கால சூழலுக்கு ஏற்ப மாறுபடும் சட்டத் தீர்ப்புக்களும் தனியார் சட்டமும்

இலங்கையில் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே ஏற்கத்தக்க கருத்தாகும் அதில் கால சூழலுக்கு ஏற்ப சில வகையான சட்டத் தீர்ப்புக்கள் மாற்றப்படுவது அவசியமாகும்.இது விடயமாக எமது ஸலஃபுஸ் ஸாலிஹீங்களான பழைய கால இமாம்கள் எழுதியிருக்கிறார்கள்.கால சூழலுக்கு ஏற்ப சில வகையான சட்டங்கள் மாற்றமடையும் என்பது இஸ்லாமிய சட்ட வல்லுனர்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.சில உதாரணங்கள் வருமாறு:

يقول ابن القيم:

(الأحكام نوعان: نوع لا يتغير عن حالة واحدة هو عليها ، لا بحسب الأزمنة ولا الأمكنة ولا اجتهاد الأئمة ، كوجوب الواجبات وتحريم المحرمات والحدود المقدرة بالشرع على الجرائم ونحو ذلك ، فهذا لا يتطرق إليه تغيير ولا اجتهاد يخالف ما وضع عليه . والنوع الثاني ما يتغير بحسب اقتضاء المصلحة له زمانا ومكانا وحالا كمقادير التعزيرات وأجناسها وصفاتها فإن الشارع ينوع فيها بحسب المصلحة)- إغاثة اللهفان لابن القيم ، دار المعرفة بيروت ن 1975 ، ج/1 ص 330

சட்டங்களை இரண்டு பிரிவாக வகுக்கலாம் என்று கூறும் ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டின் சட்ட வல்லுனர் இமாம் இப்னுல் கையிம் (691- 751)அதில் ஒருவகை, காலங்கள் இடங்கள் என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடாத- இமாம்களது இஜ்திஹாதுக்கு உட்படாத சட்டங்களாகும். வாஜிபுகள் ஹராம்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட குற்றவியல் தண்டனைகள் என்பன இவற்றுக்கு உதாரணங்களாகும்.இவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறமாட்டாது.அந்த சட்டங்கள் எந்த நியாயங்களுக்காக ஏற்படுத்தப்பட்டனவோ அவற்றுக்கு மாற்றமாக அவற்றில் இஜ்திஹாத் செய்யவும் முடியாது.

இரண்டாம் வகை சட்டங்கள் காலங்களுக்கும் பிரதேசங்களுக்கும் ஏற்ப மனித நலங்கள் மாறுபடுவதற்கு ஏற்ப அவற்றிலும் மாற்றங்கள் நிகழும்.மனித நலங்களுக்கு இணங்க அவற்றை அல்லாஹ்வும் ரசூலும் பலவிதமாக மாற்றுவதுண்டு.”என்றார்கள்.(இகாததுல் லஹ்ஃபான்-1/130)

இமாம் ஷாபிஈ கூட ஈராக்கில் வாழ்ந்த போது வெளியிட்ட பல தீர்ப்புகளை எகிப்து சென்ற போது மாற்றிக்கொண்டார்கள். அது ‘கவ்ல் ஜதீத்’ புதிய தீர்ப்பு என்றார்கள்.அது சட்ட வசனங்களை புதிய சூழலுக்கு ஏற்ப விளங்குவதற்கும் விளக்குவதற்கும் எடுத்த முயற்சியின் விளைவன்றி வேறில்லை. சூழலும் தேவைகளும் காலமும் மாறுபடுவதற்கே பத்வாக்களும் மாறுபடலாம். இது மனோ இச்சையின் அடிப்படையிலோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாகவோ நிகழக்கூடாது.

ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டின் சட்ட வல்லுனர் இமாம் இப்னுல் கையிம் (691ـ 751)ـ தனது ‘இஃலாமுல் முவக்கியீன்’ எனும் நூலில் ‘காலங்களும் இடங்களும் சூழ்நிலைகளும் .எண்ணங்களும் வழக்காறுகளும் மாறுபடுவதற்கு ஏற்ப பத்வாக்கள் மாறுவதும் வித்தியாசப்படுதலும்’ என்ற தலைப்பில் பல உதாரணங்க்கள் தருகிறார்கள்.(3/3)

உரித்துடையவர் யார் என இனம்காணப்பாடாத ஒரு பொருளை ஒருவர் கண்டெடுத்தால் என்ன செய்ய வேண்டும்? ஸகாதுல் ஃபித்ராக எந்த தானியத்தை கொடுக்க வேண்டும் போன்ற விடயங்களில் வந்துள்ள கருத்துவேறுபாடுகளைத் தருகிறார்கள்.

“ஸகாதுல் பித்ர் என்ற அடிப்படையான அம்சத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவவில்லை. அதன் தானிய விடயத்தில் நிலவுகிறது.பெறுமதியை கொடுக்கலாமா என்ற விடயத்தில் நிலவுகிறது”.என்றார்கள்..

ويقول الامام القرافي في الفرق الثامن والعشرين من كتابه “الفروق”

فمهما تجدد من العرف أعتبره، ومهما سقط أسقطه، ولا تجمد على المسطور في الكتب طول عمرك، بل إذا جاءك رجل من غير إقليمك يستفتيك، لا تخبره على عرف بلدك، واسأله عن عرف بلده، وأجره عليه، وأفته به، دون عرف بلدك والمقرر في كتبك، فهذا هو الحق الواضح، والجمود على المنقولات أبدا ضلال في الدين، وجهل بمقاصد علماء المسلمين والسلف الماضيين “.

ஹிஜ்ரி 7ஆம் நூற்றாண்டின் சட்ட வல்லுனர் இமாம் கராபி (ஹிஜ்ரி 626 -684 ) அவர்கள் தனது ‘அல்புரூக்’ என்ற நூலில் “ஊர் வழக்காறுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் சட்டங்கள் அந்த வழக்காறுகள் மாறுபடுவதற்கு ஏற்ப மாறுபடும்.புதிதாக உருவான வழக்காறுக்கு ஏற்ப புதிய சட்டம் உருவாக்கப்படும்.ஷரீஅத்தில் உள்ள வழக்காறுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் தீர்ப்புகள் அந்த வழக்காறுகள் மாறினாலும் தொடருமாயின் அது இஜ்மாவுக்கு முரணாகும். மார்க்கம் பற்றிய அறிவீனமாகும்- வழமைகள் மாறினால் சட்டம் மாறும். அவை மாறாவிட்டால் சட்டமும் மாறாது. நூல்களில் எழுதப்பட்டுள்ளவற்றில் வாழ்நாள் முழுதும் உறைந்து போகாதீர்கள். உங்களது ஊர்வாசியல்லாத ஒருவர் உங்களிடம் ஃபத்வா கேட்டுவந்தால் உங்களது ஊர் வழமைக்குள் அவரை இழுத்துவராதீர்கள். அவரது ஊர் வழக்காறு எது என்று விசாரியுங்கள். உங்களது நூலில் உள்ளபடியில்லாமல் அவரது வழக்காறின் படி தீர்ப்புக்கொடுங்கள். அதுதான் தெளிவான சத்தியமாகும். பிறரிடமிருந்து நகர்த்தப்பட்ட நூல்களில் உள்ள ஃபத்வாக்களில் உறைந்து போவது மார்க்கத்தின் வழிகேடாகும். முஸ்லிம்களது அறிஞர்களதும் கடந்த கால ஸலபுகளதும் இலக்குகள் பற்றி அறியாதிருப்பதாகும்”. என்கிறார். (அல்புரூக்- 1/321)

ஹனஃபீ மத்ஹபைப் பொருத்தவரையில் இஜ்திஹாதை அடிப்படையாக் கொண்டு முன்னையோரால் உருவாக்கப்பட்ட பெரும் தொகை சட்டங்கள் பின் வந்தவர்களால் நிராகரிக்கப்பட்டன.வழக்காறு மாறுபடுவதற்கேற்ப முன்னைய தீர்ப்புக்களுக்கு மாற்றமான தீர்ப்புக்களை அவர்கள் வழங்கினார்கள். காலம் மோசமாகி விட்டமை அல்லது சமூகமும் மாற்றமடைந்து விட்டமை அல்லது வேறு காரணங்கள் அதற்குப் பின்னணிகளாக இருந்தன.

ذكر السرخسي: أن الأمام أبا حنيفة في أول عهد الفرس بالإسلام، وصعوبة نطقهم بالعربية، رخص لغير المبتدع منهم أن يقرأ في الصلاة بما لا يقبل التأويل من القرآن باللغة الفارسية، فلما لانت ألسنتهم من ناحية، وانتشر الزيغ والابتداع، من ناحية أخرى، رجع عن هذا القول.

இமாம் ஸர்கஸீ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இமாம் அபூஹனீபாவைப் பொருத்தவரையில் அவர்கள் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பாரசீகர்களுக்கு அரபு மொழியை உச்சரிப்பதில் சிரமங்கள் இருந்தை அவதானித்த பொழுது பாரசீக மொழியில் தொழுகையில் ஓதுவதற்கு சலுகையளித்தார்கள்.ஆனால் அவர்கள் ‘பித்அத்’ செய்பவர்களாக இருக்கலாகாது என்றும் அந்த ஓதல் பிழையான வியாக்கியானங்களுக்கு காரணமாக அமையலாகாது என்றும் கூறினார்கள்.ஆனால் அதன் பின்னர் ஒருவகையில் அந்த மக்களது நாவுகள் திருந்தினாலும் மற்றொரு பகுதியில் அவர்களுக்கு மத்தியில் பித் அத்துக்களும்களும் வழிபிறழ்வுகளும் பரவலாக இடம்பெற்றதால் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்கள்”

இது இமாம் அபூஹனீஃபா அவர்களது ஃபத்வாக்கள் கால சூழ்நிலைக்கேற்ப மாறுபட்டமையைக் காட்டுகிறது.

இமாமுக்கும் அவரது இரு சீடர்களுக்கும் இடையிலான கருத்து பேதங்கள் பற்றி ஹனஃபீ மத்ஹபினர் கூறும் போதும் ‘அது காலத்தையும் சூழலையும் அடிப்படையக் கொண்ட கருத்து பேதங்களேயன்றி ஆதாரங்களையும் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டவையல்ல’ என்றனர்.

ويقول الدكتور مصطفي الزرقاء من المعاصرين في بحثه لهذا الموضوع :

(من المقرر في فقه الشريعة أن لتغير الأوضاع والأحوال الزمنية تأثيرا كبيرا في كثير من الأحكام الشرعية الاجتهادية ، وعلي هذا الأساس أسست القاعدة الفقهية القائلة لا ينكر تغير الأحكام بتغير الزمان ) وقد اتفقت كلمة فقهاء المذاهب علي أن الأحكام التي تتبدل بتبدل الزمان واختلاف الناس هي الأحكام الاجتهادية من قياسية ومصلحيه وهي المعنية بالقاعدة الآنفة الذكر ، أما الأحكام الأساسية التي جاءت الشريعة لتأسيسها وتوطيدها بنصوصها الأصلية فهذه لا تتبدل بتبدل الأزمان بل هي الأصول التي جاءت بها الشريعة لإصلاح الأزمان والأجيال )[ تغيير الأحكام بتغير الزمان ) د. مصطفي الزرقاء – مجلة المسلمون ع/8 ص 891 ( 1373)

நவீன கால அறிஞர் கலாநிதி முஸ்தஃபா ஸர்கா அவர்கள் :

“சந்தர்ப்ப கால சூழ்நிலைகள் மாறுவது இஜ்திஹாதிய ஷரீ அத் சட்டங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஷரீஆ மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும்.இந்த அடிப்படையில் தான் “லா யுன்கரு தகையுருல் அஹ்காம் பி தகையுரிஸ் ஸமான்” (கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்கள் மாறுபடும் என்பதை நிராகரிக்க முடியாது). என்ற ஃபிஃஹ் விதி ஸ்தாபிக்கப்ப்ட்டது. கியாஸையும் மஸ்லஹாவையும் அடிப்படையாக் கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் தான் காலங்களும் மனிதர்களும் மாறுபடுவதற்கேற்ப மாற்றப்படூம் என்று மத்ஹபுடய உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள்.மேற்சொன்ன ‘காஇதா’வின் கருத்து இதுவாகும். ஆனால் அடிப்படையான சட்ட வசனங்களால் நிறுவப்பட்ட சட்டங்கள் பல உள்ளன அவற்றை ஸ்தாபிப்பதற்கே அந்த வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்த சூழல்களை சீர்செய்வதற்கு அவை இறக்கப்பட்டனவே தவிர அவற்றால் மாற்றப்படுவதற்கல்ல.”என்று கூறுகிறார்.

(மஜல்லது அல்முஸ்லிமூன் – தகைய்யுருல் அஹ்காம் பி பகையுரிஸ் ஸமான் 8/891-1373)

எனவே, அல்லாஹ்வும் அவன் தூதரும் இஜ்திஹாதிய அணுகு முறைகளுக்கு வழங்கிய அனுமதியில் இஸ்லாமிய ஷரீஆவின் உயிரோட்டமும் நீடித்த நிலைத்த தன்மையும் தங்கியிருக்கிறது.அரபு தீபகற்பத்துக்கு வெளியே இஸ்லாம் பரவிய போது எழுந்த புதிய பிரச்சினைகளுக்கு குர்ஆனின் சுன்னாவின் அடியாகவும் அவற்றின் உயிரோட்டத்தின் வெளிச்சத்திலும் இமாம்கள் தீர்வுகளை வெளியிட்டு இஸ்லாத்தை சகல காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருத்தமான ஜீவ சக்தியாக ஸ்தபித்தார்கள்.அதே இஸ்லாம் இன்றும் அதன் கீர்த்திமிக்க வரலாற்றைத் தொடருவதற்கு இஜ்திஹாதிய வாயில் தொடர்ந்தும் திறங்க்திருக்க வேண்டும்.ஆனால் அதன் காவலாளிகளாக தகுதியானவர்கள் மட்டுமே இருக்கவும் வேண்டும்.

எமக்கென்ற பார்வை

எனவே, நாம் வாழுவது இருபத்தியோராம் நூற்றாண்டு என்பதையும், இது ஒரு சிறுபான்மை நாடு என்பதையும் மனிதத் தேவைகள் பல்கிப் பெருகியிருக்கின்றன என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
குடும்ப வாழ்வு தொடர்பான அடிப்படைகளில் எவ்வித மாற்றங்களையும் செய்யாமல் ஒரு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இருக்கும் வித்தியாசமான கருத்துகளுக்கு மத்தியில் நமது நாட்டு சமூக சூழலுக்கு மிகப் பொருத்தமானதை தெரிவுசெய்ய வேண்டும்.

நமது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஷாபி மத்ஹப் சார்ந்தவர்களாக இருப்பதால் அதற்குள் இருந்து பொருத்தமான கருத்துக்களைத் தெரிவு செய்யலாம். ஆனால் அந்த மத்ஹபின் கருத்துகளை விட வேறு ஒரு இமாமின் அல்லது பல இமாம்களின் கருத்துகள் தான் இக்காலத்துக்கும் சூழலுக்கும் பொருத்தம் எனின் அவற்றைத் தெரிவுசெய்யலாம்.அதற்கு ஃபிக்ஹ் பரிபாஷையி ‘இஜ்திஹாத் இந்திகாயீ’ எனப்படும்.பல கருத்துக்களுக்கு மத்தியில் இருந்து மிகப் பொருத்தமான ஒன்றைத் தெரிவு செய்தல் என்பது அதன் பொருளாகும்.

ஆனால், இந்த தெரிவு நடவடிக்கை மிகக் கஷ்டமானது. எல்லோரும் அதில் ஈடுபடவும் கூடாது. ஏக காலத்தில் இஸ்லாமிய ஷரீஆ பற்றிய மிகத் தெளிந்த ஞானமும் தற்கால சூழல் பற்றிய ஞானமும் பெற்றவர்களே அதில் ஈடுபடவேண்டும்.

நடைமுறை அறிவு

ஆனால், பத்வா கொடுப்பவர் சமூகத்திலிருந்து ஒதுங்கி கோபுரமொன்றில் இருந்து அதனை வெளியிட்டால் அது பொருத்தமாக அமையாது. முஜ்தஹிதுக்கு இருக்கவேண்டிய நிபந்தனைகளில் ‘மஃரிபதுல் வாகிஃ’ (நடைமுறை பற்றிய அறிவு) என்பதும் ஒன்றாகும். சட்ட வசனத்தை நடைமுறையில் பிரயோகிக்க முன்னர் உடநிகழ்கால சூழல் பற்றி கவனத்தில் எடுக்கவேண்டும்.முஸ்லிம் விவாக விவாக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்படுவதற்கு பல காழி நீதிமன்றங்களில் இடம்பெற்று வரும் மிகப்பெரிய ஒழுங்கீனங்களும் அக்கிரமங்களும் அடாவத்தங்களும் பின்புலமாக அமைந்தனால் அவற்றை உதாசீனம் செய்யலாகாது,

யாரோ கூறுவது போல சமூகத்தை பறவைகளது(Birds’ View)பார்வையில் பார்க்காமல் புழுக்களது நிலையில் இருந்து(Warms’ View) பார்க்க வேண்டும்.அதாவது புழு தான் நிலத்தின் ஆழத்துக்கும் மத்திய பகுதிக்கும் போகும் உஷ்ணத்தை உணரும்.குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்த வண்ணம் சமூகத்தின் விவகாரங்களை அணுகுபவர்கள் எமது முன்னைய இமாம்களது ஃபிக்ஹ் பாரம்பரியத்துக்கு உரித்துக் கொண்டாட முடியாது.

களவு எடுத்தால் கைவெட்டவேண்டும் என்ற சட்டத்தை உமர்(ரழி) அவர்கள் இடை நிறுத்தி வைத்தமைக்கு பஞ்சம் நிலவுவதைக் காரணம் காட்டினார்கள். ‘பிக்ஹுன் நஸ்’,(சட்டவசனம் பற்ரிய அறிவு) ‘பிக்ஹுல் வாகிஃ’ (நடைமுறை பற்றிய அறிவு) இரண்டும் இரு கண்களை அல்லது ஒரு பறவையின் இரு இறக்கைகளை ஒத்தவையாகும்.
இலங்கைச் சூழலில் குடும்ப விவகாரங்கள் மட்டுமன்றி அரசியல், சமூகங்களுக்கிடையிலான உறவுகள், உழைப்பு முயற்சிகள் போன்ற இன்னோரன்ன துறைகளில் இந்தப் பார்வை அவசியப்படுகிறது.

ஆனால், இஸ்லாமிய சட்டம் என்பது எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிவிடலாகாது. எமது பிக்ஹ் சட்டத்துக்கு கீர்த்திமிக்க வரலாறு உண்டு. அதில் ஈடுபட்டவர்கள் இறையச்சத்தில் உச்சத்தில் இருந்த,சமூகத்தால் வித்துவான்களாக அறியப்பட்ட ஆன்மீகப் பக்குவமிக்க ஜாம்பவான்களாவர். அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும், சட்டமரபுகளையும் துறைபோகக் கற்றவர்கள். பிற அபிப்பிராயங்களையும் கணம் பண்ணியவர்கள், நாமறிந்த வகையில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் தேடலுக்குமே முக்கியத்துவம் வழங்கியவர்கள்.எனவே இறுக்கத்துக்கும் பொடுபோக்க்குக்கும் இடையில் நின்று விவகாரங்கள் அணுகப்படுவது அல்லாஹ்வுக்கும் விருப்பமாக இருப்பதோடு சமூக நலனுக்கும் இசைவானதாக அமையும்.இதன் பொருள் கட்டுக்கோப்புக்களை உடைதெறிந்து விட வேண்டும் என்பதல்ல.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

அல்லாஹ் எமக்கு நேரான வழியைக் காட்டுவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top