கடந்த தேர்தலைப் பொருத்தவரையில் ஒவ்வொருவரும் பல வித்தியாசமான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கலாம்; பிரச்சாரம் செய்திருக்கலாம்; அது அவர்களுடைய சுதந்திரம். இஸ்லாம் கருத்து சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வரவேற்கிறது.
ஒவ்வொருவரும் அவரவருக்குக் கிடைத்த தகவல்கள்,அறிவுகளை அடிப்படையாகக் கொண்டு கடத்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
கடுமையான ஆய்வு ஆராய்ச்சி என்பவற்றின் பின்னரும் சிலர் எடுத்த முடிவு பிழையாக இருந்தால் அவர்களுக்கு ஒரு கூலி கிடைக்கும். வேறு சிலர் எடுத்த முடிவு சரியா இருந்தால் அவர்களுக்கு இரண்டு கூலி கிடைக்கும் என்பது தான் ஹதீஸிலிருந்து நாம் பெறுகின்ற வழிககாட்டலாகும். ஒரு கூலிக்கும் இரண்டு கூலிக்கும் இடைப்பட்ட விடயமாகவே இது இருப்பதாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் முடிவுகள் எடுக்க முன்னர் ‘இஜ்திஹாத்’ (மிக தீவிரமாக கவனமாக முயற்சிக்க) வேண்டும்; தேடவேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இது இவ்வளவு தெளிவாக இருக்க எமக்கடையில் ஏன் இவ்வளவு மோதல்களும் சர்ச்சைகளும்?
எனவே தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தவர்களை அவமதிப்பதும் மட்டம் தட்டுவதும் அதற்கு அப்பால் சென்று வன்முறைகளில் ஈடுபடுவதும் முறையல்ல.
கருத்து பேதங்களின் பொழுதும் வெற்றிகளும் தோல்விகளும் வருகின்ற பொழுதும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைப்பிடிப்போம்.
மக்கா வெற்றியின் பொழுது இப்படி நடக்க வேண்டும் என்று அல்லாஹ் வழிகாட்டினான்:-
“அல்லாஹ்வின் வெற்றியும் (மக்கா) கைப்பற்றப்படுவதும் நடந்துவிட்டால், மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் கண்டுவிட்டால், உங்களது இரட்சகனது புகழைக் கொண்டு அவனை தஸ்பீஹ் செய்யுங்கள்; அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்று அல்லாஹ் வழி காட்டினான்.
மாறாக ஆகம்பாவத்தோடு அடாவடித்தனங்கள் செய்யுங்கள் என்றோ பிறருக்கு அறிவில்லை என்று கூறுங்கள் என்றோ அல்லாஹ் கூறவில்லை. நபியவர்கள் மக்கா வெற்றியின் பொழுது தம்மை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போது எவ்வாறு மிகக் கவனமாக, நிதானமாக நடத்தினார்கள் என்பதை நாம் வாசித்து அறிய வேண்டும்.எல்லா சந்தர்ப்பங்களிலும் நிதானமும் மனக்கட்டுப்பாடும் அவசியம்.
நாம் எதிர்பார்த்தது நடந்து விட்டால் ஷுக்ர் செய்ய வேண்டும். எதிர்பாராத ஒன்று நடந்து விட்டால் அதில் ஏதாவது ஒரு நலவிருக்கும் என்று சொல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுகளை ஏற்போம்; எல்லாவற்றிலும் அல்லாஹ் ஒரு நல்லவை வைத்திருப்பான் என்று உறுதியாக நம்புவோம். மாற்றுக் கருத்துடையவர்களை, பிறகட்சிக் காரர்களையும் அரவணைத்துக் கொள்வோம்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்!
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)




