அல்ஹம்துலில்லாஹ்!
“வினைத்திறன்மிக்க குத்பாக்கள்” எனும் தொனிப்பொருளில் கதீப்மார்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 16.9.2019 அன்று திங்கட்கிழமை குருநாகல் மாவட்ட சியம்பலாகஸ்கொடுவ ரிச்வின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பாணதுரை இப்னு உமர் கற்கைகள் நிறுவனத்தின் விரிவுரையாளர் அஷ்ஷைக் ரியாஸ் முப்தி (ரஷாதீ) அவர்களுடன் இணைந்து விரிவுரை நடத்தவும் கருத்தரங்கை நெறிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
الحمد الله رب العالمين عل كل حال . هذا من فضل ربي . وما توفيقي الا بالله.
அதன் போது குருநாகல் மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைக் சுஐப்(தீனி), முன்னாள் தலைவர் அஷ்ஷைக் சித்தீக், சியம்பலாகஸ்கொட்டுவ நூரிய்யா மத்ரஸா அதிபர் அஷ்ஷைக் முனவ்வர் உள்ளிட்ட குருநாகல் மாவட்டத்தையும் வேறு சில பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 220 உலமாக்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வு மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர் மறைந்து 19 வருடங்கள் பூர்த்தியாதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பத்வா பிரிவில் பணிபுரியும் அஷ்ஷைக் மபாஹீம் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்படவும் நடந்து முடியவும் பங்களிப்பு செய்தார்கள். மாஷா அல்லாஹ்.
இடம்பெற்ற விரிவுரைகள் இரண்டின் போதும் குத்பாக்களின் முக்கியத்துவம், தற்காலத்தில் பரவலாக அவதானிக்கப்படும் குறைபாடுகள், அவற்றுக்கான பிரதானமான காரணங்கள், நிவர்த்தி செய்ய கையாளப்பட வேண்டிய அணுகுமுறைகள் போன்றன தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஆறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
1.இலங்கையில் தஃவா பணிக்கான வாய்ப்புகள்
- தஃவா பணியின் இலக்குகள்
- இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரதான சவால்கள்
- குத்பாக்களில் அவதானிக்கப்படும் பிரதான குறைபாடுகள்
- குறைகளுக்கான பிரதான காரணிகள்
6.நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
கலந்துரையாடல்களில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த கருத்துக்களது சாராம்சங்கள் அவ்வக்குழுக்களுக்குப் பொறுப்பாக இருந்த குழுத் தலைவர்களால் தலா ஐந்து நிமிடங்களுக்கு முன்வைக்கப்பட்டன.
வாரம் ஒரு தடவை உலமாக்களுக்கு கிடைக்கும் இவ்வரிய வாய்ப்பு தற்காலத்தில் பெரும்பாலும் முறையாகப் பயன்படுத்தப்படுவது போதாது. இதனால் நல்ல விளைவுகள் ஏற்படுவது எப்படிப் போனாலும் பாதகமான விளைவுகளையே சில குத்பாக்கள் ஏற்படுத்துகின்றன.
எனவே, இவ்வாய்ப்பு உலமாக்களுக்கான அமானிதமாகும். குத்பாக்கள் மாத்திரம் ஒழுங்காக அமையுமாயின் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க அதுவே போதுமானதாகும்.எனவே இது விடயமாக கூடிய கவனம் எடுக்கப்படுவதும் ஒழுங்கான திட்டங்கள் வகுக்கப்படுவதும் அவசியமாகும் போன்ற கருத்துக்கள் கருத்தரங்கின் போது பரவலாக முன்வைக்கப்பட்டன.
நிகழ்த்தப்பட்ட சில உரைகளில் அடங்கியிருந்த கருத்துக்களது விரிவான விளக்கங்கள் குறிப்புக்கள் வடிவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன. Multi Media Presentation, Sound System என்பன நிகழ்ச்சியின் போது கருத்துக்கள் சிறப்பாக முன்வைக்கப்பட உதவியாக அமைந்தன.
இவற்றுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தமைக்காக ஏற்பாட்டாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
ஜஸாஹுமுல்லாஹு கைரல் ஜஸாஇ.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களதும் யூடியூப் வாயிலாக நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தவர்களதும் மனங்களில் இந்நிகழ்வு பல நல்ல மனப்பதிவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை குறைகள் களையப்பட்டு வினைத்திறன் மிக்கவையாக எதிர்கால காலக் குத்பாக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே அக்கறையுடன் கலந்து கொண்ட அனைவரதும் வேணவாவாக அமைந்தமையை அவதானிக்க முடிந்தது.
இக்லாஸோடும் கடும் முயற்சியுடன் கூடிய துஆவும் தவக்குலும் இருந்தால் அல்லாஹ் நிச்சயமாக எமது குதபாக்களை உயிரோட்டம் மிக்கவையாக அமைத்துத் தருவான்.
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
فاذا عزمت فتوكات على الله








