இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதிகள் ஏன் உருவாகினார்கள்?

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பழீல்

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சில குழுக்கள் வழிகெட்டுப் போனமைக்கும் பல அழிவு வேலைகளில் ஈடுபட்டமைக்கும் ஒரு பிரதான காரணம் இருந்தது. அதுதான் அவர்களிடம் ஈமான் ஆழமாகவும் அல்லாஹ்வுக்காகச் செயல்படவேண்டும் என்ற இக்லாஸ் தெளிவாகவும், மார்க்கத்தின் மீதான பற்று ஆழமாகவும் இருந்த அளவுக்கு ஷரீஆ பற்றிய அறிவுத் தெளிவு இருக்கவில்லை. இதனால், அவர்கள் மார்க்கத்திற்கே அவப்பெயரைத் தேடிக்கொடுத்து, அட்டகாசங்களில் ஈடுபட்டுவிட்டார்கள். கவாரிஜ்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

கவாரிஜ்களது தவறு

கவாரிஜ்கள் அலி(ரழி) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இணக்க சபையான ‘மஜ்லிஸுத் தஹ்கீம்’ இன் தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன் அலி(றழி) அவர்களைக் கொலைசெய்த படுபாதகச் செயலிலும் ஈடுபட்டார்கள். அவர்களிடம் மார்க்கத்தின் மீதான பற்றும் ஈமானில் உறுதியும் இருந்த அளவுக்கு மார்க்கத்தின் போதனைகள் பற்றிய அறிவுத் தெளிவிருக்கவில்லை. எனவே, குர்ஆன் வசனங்களுக்குப் பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். நண்பர்களை எதிரிகளாகவும் எதிரிகளை நண்பர்களாகவும் கருதினர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரிகளுக்கு எதிராகப் பிரயோகிக்க வேண்டிய ஆயுதங்களை சக முஸ்லிம்களுக்கெதிராகப் பிரயோகித்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பெரும் வடுவொன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. உமையா, அப்பாஸிய கிலாபத்தின் போது வேறு பல இரத்தக்களரிகளும் ஏற்படக் காரணமாகினார்கள்.

இந்த கவாரிஜ்கள் மார்க்க பக்தியாளர்களாக இருந்த அளவுக்கு குர்ஆனின் விளக்கம் கொண்டவர்களாக இருக்கவில்லை என்ற கருத்தை நபி(ஸல்) பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்:-

‘’(சஹாபாக்களே) அவர்களது தொழுகையைப் பார்த்து உங்களது தொழுகைகளையும் அவர்களது நோன்பைப் பார்த்து உங்களது நோன்பையும், அவர்களது நற்கருமங்களைப் பார்த்து உங்களது நற்கருமங்களையும் நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள்.(அதாவது உங்கள் செயல்களை விட அவர்களது செயல்களை அதிக தரமிக்கவையாகப் பார்ப்பீர்கள்.) ஆனால், குர்ஆனை அவர்கள் ஓதுவார்கள். அவர்களது தொண்டைக் குழிகளை அது தாண்டமாட்டாது. அம்பு அதன் வில்லிலிருந்துவேகமாக வெளியேறுவது போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறுவார்கள்’’ (புகாரீ, முஸ்லிம்) என்றார்கள்.

இந்த ஹதீஸிற்கு வியாக்கியானம் செய்யும் ஹதீஸ்கலை வல்லுனர்கள், கவாரிஜ்களை கொலை செய்யும்படியும் அவர்கள் விடயமாக ஜாக்கிரதையாக இருக்கும்படியும் வேறு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) குறிப்பிடுவதற்குக் காரணம் அவர்களது அறிவீனமும் மார்க்கம் பற்றிய குறைந்த அறிவுமேயாகும். அதனால் அவர்கள் தமக்கும் தமது சமூகத்திற்கும் பெரும் தீங்கை விளைவித்துவிட்டார்கள். அவர்களது நல்லெண்ணமும் தூய இலட்சியமும் அதிகமான இபாதத்களும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.(1) எனக் கூறுகிறார்கள்.

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனை விளக்கும்போது, குர்ஆனை அவர்கள் ஓதும்போது அவர்களது உள்ளத்தை அது அடைவது ஒருபுறமிருக்க அவர்களது தொண்டைக் குளிகளைக் கூட அடையமாட்டாது. ஏனெனில், குர்ஆனை எவராவது ஓதினால் அது உள்ளத்தில் பதியும் வகையில் அதுபற்றி ஆழமாக சிந்திப்பதும் ஆய்வு செய்வதும் அவசியமாகும்.(2) எனக் கூறினார்கள்.

எனவே, குர்ஆனை ஆழகாக ஓதிவந்த அவர்கள் அதன்படி நடக்குமளவு அதன் கருத்துக்களை ஆழமாக சிந்திருக்கவில்லை. இதன் விளைவுதான் இந்த சீர்கேடாகும்.

நவீன யுகத்தில் அறிவீனம்

இந்த உதாரணத்தை நவீன காலத்திற்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். இஸ்லாத்திற்காக அரும்பாடுபட்டு உழைக்கும் சிலர் இஸ்லாமிய அறிவுத் தெளிவைப் பெற்றில்லாததன் காரணமாக பல தவறுகளில் விழுகிறார்கள். நண்பர்களாகப் பார்க்க வேண்டியவர்களை எதிரிகளாகக் கருதி கடும் சண்டாளர்களாக மாறிவிடுகிறார்கள். வேறுசிலரோ மிகச் சிறிய விடயங்களுக்கு பெரும் சண்டைகளில் சம்பந்தப்படுவதுடன் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய -இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் பாராமுகமாக இருக்கிறார்கள். அதனால், நாளுக்குநாள் சமூகத்தில் பிணக்குகளும் பிளவுகளும் அதிகரித்து சமூகம் பலவீனப்படுத்தப்பட்டு, அர்த்தமற்ற சர்ச்சைகளுக்காக, வாதப்பிரதிவாதங்களுக்காக அதிக கால நேரமும் பணமும், மனித வளங்களும் வீணடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய சீர்திருத்தவாதிகளால் சமூகம் பயனடைந்ததை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் எதனையும்; பேசாது, செய்யாதிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணத் தோன்றுகிறது.

இக்கருத்தையே நவீன கால இஸ்லாமிய அறிஞர் ஷைக் அல்கஸ்ஸாலி: ‘இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால், அது கையாலாகாத, தோல்விகண்ட வக்கீல்களது கைகளில் சிக்கியிருக்கிறது. அவர்கள் ஒரு வார்த்தையையாவது பேசாதிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ‘’ (3)

எனக் கூறகிறார்.

உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ‘’அறிவின்றி செயல்படுபவன் சீர்திருத்துவதை விட அதிகமாக சீர்குலைப்பான்’’ (இப்னு ஸஅத்-தபகாத்) என்றார்கள்.

நல்லெண்ணத்துடன் அறிவும் தேவை.

ஆகவே, இமாம் புளைல் இப்னு இயாள் அவர்கள் ’’உங்களில் அழகிய செயலில் ஈடுபடுபவர் (அஹ்ஸனு அமல்) யார் என்று சோதிப்பதற்காகவே (அல்லாஹ்) மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் ’’ (67:2) என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ’அஹ்ஸனு அமல்’ என்ற’சிறந்த செயல்’ இரண்டு நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதாவது,

1.அது அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றப்பட வேண்டும்.

2.அடுத்ததாக அது மிகச் சரியாக- நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி செய்யப்பட வேண்டும்’ என்றார்கள்.(4)

தூய எண்ணம் இருந்தும் அது முறைப்படி, இஸ்லாம் கூறிய வகையில் நிறைவேற்றப்படாதவிடத்து அல்லாஹ்வால் ஏற்கப்படமாட்டாது என்பதே இதன் பொருளாகும். உரிய முறையில் அது நிறைவேற்றப்பட அது பற்றிய தெளிந்த, முழுமையான அறிவும் விளக்கமும் பெறப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, தொழுகையானது அழகிய செயலாக மாற அதன்நிபந்தனைகள் ,அதனை நிறைவேற்றும் முறைகள், அதன் பர்ளுகள், ஸுன்னத்கள், அதனை முறிப்பவை போன்றன பற்றிய அறிவு தேவைப்படும்.

ஒரு முஸ்லிம், இஸ்லாமிய பிரசாரம், வழிபாடுகள், அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள் போன்றவற்றில் ஈடுபடமுன்னர் அவை ஒவ்வொன்றோடும் தொடர்பான சட்டதிட்டங்களை, நெறிமுறைகளை அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

எடுத்துக்காட்டாக,

  1. இஸ்லாமிய பிரசாரத்தில் சம்பந்தப்படும் ஒருவர் ‘அலாபஸீரதீன்’ (நல்ல அறிவுத்தெளிவுடன்) அதில் ஈடுபட வேண்டும் என்பது யாமறிந்த உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்களும் அவரது தோழர்களதும் இந்த ’பஸீரா’ வுடன் தான் அல்லாஹ்வின் பால் மக்களை அழைப்பதாகவும் அதுபற்றி பிறருக்குக் கூறும்படியும் அல்லாஹ் 12:108 ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

“உமது இரட்சகனின் பாதையின்பால் அறிவு ஞானத்துடனும்; அழகிய உபதேசத்துடனும் அழைப்பு விடுப்பீராக’’ (16:125) என அல்லாஹ் தனது தூதருக்குக் கட்டளையிட்டிருப்பதிலிருந்தும் இஸ்லாமிய பிரசாரத்துக்கு முன்னர் அறிவின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

  1. வியாபாரம் செய்ய சந்தைக்குப் போக முன்னர் வர்த்தகத்துடன் சம்பந்தமான சட்டங்களை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவந்த உமர்(ரழி) அவர்கள் ’எமது சந்தையில் வியாபாரம் பற்றிய விளக்கமில்லாதவர்கள் விற்கக் கூடாது. அப்படியில்லாத போது, அவர் விரும்பியோ விரும்பாமலோ வட்டியை உண்பார்’’ என்றார்கள்.
  2. நபி மூஸா(அலை) அவர்கள் ‘ரப்பிஷ்ரஹ் லீ சத்ரீ வ யஸ்சிர் லீ அம்ரீ வஹ்லுல் உக்ததம் மின் லிஸானீ. யஃப்கஹூகவ்லீ’ (‘ரப்பே எனது உள்ளத்தை விரிவாக்கித் தருவாயாக (அதாவது-அறிவு தருவாயாக) எனது விவகாரங்களை இலகுபடுத்தித் தருவாயாக.எனது நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக. அப்போது தான் அவர்கள் எனது பேச்சைஆழமாக விளங்கிக் கொள்வார்கள்” என்று பிராத்திதார்கள்.

தஃவா செய்ய முன்னர் இந்தப் பிரார்தனையும் முயற்சிமும் தேவை என்பதை இது உணர்த்துகிறது.

எனவே, ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் உதயமாகும் சிந்தனைகள், அவன் பேசும் வார்த்தைகள், அவனது செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாயின் அவற்றில் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை பற்றிய அறிவுத் தெளிவு அவசியமாகும். இல்லாதபோது அவனது வாழ்வு குளிக்கப்போய் சேறுபூசியதாக மாறிவிடக்கூடும். இது பெரும் துரதிஷ்டமாகும். சுவர்க்கத்துக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு நரகில் நுழைய நேரிடலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் இந்தவகை அறிவைப் பெற்றிருப்பது இன்றியமையாத் தேவையாகும். இதன் பொருள் ஒவ்வொருவரும் சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறவேண்டுமென்பதல்ல. அவரவர் நேரடியாக சம்பந்தப்படும் துறைகளில் மட்டுமாவது இந்த அறிவுத் தெளிவு அவசியமாகும்.

  1. அதருல் இல்மிஸ் ஷரஈ பீ முவாஜஹதில் உன்பி வல் உத்வான், அப்துல் அஸீஸ் இப்னு பவ்ஸான் இப்னு ஸாலிஹில் பவ்ஸான்.
  2. பத்ஹுல் பாரி, இமாம் இப்னு ஹஜர்,19: 389
  3. முஹம்மத் அல்கஸ்ஸாலி, ஹாதா தீனுனா
  4. இப்னுதைமியா,மஜ்மூஉல் பதாவா- 1:333-334

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top