்.

وعن أَبي هريرة : أَن النَّبيَّ ﷺ قَالَ:

واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، قِيلَ: مَنْ يا رسولَ اللَّهِ؟ قَالَ: الَّذي لا يأْمنُ جارُهُ بَوَائِقَهُ

– مُتَّفَقٌ عَلَيهِ.

“அல்லாஹ் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை, அல்லாஹ் மீது ஆணை அவன் ஈமான் கொள்ளவில்லை, அல்லாஹ் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை” என்று நபி(ஸல்) மூன்று தடவை கூறினார்கள். அப்போது அவர்களிடம் அது யார் என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “யாரது தொந்தரவுகளில் இருந்து அயலவர்கள் நிம்மதியாக இல்லையோ அத்தகையவர் தான்” எனக் கூறினார்கள்.

மேலும் அல்லாஹ்:-

قولوا للناس حسنا

“மக்களுக்கு நல்லதையே கூறுங்கள்” என்று கூறுகிறான்.

பஸ்ஸில் பயணிக்கையில் சிலர் பேசி எமது காதில் விழுந்த சில தகவல்களின் உள்ளடக்கங்களை இங்கு வார்த்தைகளில் கூற முடியாத அளவுக்கு அசிங்கமானவை.

அடிக்கடி காதில் விழும் சில உரையாடல்கள் விசித்திரமானவை.

“நீ இன்னும் கடனைத் தரவில்லை”,. என்று கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் கேள்வி எழுப்புவர் சிலர் ‘எனக்கு இன்னார் கடனைத் தராததால் உங்கள் எகவுண்டுக்கு பணம் போடக் கிடைக்கவில்லை”என்று சாட்டுப் போக்குச் சொல்வோர் பலர்.

ஒரு தனிநபரது நடவடிக்கை முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும்.

பஸ்ஸில் மட்டுமல்ல பாதையில், வைத்தியசாலையில், வங்கிகளில்,காரியாலயங்களில் என்று பல இடங்களிலும் இத்தகைய முறைகேடுகள் உள்ளன.

Common sense, Discipline, Respecting others’ feelings போன்ற சொற்களுக்கான நடைமுறை உருவமாக முஸ்லிம்கள் இருப்பதற்கான சகல வழிகாட்டிகளையும் மார்க்கம் எமக்குத் தந்திருந்தும் எமது நிலை இப்படி இருக்கிறது. இதனால் மார்க்கமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

أكمل المؤمنين إيمانًا أحسنهم خُلُقًا

விசுவாசிகளில் அழகான பண்பாடுகளைக் கொண்டிருப்பவர் தான் முழுமையான ஈமானைக் கொண்டிருப்பவராவார்.என நபி(ஸல்) கூறினார்கள்.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும்.

இந்த சிறுபான்மை நாட்டில் முன்மாதிரியான சமூகமாக வாழ்ந்து மக்களது மனங்களை வென்று அல்லாஹ்வின் திருப்தியையும் அடைவோமாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top