சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமீ) அவர்கள்

25.11.2016 அன்று,

கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில்

“சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்”

எனும் தலைப்பில் நிகழ்த்திய ஜுமுஆ குத்பாவில் உள்ளடங்கியிருந்த முக்கிய குறிப்புக்கள்:

1.சர்வதேச மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2.முஸ்லிம்கள் இஸ்லாத்தை உரிய முறையில் கடைப்பிடித்து ஒழுகும் போதும் இது போன்ற சோதனைகளை எதிர்நோக்க வேண்டிவரும்.அது அல்லாஹ் விதித்த நியதியாகும். தற்காலத்தில் இஸ்லாமிய எழுச்சியொன்றை பரவலாக அவதானிக்க முடிகிறது. இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது. இது முஸ்லிம் அல்லாத பலரது பொறாமையத் தூண்டியுள்ளது. எனவே, அவற்களிற் பலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். இப்படியான தவிர்க்க முடியாத நிலைமைகள் கண்டிப்பாக ஏற்படும் என அல்லாஹ் குர்ஆனில் ஏற்கனவே கூறியிருக்கிறான்:

‘நீங்கள் உங்களது சொத்துக்கள், உயிர்கள் விடயத்தில் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடமிருந்தும் இணை வைத்தவர்களிடமிருந்தும் நிச்சயமாக மனதுக்கு அதிகம் கவலை தரும் தகவல்களை செவியேற்க நேரிடும்.” (ஆலஇம்ரான்:186)

3.சோதனைகள் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது, திக்ர், இஸ்திக்பார், அல்லாஹ்விடம் உதவிதேடுவது, தொழுகை, நோன்பு என்பவற்றில் நாம் ஈடுபட்டு அல்லாஹ்வுடனான உறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.

# “ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!” (40:55)

# “நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி எந்த ஆதாரமுமின்றி தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால்,அதை அவர்கள் அடையவும்மாட்டார்கள்;. ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.” (40:56)

4.தற்போதைய சூழ்நிலை உருவாகுவதற்கு எமது பக்கத் தவறுகள் பல காரணமாக அமைந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. அவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும். அவற்றிற் சில:

அ. கல்வித் துறையில் முஸ்லிம்கள் வெகுவாகப் பின்னடைந்திருப்பது: இது அவர்கள் பிறரது சதிகளில் சிக்குவதற்கான பிரதான காரணமாகும். நாம் கெளரவமான, மதிப்பு மிக்க சமூகமாக மாற வேண்டுமாயின் ஈமானோடு இணைந்த அறிவு அவசியமாகும்.

“உங்களுக்கு மத்தியில் உள்ள ஈமான் கொண்டவர்களுடைய மற்றும் அறிவு கொடுக்கப்பட்டவர்களுடைய அந்தஸ்த்துக்களை அல்லாஹ் உயர்த்துவான்.” (முஜாதலா-11). நீண்ட காலத்துக்கான மூலோபாயத் திட்டங்களை (Strategic Plane) நாம் வகுத்து செயற்படாதிருப்பதற்குக் கூட கல்வித் துறைப் பின்னடைவும் மிக முக்கிய காரணமாகும். உணர்சிகளுக்கு அடிமைபடுவது அறிவுப் பற்றாக் குறையின் அடையாளமாகும்.

ஆ. ஒற்றுமையின்மை: அதாவது முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பிளவுபட்டு, சச்சரவுபட்டுக் கொண்டிருப்பதால் சவால்களை தைரியமாக எதில்கொள்ள முடிவதில்லை. சதிகளுக்கு முன்னால் துவண்டு போய்விடுகிறோம். ஐக்கியமின்மை தோல்வியையும் அகெளரவத்தையும் தோற்றுவிக்கும். இதனை அல்லாஹ்:

# ”நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடவுங்கள். மேலும் உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறான ஒரு நிலைக்கு நீங்கள் போய்விட்டால் நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். அத்துடன் உங்கள் வலிமையும் குன்றிவிடும். ஆகவே, பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்.” (அல்குர்ஆன் – 8:46) எனவே, எமக்கு மத்தியிலான எமது பிளவுகள் வீழ்ச்சிக்கான மற்றுமொரு பிரதானமான காரணமாகும்.

இ. பண்பாட்டுத்துறையில் வீழ்ச்சி: இது எம்மை மேன்மேலும் பலவீனப்படுதியுள்ளது.முஸ்லிம் சிறுபான்மை நாடாகிய இலங்கையில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இஸ்லாமிய பிரசாரத்துக்குமான சிறந்த சாதனமாக பண்பாடுகள் இருக்கும் போது நாம் அத்துறையில் பின்தங்கியிருக்கிறோம். வாகனங்களை பொருத்தமற்ற இடங்களில் நிறுத்துவது, பள்ளிவாயல்களது ஒலிபெருக்கிகளை பிறருக்குத் தொந்தரவாகப் பயன்படுத்துவது, பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயனிக்கும் போது அருகில் இருப்பவருக்கு ஆத்திரம் வரும் வகையில் தொலைபேசியில் உரையாடுவது என்பன சகவாழ்வுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளன.

காரியாலயங்களில் கடமைபுரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமக்கான சம்பளத்தை ஹலாலாகவே எடுக்க வேண்டும். தாம் வேலை செய்யும் இடத்துக்கு விசுவாசமாக நடப்பது, நேரத்துக்கு சமுகமளிப்பது, ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறவேற்றுவது என்பன ஒருவகையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிரப்பமான நன்மையைப் பெற்றுத்தரும். அதனை விட மேலாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லபிமானத்தை பிற சமயத்தவர்களது மனங்களில் அது தோற்றுவிக்கும். முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குப் பாரமானவர்களாக இல்லை. ஆனால், தேவையானவர்கள்,அவர்கள் இன்றி இந்த நாட்டில் பிற சமயத்தவர்களுக்குக் கூட வாழுவது கஷ்டமாக இருக்கும் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் குறிப்பாக மக்காக் காலப்பிரிவில் பண்பாட்டு விழுமியங்களை மூலதனமாகக் கொண்டே தனது பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அன்னார் வஹியின் முதலாவது வசனங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த போது கதீஜா நாயகி அவர்கள் அன்னாருக்கு சொன்ன ஆறுதல் வார்த்தைகள் இதனையே காட்டுகின்றன:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

இது தான் சிறுபான்மை நாட்டில் வாழும் எமக்கான முன்மாதிரியாகும். முதலில் உள்ளங்களை வெல்லுவதற்கான முயற்சிகள் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

ஆயுதத்தை அல்லது பணத்தைக் காட்டியோ ஆட்சியைத் தருவதாக ஆசைகாட்டியோ நபிகளார்(ஸல்) அவர்கள் பிரசாரம் செய்யவில்லை. ’நம்பிக்கை நாணயமானவர்’ ,’உண்மை உரைப்பவர்’ என்ற பட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

  1. தொந்தரவு செய்யாமல் ஆனால், பிறருக்கு உதவிகள் செய்து வாழ்வது:

மற்றவர்களுக்கு ஒரு முஸ்லிம் தொந்தரவாக இருக்கமாட்டான்.மாறாக இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப (Nation Building) அவன் முயற்சிகளை எடுப்பான். இந்த நாட்டில் வாழ்ந்த எமது முஸ்லிம் மூதாதையர்கள் இந்த நாட்டுக்கு பங்களிப்புச் செய்து வாழ்ந்ததால் மிகுந்த கண்ணியத்தோடும் மதிப்போடும் வாழ்ந்தார்கள். ’தவளம’ எனப்படும் வியாபார முறை மூலம் பொருளாதரத் துறையை வளர்த்தார்கள். ’மடிகே’ நிலங்கள் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.அரசர்களது வைத்தியர்களாக, சமையல் ஊழியர்களாக அவர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்.முஸ்லிம் சமுகத்துக்காக என்று மட்டும் அவர்கள் பாடுபடாமல் தேச நலனில் அக்கறை எடுத்ததால் அரசியலில் உயர் பதவிகள் அவர்களைத் தேடி வந்தன.கிட்டிய அண்மைக் காலத்திற் கூட இதற்கான ஆதாரங்களைக் கண்டு கொள்ள முடியும்.

  1. உரிமைகளுக்கான போரட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அறிவுபூர்வமாகவும், சாத்வீக முறையிலும் அமைதல் அவசியமாகும். உணர்சிகளுக்கு அடிமைகளாக நாம் மறிவிடலாகாது.
  2. நாம் இந்த நாட்டிலுள்ள பிற சமயங்களைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த மத குருக்கள், உயர்கல்வித் தகைமைகளப் பெற்றவர்கள்,சமூகத்தின் முக்கியஸ்தர்கள் துறை சார் நிபுணர்கள் போன்றோருடன் நற்புறவு கொண்டு வாழ வேண்டும்.அவர்களது ஒத்துழைப்புக்களை தேவையான போது பெற்றுக் கொள்ள வேண்டும். முத்இம் இப்னு அதீ,அபூதாலிப் போன்றவர்கள் இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் மிகவுமே உதவி தேவைப்பட்ட போது அவ்வாறான உதவிகளைச் செய்திருக்கிறார்கள். https://www.facebook.com/shmfaleel/posts/1423105831034640
  3. தங்கி வாழ்வதால் ஒதுங்கி வாழக்கூடாது.

நாம் பிற சமூகங்களில் தங்கி வாழும் நிலை இருப்பதால் அவர்களைப் பகைத்துக்கொண்டோ அவர்களில் இருந்து தூரமாகியோ வாழ முடியாது.அரபு முஸ்லிம் நாடுகளது உதவியும் உறவும் இல்லாமல் இலங்கைக்கு இருக்க முடியாது. வெளிநாட்டுச் செலாவணியில் 47% ஆன் வருமானம் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கிறது. அதிலும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தான் கணிசமான தொகை இலங்கையர்கள் வேலைசெய்கிறார்கள். இவர்களால் இலங்கைக்குக் கிடைக்கும் வருட வருமானம் 1000 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாகும். எனவே, அரபு, இஸ்லாமிய நாடுகளைப் பகைத்துக் கொண்டு இலங்கை நாடு இருக்க முடியாது.

அதேபோல், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரது ஒத்தாசை இல்லாமல்,தொடர்பில்லாமல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு வாழமுடியாது.ஒர் இனத்தின் தொடர்பின்றி மற்றோர் இனம் வழுவது சாத்தியமில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும் .எனவே,சமாதான சகவாழ்வுக்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

  1. பதிலளிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள்:

முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அறிவுபூர்வமான பதில்களை வழங்க புத்திஜீவிகள், தொடர்பு சாதனத் துறைகளில் இருப்பவர்கள், உலமாக்கள் போன்றோர் முன்வர வேண்டும்.முஸ்லிம் சமூகம் அநாதரவாக இருக்கும் போது இவர்கள் தாமும் தமது தொழில்களும் குடும்பங்களும் என்று சுயநலத்தோடு இருந்து விடாமல் தமது பங்களிப்பை சமூகத்தின் விடிவுக்காக வழங்க முன்வருவது காலத்தின் தேவையாகும்.

அல்லாஹ் மறுமை நாளில் இது பற்றிய வினாக்களைத் தொடுக்க இருக்கிறான். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன். அந்த வகையில், எம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதங்களை உரிய முறையில் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top