(5.7.2019 நவமணிப் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம்)
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
இலங்கையர் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட விருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. பலர் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். ஆதரவளிப்போரும் இருக்கிறார்கள். இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் மரண தண்டனை இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த 40 வருடங்களாக அது அமுல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தால் சுமார் 100 பேர் மரண தண்டனைச் சட்டதீர்ப்புக்கு உள்ளாகியிருக்க, அவர்களில் நான்கு பேர் மட்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஏன் என்ற வினா எழுகிறது. அவர்கள் போதை பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இத்தகைய கடும் தண்டனைகளை வழங்கினால் தான் மக்கள் பயப்பட்டு அதில் ஈடுபடமாட்டார்கள் என்றும் காரணம் கூறப்படுகிறது. இந்த வாதம் வெளிப்படையில் பார்க்கையில் பொருத்தமானதாகவே உள்ளது.
அண்மைக் காலங்களில் போதைபொருள் பாவனையாளர்களுடைய மற்றும் அதனை கடத்தி விற்போருடைய தொகை அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இந்த உண்மையையும் யாரும் மறுக்க முடியாது.
பொதுவாக குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதற்கு நான்கு காரணங்கள் இருப்பதாகக் கூறுவர்.
பழிக்குப் பழிவாங்குவது, பிறருக்கு ஒரு படிப்பினையாக அமையட்டும் என்பதற்காக அவற்றை நிறைவேற்றுவது, சமூகத்திலிருந்து குற்றவாளியை ஒதுக்குவது,புனருத்தாரணம் செய்வது ஆகிய நோக்கங்களைக் கொண்டவைகளாக தண்டனைகள் அமைகின்றன.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
தற்போதைய சூழ்நிலையில் சிலவிடயங்கள் பற்றி நாம் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும்.
1).ஜனாதிபதி தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை வழக்கத்துக்கு மாறாகப் பிரயோகித்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை, ஞானசார தேரரை விடுதலை செய்தமை, தற்போது மரண தண்டனைக்காக கையொப்பமிட்டமை என்பன அவையாகும்.பிரதமருடன் அவருக்குள்ள தனிப்பட்ட அதிருப்தியால் இவற்றை அவர் செய்கிறார் என்றும் ஊகிக்க முடியும். எனவே, நன்கு சிந்தித்து அல்லது துறை சார்ந்தவர்களது ஆலோசனையின் பேரில் இதனைச் செய்யாமல் திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு போல் விளங்குகிறது.
2)போதை பொருள் கடத்தல் தொடர்பாக சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அல்லது தண்டனை பெற்றிருப்போர் ‘நெத்தோலிகள்’ தான். அதாவது சமூகத்தின் கீழ் மட்டத்தவர்கள்.பெரும் ‘திமிங்கிலங்கள்’ சட்டத்தின் பிடியில் சிக்குவது குறைவு. பெரும் பணமுதலைகளான குபேரர்களது கையாட்களாக இருக்கும்நெத்தோலிகள் தான் சட்டத்தின் பிடிக்குள் சிக்குகிறார்கள். போதைபொருள் கடத்தலை பிரதான தொழிலாகச் செய்யும் பெரும் புள்ளிகள் பெரும்பாலும் பிடிபடுவதில்லை. எனவே, எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
3)தண்டனைகளை வழங்குவதற்கு முன்னர் குடிமக்கள் குற்றங்களில் சம்பந்தப்படாமல் இருக்கும் வகையில் அவர்களது மனநிலை சீர்செய்யப்பட வேண்டும். இஸ்லாத்தில் அது ஈமானியப் பக்குவம் எனப்படுகிறது.
இலங்கைச் சூழலில் விழுமியங்களும் சிறந்த மனப்பாங்குகளும்உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் அரிதாகவே உள்ளன. மதவாதிகள் கூட வைராக்கியம், துவேசம், வெறுப்பு என்பவற்றை விதைப்பதிலேயே காலத்தைக் கடத்தும் போதுஉளப்பாங்கு மாற்றமானதுசாத்தியமில்லை. வக்கிர எண்ணங்கள்,பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம், சுயநலம், பிறரைப் பிழிந்து வாழ்வதில் இன்பம் காண்பது என்பன இருக்கும் சமூக அமைப்பில், மனப்பாங்குகள் கோணலாக, நோயுற்ற நிலையில் தான் இருக்கும்.பிறரது கழுத்தை நெரித்து பொருள் சேர்க்க வேண்டும் என்று தான் பலரும் சிந்திக்கிறார்கள்,செயல்படுகிறார்கள்.
எனவே, முதலாளித்துவ, சடவாத, சுயநலவாத உலகில் குடியைக் கெடுக்கும் போதை பொருட்களை கடத்துவதும், விற்பதும் குற்றங்களேஅல்ல.உழைப்பின்முதல் தர வழியே அது தான். எனவே மனப்பாங்குபக்குவப்படாத மனிதர்கள் உள்ள உலகில் குற்றங்கள் நிகழுவது சகஜமே.
4)மனப்பாங்கு மாற்றத்திற்கு அடுத்த ஏற்பாடு தீமைகள் அற்றதாக சமூக சூழலை மாற்றுவதாகும். அதாவது குற்றங்கள் நிகழ்வதற்கான வழிகளை மூடுவதாகும்.உதாரணமாக, அரைநிர்வாணமாக பெண்களை நடமாடவிட்டு விட்டு அவர்களைச் சீண்டும் ஆண்களை மட்டும்குறை காண்பது இஸ்லாமிய வழிமுறை அல்ல. இதற்காக பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது நியாயம் என்பது பொருள் அல்ல.
மதுக்கடைகளுக்கு அனுமதிப் பத்திரம்வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பாவங்களின் தாயாகிய சாராயத்தை மக்கள் குடிக்கிறார்கள். அவ்வாறுகுடித்துவிட்டு வாகனம் செலுத்துபவன் சிறையில் தள்ளப்படுகிறான். மது போதையில் மனைவியை நையப்புடைப்பவன் குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறான்.
களவு நிகழ்வதற்கான பிரதானமான காரணம் வறுமையாகும். போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்படும் பல ‘நெத்தோலிகள்’ படிக்க பாடசாலை போகாதவர்கள். போனாலும் கூட படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டவர்கள். அல்லது அன்றாடம் சாப்பிடக் கூட வழியில்லாதவர்கள். அவர்களுக்கான தொழில் போதைபொருள் கடத்தலாகும். சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தாமல் கிருமிகள் பெருகிவிட்டன எனக் கூற முடியாது. இது சாதாரணமான உண்மையாகும்.
வறுமை நிலவிய காலத்தில் உமர் (ரழி) களவெடுத்தவர்களது கையை வெட்டும் சட்டத்தை இடை நிறுத்திவைத்தார்கள். எனவே,சூழலை ஒழுங்குபடுத்தாமல் குற்றவாளிகளைத் தண்டிப்பது முறையல்ல.
- இலங்கை நீதித்துறையானது நம்பகத்தன்மையை பெருமளவில் இழந்திருக்கிறது. நீதிபதிகள்,சட்டத்தரணிகள்,பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரில் கணிசமானதொகையினர் இலஞ்சம், ஊழல், அரசியல் சார்பியங்கள் மற்றும் சுயநலங்களில் சிக்கி இருக்கும் போதும் அரசியல் வாதிகளது அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் போது அந்தத் துறையில் நீதியான தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியாது.
இப்படி கூறும் போது எல்லோரும் அப்படித் தான் என்றுகூறுவதற்கில்லை. நீதிபதியின்மனநிலையிலும், வழக்கறிஞர்களது இனம், மதம், அவர்கள் வழக்குப் பேச பெற்றுக்கொள்ளும் பணத்தின் தொகை என்பவற்றில் சட்ட தீர்ப்புகள் தங்கியுள்ளன.
இவற்றைப் பார்க்கும் போது மரண தண்டனை வழங்கப்படுவது பற்றி பல ஐயங்கள் நிலவுகின்றன.
இஸ்லாத்தை பொருத்தவரை மனித உயிர் என்பது – அது எவருடைய உயிராக இருந்தாலும் – பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதி உயர்ந்த கவனம் இருக்கிறது. அநியாயமாக ஓர் உயிரைப் போக்குவதற்கு முழுக்க முழுக்க நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.
அடிப்படையில் ஒருவர் நிரபராதியாவார். எனவே, அவர் மீது தண்டனை பிரயோகிக்கப்பட முன்னர் அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கான பலமான சான்றுகள் இருப்பது அவசியமாகும். கருணைக் கொலை கூட அனுமடதிக்கப்படாமல்இருப்பதற்கு பல நியாயங்கள் உள்ளன. ஒருவர் நோய் வந்து அல்லது முதுமையால் தானாக மரணிப்பது என்பதை சகிக்க முடியுமாகஇருந்தாலும், அவர் கொல்லப்படுவது மாபெரும் குற்றம். அதனைகுடும்பத்தார், நண்பர்கள், ஊர், உலகத்தார் எப்படியும் சகிக்கமாட்டார்கள்.
எனவே,தற்போதைய இலங்கைச் சூழலில் மரண தண்டனை சாத்தியமற்றது என்பது பலமான வாதமாகும்.
ஏற்க முடியாத வாதங்கள்
மரண தண்டனை பல சர்வதேசநாடுகளில் இல்லை, எனவே, நாம் அதனை நடைமுறைப்படுத்தினால் அந்த நாடுகளால் நிராகரிக்கப்படுவோம் என்று சிலர் வாதிடுகிறார்கள். வேறுசிலரோ இது காட்டுமிராண்டித்தனம், நாகரீகமற்ற போக்கு என்றுகூறுகிறார்கள். இந்த வாதங்களை ஏற்க முடியாது. மனித உரிமைகள் பற்றிப் பேசும் அந்த நாடுகளில் மீறப்படும் வேறு விதமான மனித உரிமைகள் பல இருக்கின்றன. எனவே, அந்த நாடுகளுக்கு இதுபற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் குற்றவியல் சட்டங்களும் தண்டனைகளும் குர்ஆனிலும் சுன்னாவிலும் தெளிவாகக்கூறப்பட்டுள்ளன. அவை அல்லாஹ்வினதும் தூதரினதும் சட்டங்கள், கட்டளைகள். அவற்றை மறுப்பது குஃப்ர் ஆகும். அத்தோடு, அவை எமக்கு அருளாகவே தரப்பட்டுள்ளன. தண்டனை நிறவேற்றப்படும் ஒருவருக்கு அவை அவரது குற்றங்களுக்கான பரிகாரமாக அமையும் என்று கூறும் வசனங்கள் உள்ளன. தண்டணைகள் நிறைவேற்றப்பட்டால் வேறு பலர் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடதுணியாமல் இருக்க உதவும் என்பதும் இஸ்லாத்தின் கண்னோட்டமாகும்.
ஆனால், குற்றங்களுக்கானதண்டணைகளை நிறைவேற்ற முன்னர் அதற்கான சூழலை உருவாகிக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய அணுகுமுறையாகும். சூழலை உருவாக்குவது என்றால் குற்றங்கள் உருவாகாதிருக்கும் சூழலை உருவாக்குவதாகும்.
ஒருவர் கொலைக் குற்றம் ஒன்றில் சம்பந்தப்பட்டு விட்டதாக திட்டவட்டமாக நிறுவப்பட்டாலும் கூட, அதற்கான காரணங்களைப் பொறுத்தும் மரணதண்டணை நிறைவேற்றப்படாமல்ஸபோகும் சந்தர்ப்பங்களும் இஸ்லாத்தில் கவனிக்கப்படும். உதாரணமாக நிர்பந்தமாகக் கொலை செய்வது, தவறுதலாக செய்வது போன்றவற்றைக்குறிப்பிடலாம். (இது விரிவாகநோக்கப்பட வேண்டிய பகுதியாகும்)
குற்றவியல் சட்டங்கள் சமூகத்தின் கட்டுக்கோப்புக்கு அவசியமாகும். எல்லோரும் புனிதர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. விசமிகளிடமிருந்து சமூகத்தைபாதுகாக்கும் அரண்களாக சட்டங்கள் அமைகின்றன.
அந்தவகையில்,பின்வரும் கட்டம் கட்டமான ஏற்பாடுகளின் இறுதியில் தான் தண்டணைகள் அமுலுக்குவரும்:-
01.மனப்பாங்கு மாற்றம்
02.நன்மைகள் வளர்வதற்கானஆரோக்கியமான,பாதுகாப்பான சூழல்
03.சமூகத்தின் ஒட்டு மொத்தமானவளர்ச்சி. (பொருளாதார சுபீட்சம், கல்வி அபிவிருத்தி,நாகரீக வளர்ச்சி என்பன)
04.பாவங்களது வாயில்கள்அடைக்கப்படுவது
இத்தகைய ஏற்பாடுகளுக்கு பின்னரும்கூட குற்றங்கள் நிகழ்ந்தால், அங்கு கட்டாயமாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் இஸ்லாமிய ஆட்சி இல்லாத போதும், உயர்ந்த பட்ச நிலையில் நல்லாட்சிநிலவுமாயின் தண்டனைகள் அர்த்தமுள்ளவையாக அமைய முடியும்.




