அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)
அடுத்த ஆறு வருடங்களுக்கு இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசியல் கூட்டங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்
- பலபோது பொய்கள் அரங்கேற்றப்படுகின்றன.
- பல உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன.
- தமது கட்சிக்காரர் வெல்ல வேண்டும் என்பதற்காக ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் கட்சியும் கட்சிசார்ந்தவர்களும் செய்த குற்றங்களை மூடி மறைக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்யாத குற்றங்களை சோடித்துக் கூறுகின்றனர்.
கடந்த கால இலங்கை வரலாற்றில் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக குட்டிச்சுவராக்கியவர்கள், பல மனித படுகொலைகள் இடம் பெறுவதற்கு காரணமாக அமைந்தவர்கள், இனங்களுக்கு இடையில் குழப்பத்தையும் மோதலையும் ஏற்படுத்தியவர்கள் என பலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இல்லை. அவர்களின் பலர் இறந்து விட்டனர். இன்னும் சிலர் உயிரோடு இருக்கின்றனர்.
சிறுபான்மையினரது சமய கலாசார பண்பாட்டு தனித்துவங்களை கொச்சைப்படுத்துகின்ற, அவை இக்காலத்திற்கு பொருத்தமில்லை என்று கூறுகின்றவர்களும் தற்காலத்தில் உள்ளனர்; கடந்த காலத்திலும் இருந்தனர்.
அந்தவகையில், எந்தப் பிரதிநிதியை தெரிவு செய்வது நல்லது என்பதில் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு செய்த தப்புத் தவறுகளை பொதுமக்கள் ஓரளவு தெரிந்து வைத்துள்ளனர் தான். ஆனால் அது முழுமையான தெளிவு அல்ல. எனவே தற்போதைய வேட்பாளர்கள் கடந்த காலத்தில் செய்த சேவைகளையும் அவர்கள் செய்த தவறுகளையும் பட்டியல்படுத்தினால் பொதுமக்களுக்கு தீர்மானம் எடுப்பதற்கு அது வசதியாக அமையும்.
இனங்களுக்கிடையில் அன்பும் பரஸ்பர புரிந்துணர்வும் நிலவக்கூடிய, அபிவிருத்தியடைந்த ஒரு தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதனை உயர்ந்த பச்சம் ஊர்ஜிதப்படுத்த இது வசதியாக அமையலாம்
தற்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒவ்வொருக்கும் மனிதர்கள் என்ற வகையில் தப்புகளை செய்திருக்கலாம். எனவே அவர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் விமர்சனங்கள் உள்ளன என்பதை எவரும் மறுக்கக்கூடாது.
ஆனால் ஆகக் குறைந்த அளவு குற்றங்களை அல்லது தவறுகளை செய்தவர் என்று கருதப்படுபவரை இருப்பவர்களுக்கு மத்தியில் தகுதி கூடியவரை கட்டாயம் நாம் தெரிவு செய்தேயாக வேண்டும்.
ஏனெனில் நாம் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் யாராவது ஒருவர் தெரிவு செய்யப்படப் போகிறார்.
எனவே ஒவ்வொரு வேட்பாளரது நல்ல மற்றும் விமர்சனத்துக்குரிய பகுதிகள் பற்றிய தெளிவு சமூகத்துக்கு சுதந்திரமாக நாம் முன்வைக்க வேண்டும்.
அதன் பின்னர் பொதுமக்கள் பொருத்தமானவரைத் தெரிவு செய்து கொள்ளட்டும்.
இந்த நாட்டுக்கு பிரதானமாக, உடனடியாகத் தேவைப்படுவது:-
- நாட்டின் பொருளாதார சுபிட்சம்
- இனங்களுக்கிடையிலான ஐக்கியம்
- ஒவ்வொரு இனத்தையும் சமயத்தையும் சார்ந்தவர்கள் தத்தமது தனித்துவங்களை பேணிக் கொள்வதற்கான சுதந்திரம்
- போதைவஸ்த்துப் பாவனை, சூழல் மாசடைதல், ஊழல், மோசடி, அரசியல் அராஜகம், அநீதி, இனவாதம் போன்ற நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடையாகவுள்ள காரணிகள் அற்ற சோபிட்சமான வாழ்வு.
நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் வாக்களிக்கின்ற பொழுது பிரதிநிதிகள் விடயத்தில் நீதி, சமத்துவம், சுதந்திரம், மனித சமூகத்தின் நலன்கள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர பரம்பரையாக ஒரு கட்சிக்கு வாக்களித்து வருகிறோம் என்பதற்காகவோ எம்மோடு குறிப்பிட்ட ஒரு கட்சிக்காரர் மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காகவோ அல்லது வேறு சுயநலமான தனிப்பட்ட காரணங்களுக்காகவோ எமது ஆதரவையும் வாக்கையும் தீர்மானிப்பது இஸ்லாமிய நோக்கில் மிகப்பெரிய துரோகமும் பாவமும் ஆகும்.
- அல்லாஹ் மீதான நம்பிக்கையும் மறுமை விசாரணை பற்றிய பயமும்,
- தூர நோக்கும் பரந்த மனப்பாங்கும்,
- தேசத்தின் நலன்,
- அனைத்து இனங்கள் மீதான பாசத்தை அடிப்படையாகக் கொண்ட அவர்களது நலன்களை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற உளப்பூர்வமான விருப்பம்
என்பன மாத்திரமே எமது அரசியல் நிலைப்பாடுகளை தீர்மானிக்க வேண்டும்.
வாக்களிப்பது ஒரு கடமையாகும்.
வாக்களிப்பது என்பது சிபாரிசு செய்வதும் சாட்சியம் கூறுவதுமாகும்.
வாக்களிப்பது ஓர் அமானிதமாகும்.
அல்லாஹ் இந்த நாட்டிற்கு நல்லதொரு சுபிட்சமான எதிர்காலத்தை தருவானாக!




