அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ)
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் அறிவு பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். வேகத்தோடு விவேகமும் வேண்டும். ஆங்கிலத்தில் கூறப்படுவது போல் SLOW BUT SURE (மெதுவாக நடக்கலாம்; ஆனால்,நடப்பது நிச்சயமாக இருக்கும்)
எமது சமூகத்துக்கு இன்று தேவைப்படுவது நன்கு திட்டமிடப்பட்ட STRATEGIC PLANS (மூலோபாயத் திட்டங்கள்) ஆகும். அவற்றை நிறைவேற்ற ஊக்கமும், திறமைகளும், சமூகப் பிரக்ஞையும், உளப்பூர்வமான தன்மையும், தியாக சிந்தையும் படைத்தவர்கள் முன்வரவேண்டும்; அறிக்கைகளை வெளியிடுவதுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் அதேநேரம் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
சமூகத்திலுள்ள கடும்போக்காளர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பது போலவே கடும்போக்காளர்கள் உருவாகாமல் இருப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுப்பதும் அவசியமாகும். அதற்கான சில பணிவான முன்மொழிவுகள் வருமாறு:
- இலங்கைக்குப் பொருத்தமான இஜ்திஹாத்:
இஸ்லாமிய கலாநிலையங்களில் – அதாவது, ஜாமிஆக்கள் மத்ரஸாக்களில் பிக்ஹுல் அகல்லியாத் (நவீன இஜ்திஹாதின் வெளிச்சத்தில் சிறுபான்மை நாட்டின் வாழ்வொழுங்கு) பற்றிய தனியான பாடத்திட்டம் மிகவுமே திறமையான விரிவுரையாளர்களால் கற்பிக்கப்படுவதோடு மாணவர்களுக்கு மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வை ஆழமாக ஏற்படுத்தப்படுவதற்கான விசேட விரிவுரைகள், கல்வி முகாம்கள், ஆய்வுமுயற்சிகள் நடாத்தப்பட வேண்டும். அத்துடன் ’பிக்ஹுல் மகாஸித்’ -(இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள்), ’பிக்ஹுல் மஆலாத்’ (இஸ்லாமிய செயற்பாடுகளது விளைவுகள் தொடர்பான ஆய்வுகள்) போன்றனவும் விரிவாக கற்பிக்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களது சிந்தனைப் பாங்கை நெறிப்படுத்தும் மத்திய நிலையங்களாக மத்ரஸாக்கள் மாற்றப்படுவது அவசியமாகும்.எத்தனை மத்ரஸாக்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் எத்தனை பட்ட்தாரிகளை அவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதே முக்கியமான அம்சமாகும்.
- இலங்கைக்குப் பொருத்தமான சீர்திருத்த ஒழுங்கு:
இலங்கை மண்ணுக்கு ஏற்ற சீர்திருத்த ஒழுங்கு, தஃவா வழிமுறை, மற்றும் மாற்றத்துக்கான உபாயங்கள் தொடர்பான விரிந்த ஆய்வுகளை உலமாக்களும் துறைசார்ந்த நிபுணர்களும் கூட்டாக இணைந்து மேற்கொள்வது காலத்தின் தேவையாகும் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எகிப்து, பாகிஸ்தான் போன்ற அறபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள், தனிமனிதர்கள், அமைப்புக்கள் என்பன சீர்திருத்தங்களுக்காகவும், சவால்களை எதிர்கொள்ளவும் ,கடைபிடிக்கும் வழிமுறைகளையும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரித்தானியா,அவுஸ்திரேலியா பொன்ற நாடுகளில் அவர்கள் தமது தனித்துவங்களையும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள கையாளும் திட்டங்களையும் நன்கு படித்து எமது மண்ணுகேற்ற திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மூளையிலும் இதயத்திலும் இஸ்லாம் இருக்க வேண்டும். ஆனால், கால்கள் இலங்கையில் இருப்பதை மறந்து விடாத – ’இலங்கைக்கான இஸ்லாம்’ ஆக அது அமைவது அவசியமாகும்.
- துறைசார்ந்தவர்கள் களப் பிரவேசம் செய்வது:
இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் அதிகமாக பிற சமூகங்களில் தங்கியும், சிதறுண்டும் வாழ்கிறார்கள். பிராந்திய, சர்வதேச அரசியல் சதுரங்க மேடையில் இடம் பெறும் காய் நகர்த்தல்களாலும் வெட்டுக் குத்துக்களாலும் பொதுவாக இலங்கை மக்கள் பகடைக் காய்களாக மாறும் போது, முஸ்லிம்களும் அதன் பாதிப்புக்களை அனுபவிக்காமல் இல்லை. அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாக்க மக்களுடைய மத, இன, மொழிப் பற்றுக்களை துரும்புகளாக பாவித்து வந்த மோசமான கலாசாரம் கொண்ட நாடு இது. எனவே, உரிமைப் போராட்டங்களின் போது சாணாக்கியமும், தூர நோக்கும் கொண்ட புத்தி ஜீவிகளது சேவையைத் தான் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.
துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளில் கணிசமான தொகையினர் ’தாமும் தம்பாடும்’ என்ற தோரணையில், தமது வருமான மூலங்களோடும், குடும்ப வட்டத்துக்குள் மட்டும் நின்று விடுகின்றனர்.சிலர் தாய் நாட்டு மக்களது துன்பங்களைக் கூட கண்டு கொள்ளாத வகையில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கூட இருக்கிறார்கள். சமூகத்துக்கு அவர்களால் கிடைக்க வேண்டிய பங்ளிப்பை அவர்கள் செய்யாது இருப்பதால் தான் நிலைமை மோசமடைந்திருக்கிறது.சமூகம் சந்திக்கும் அவலங்களுக்கு முகங்கொடுக்க உணர்ச்சிகளால் உந்தப்படும் பலர் முன்வந்து தமக்குச் சரியென்று படுபவற்றைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அந்நிலையில் இருந்து விலக வேண்டும் என சமூகம் எதிர்பார்த்தால் இந்த புத்தி ஜீவிகளை சமூகக் களத்துக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். புத்திஜீவிகளால் இந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டால் பொருத்தமற்றவர்களுக்கு இடமில்லாது போய்விடும். சூரியனைக் கண்ட பனித்துளியாக அவர்கள் மாறி மறைந்து விடுவார்கள்.
- பரம்பரை இடைவெளி (GENERATION GAP) என்ற பிரச்சினை
சமூகப் போராட்டங்களில் சம்பந்தப்படும் இளைஞர்கள் முக்கியமான உலமாக்களையும், சமூகத்தின் முன்னணி வகிப்பவர்களையும் வெறும் தத்துவம் பேசுவோராகவும் நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைகளில் மிதப்போராகவும். தமது உணர்வுகளைப் புரியும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் கருதுகிறார்கள். இந்நிலைக்கு தீர்வுகாண்பது எவ்வாறு?
முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை மூன்று சாரார்களாக பிரிக்கலாம்:
அ. முதலாவது சாரார், போதை வஸ்துப் பாவனை, துர்நடத்தைகள், சமூக விரோதச் செயல்கள் என்பவற்றோடு சம்பந்தப்பட்டு சீரழிந்து, கொண்டிருக்கிறார்கள். கல்வியிலோ சமூக விவகாரங்களிலோ அவர்களுக்கு அக்கறை இல்லை. புலன் இன்பங்களைத் தவிர வேறு எது பற்றியும் கவலைப்படாத சினிமாவிலிருந்து மட்டுமே வாழ்வின் இலக்குகள் பற்றி தெரிந்து வைத்துள்ள இவர்கள் மொத்த முஸ்லிம் இளைஞர்களில் கணிசமான தொகையினராக உள்ளனர். அவர்களுக்கு இந்த மார்க்கச் சண்டைகள் எல்லாம் வெகுதூரம். இவர்கள் குத்பாக்களுக்கு வந்தாலும் தூங்குவார்கள், அல்லது கதைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் போன்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் நூற்றுக்கு எழுபது வீதத்தினர் என்றாலும் அது மிகையாகாது.
ஆ. சுமார் இருபது சத வீதமானவர் மிதவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இளம் பரம்பரையினரை வழிநடாத்தும் காத்திரமான திட்டங்களை இந்த சில இயக்கங்கள் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்திட்டங்கள் இயக்கங்களது தொடர்பற்ற நிலையில் இருக்கும் 80% இளைஞர்களைச் சென்றடையவில்லை.
இ. மூன்றாம் பிரிவினர், சுமார் பத்து சத வீதமான இளைஞர்கள். இவர்கள் முதலாம் பிரிவினர் போன்று பாவங்களில் சம்பந்தப்படாதவர்கள்.ஆனால், இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள். அதேநேரம் மிதவாத இஸ்லாமிய இயக்கங்களில் இணைந்து கொள்ளாதவர்கள். கட்டுக்கடங்காத பீரிட்டுப் பாயும் இஸ்லாமிய வேகத்தால் அள்ளுண்டு போய் சமூக வலைத்தளங்களில் பிறசமூகங்களிலுள்ள தீவிரவாதிகளையும் அவர்களது செயற்பாடுகளையும் ’கன்னா பின்னா’ என்று மட்டரகமான சொற்களால் விமர்சித்து சமூகத்துக்கே ஏச்சுவாங்கிக் கொடுக்கிறார்கள். ‘வன்முறைகளுக்கு வன்முறைகளே’ பதிலடி என்று சிந்திப்பவர்கள். இவர்கள் கடும் போக்குக் கொண்டவர்கள்.
இளைஞர்கள் பற்றிய இந்தப் புரிதல் அவர்களை வழி நடாத்துகின்றவர்களுக்குத் தேவை. ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு வகையான வழிகாட்டல்கள் தேவைப்படலாம். எனவே, ’பரம்பரை இடைவெளி’ யை நீக்குவதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
- அரசியல்வாதிகளது பொறுப்பு
சமூகத்தின் பிரச்சினைகளை மிகச்சரியாக பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டும். துல்லியமான புள்ளிவிபரங்கள், தரவுகளைக் கொண்டதாகவே அவர்களது உரைகளும், விவாதங்களும் அமைதல் அவசியமாகும்.அவர்களால் அவற்றைத் தயாரித்துக் கொள்ள முடியாத போது துறைசார்ந்தவர்களது உதவியை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடும் போது REACTION அதாவது, நடந்து முடிந்துள்ள, நடந்து கொண்டு இருக்கும் சேதங்களில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும் வேண்டும் அதே நேரம் PROACTIVE அதாவது, வருமுன் காக்கும் நீண்ட காலத்திட்டங்களை வகுக்கவும் வேண்டும். நாம் காலாகாலமாக சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் தீர்வுகளைக் காண முயட்சிக்கிறோமே தவிர சமூகத்தை கட்டிக்காப்பதற்கான பாதுகாப்பு அறண்களை நிர்மாணிப்பதற்கும் உறுதியான அஸ்திவாரங்களை அமைப்பதற்கும் முயற்சிப்பது குறைவாகும்.
எனவே, முஸ்லிம் சமூகத்தில் கடும்போக்கும், தீவிரவாதமும் நிலவுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டுமே தவிர விமர்சனங்களை மாத்திரம் செய்வதால் பயனேதும் விளையப்போவதில்லை, விமர்சனங்களும் ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், அன்பு கலந்ததாகவும் அமையவேண்டும். வெறும் விமர்சனங்கள் சமூகத்தை மென்மேலும் பிளவு படுத்தும்.
இலங்கைக்குப் பொருத்தமான ’இஜ்திஹாத்’ ஒன்றைக் கட்டியெழுப்புவதும் இலங்கைக்குப் பொருத்தமான சீர்திருத்த ஒழுங்கொன்றைப் பற்றி யோசிப்பதும், துறைசார்ந்தவர்கள் களப் பிரவேசம் செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதும், பரம்பரை இடைவெளியைக் குறைக்க தீவிர முயற்சி எடுப்பதும் அரசியல்வாதிகள் தமது அமானத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதும் காலத்தின் தேவையாகும் என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.அப்போது தான் எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கவும் சரியான வாழ்வொழுங்கைப் பேணவும் முடியும்.
எல்லா மூலோபாயத் திட்டங்களதும் அடிப்படையாக அமைவது எமது ஆன்மீகப் பகுதியாகும். அல்லாஹ்வுக்கும் எமக்கும் இடையிலான தொடர்பை மிகப் பலமாக அமைத்துக் கொள்வது அதி முக்கியதுவமான அம்சமாகும். ஆழமான ஈமான், அல்லாஹ்வின் மீதான தவக்குல்,இக்லாஸ்,திலாவதுல் குர்ஆன், திக்ர், அவ்ராதுகள், தொழுகை, நோன்பு என்பன எமக்கு பலத்தையும், வெற்றியையும் நிச்சயமாகக் கொண்டுவரும்.
மேலும், எமது பண்பாடுகளை இஸ்லாம் கூறும் விதத்தில் அமைத்துக் கொள்வதும் எமது மிக முக்கியமான பலம்களில் ஒன்றாகும்.அறிவு ரீதியாக எம்மைப் பலப்படுத்துவதும் எமக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும் எமது பலவீனங்களுக்கான பரிகாரமாகவும் நாம் தலை நிமிர்ந்து சுயமரியாதையோடு வாழ்வதற்கான வழிமுறையாகவும். அமையும்.
அல்லாஹ்வின் தீனைப் பாதுகாக்க எம்மாலான முயற்சிகளில் ஈடுபடுவோமாக. அவன் எமக்கு அருள்பாலிப்பானாக!




