பின்வருவன அண்மைக்கால செய்திகள்:
-மனைவியைக் கொன்ற கணவன்.
-கணவனைக் கொன்ற மனைவி.
-இரண்டு நாள் சிசுவை வயலில் வீசிச் சென்ற தாய்?.
-பல பெண்களுடன் தொடர்புள்ள மதத் தலைவர்.
-பாடசாலையில் கற்கும் காலத்தில் கற்பமடைதல்.
-நாளாந்தம் அதிக விவாகரத்துக்கள் பதிவு
-வீட்டு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரிப்பு.
இவை ஒவ்வொன்றும் உள்ளார்ந்த வகையில் எரிந்து கொண்டிருக்கும் ஆழமான பிரச்சினையொன்றின் வெளிப்பாடுகள் தான்.
இந்தப் பிரச்சினைகளது பின்னணி, பின்புலம், காரணங்களை நாம் ஆராய வேண்டும்.
இந்த அவலங்கள் நடந்து முடிந்த பின்னர் கவலைப்படுவது மனித இயல்பு தான். ஆனால் இவற்றை கேள்விப்பட்டவுடன் ஒவ்வொருவரது மனங்களிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் தோன்றுகின்றன:-
- குற்றத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை அல்லது ஆணை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பர் சிலர்.கொல்லுங்கள் என்று கூட சொல்வர்.
- சட்டங்கள் போதாதாது. அவை இருந்தாலும் அவற்றின் அமுலாக்கலில் பிழைகள் இருப்பதால் குற்றங்கள் குறையவில்லை என்பர் வேறு சிலர்.
- அந்த குற்றவாளியின் மதத் தலைவர்கள் நல்ல ஆன்மீகப் பக்குவங்களை வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறுவர் மற்றும் சிலர்.
- மீடியாக்களும் வீட்டு சூழலும் ஒழுங்காக இல்லை என்பதே காரணம் என புலம்புவர் சிலர்.
- பாதிக்கப்பட்டவர்களை நினைத்து அனுதாபப்பட்டு கவலைப்படுவதுடன் சிலர் நிறுத்த வேறு சிலரோ கண்ணீர் விட்டு அழுவார்கள். உதாரணமாக தாய் கொல்லப்ப்படட்டிருந்தால் அவளது பச்சிளம் குழந்தைகளது எதிர்காலம் எப்படி அமையுமோ என பெரிய அளவில் மனவருத்தப்படுவார்கள்.
இவ்வாறு இன்னும் பலவாறான எதிர்வினைகளை மக்கள் ஆற்றுவார்கள்.
ஆனால் உக்கிரமான சம்பவமொன்று நடந்து முடிந்து ஓரிரு நாட்களில் எல்லாம் எல்லோருக்கும் மறந்து விடும். மீண்டும் அதுபோல ஒரு நிகழ்வு நடந்தால் மீண்டும் பேசுவார்கள் கவலைப்படுவார். இப்படியே வாழ்கை ஓடும்.
ஆனால் பொது மக்களுக்கு காரணங்களோ தீர்வுகளோ பெரும்பாலும் தெரியாது. முடிவுகளை எடுக்கும் தைரியமும் அவகாசங்களும் இருக்காது.
அப்படியானால் யார் இதற்கு பொறுப்பு?
சமூகத்தின் தலைமைத்துவப் பொறுப்புக்களை வகிப்போர், கொள்கைகளை வகுப்போர், செல்வாக்கு மிக்கவர்கள் இவர்கள் தான் இந்த நிலை பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். இறைவன் இது பற்றி மறுமையில் கேள்வி கேட்பான் என்று அவர்கள் நம்பி மிகுந்த பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்.
குற்றங்கள், அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள், அவற்றிற்கான பின்புலம்கள், அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள், இடம்பெறாமல் இருப்பதற்க்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியெல்லாம் ஆழமாக அவர்கள் முதலில் சிந்தித்து செயலில் இறங்க வேண்டும். இவர்களது பொடுபோக்கின் காரணமாகத் தான் குற்றங்கள் நிகழுகின்றன.
இந்த குற்றங்கள் பற்றிய பரந்துபட்ட பார்வை அவசியம்.
மனிதனது மிகப் பலமான உணர்வுகளில் பாலுணர்வு அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அது மிகக் கவனமாகக் கையாளப்படாத போது வேறு எந்த உணர்வு ஏற்படுத்தாத மிகப் பயங்கரமான பாதிப்புக்கள் வாழ்வின் பல கூறுகளிலும் ஏற்படும்.
மனிதனுக்கு அல்லாஹ் பாலுணர்வையும் அதனை தீர்த்துக் கொள்வதற்கான உறுப்புக்களை வழங்கி
அத்துடன் அந்த உணர்வின் தன்மை பற்றி கூறியதுடன் அது உலக வாழ்வின் அருள்களில் ஒன்றாக இருப்பதாகவும் சோதனைகளில் ஒன்று என்றும் அதனை அமானிதமாக, கவனமாக அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறான்.
மேலும் பாலுணர்வைத் தீர்க்கொள்வது அனுமதிக்கப்பட்டது மட்டுமன்றி ஊக்கிவிக்கப்பட்டுள்ளது. அதனை அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பிரயோகிப்பது ஓர் இபாதத் என்ற கருத்தை நபி (ஸல்) கூறினார்கள்.
மனிதன் இவ்வுலகிற்கு சுமந்து வந்துள்ள கிலாபத் என்ற பாரிய பணியின் பிரதான அங்கமாக அது உள்ளது. எனவே அது தொடர்பான சட்டதிட்டங்களை இஸ்லாமிய வாழ்வொழுங்கில் கணிசமான அளவில் காண முடியும்.
எனது உடலுக்கும் எனது உறுப்புக்களுக்கும் எனது இச்சைகளுக்கும் நானே சொந்தக்காரன் என்ற தோரணையில் யாரும் அந்த உணர்வைப் பயன்படுத்த முடியாது.அது எப்படி, எந்த அளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அல்லாஹ் விசாரிப்பான். பாலியல் நடவடிக்கையுடன் சம்பந்தப்படும் உள்ளமும் உணர்வும் ஒவ்வோர் உறுப்பும் மறுமையில் மிக நுணுக்கமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படும்.
இப்படி சிந்திக்கும் ஓர் உண்மையான விசுவாசி எப்போதும் சபல எண்ணங்களை தவிர்ப்பான்; ஷைத்தானின் வலைகளில் விழமாட்டான்.எப்போதும் ‘முராகபா’ எனப்படும் விழிப்பு நிலை அவனிடம் இருக்கும்.
மாறாக அல்லாஹ்வை அவனது கண்காணிப்பு உள்ளது என்பதை நம்பாத உலக வாழ்வின் யதார்த்தம் பற்றிய தெளிவில்லாத மனிதன் , உடலிச்சைசையை எந்த வழியிலாவது தீர்த்துக் கொள்ள முயலுபவனுக்கும் மிருகத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்க முடியாது.
திருமணம் என்ற அழகான வடிகால்
திருமணம் என்ற இணைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் குடும்ப நிறுவனம் அல்லாஹ்வின் அற்புதமான சமூகக் கட்டமைப்பாகும்.அல்லாஹ் இருக்கக்கிறான் என்பதற்கான அத்தாட்சியாக அது உள்ளது.அது தரும் பயன்களைகளையும் பாக்கியங்களையும் எண்ணிக் கணக்கிட முடியாது.அதன் முக்கியத்தை இஸ்லாம் பல வழிகளிலும் வலியுறுத்தியுள்ளது. அதனை புனிதமான அடிப்படைகளில் நிறுவவுவதற்கான சிறந்த ஒழுங்குகளை வகுத்துள்ளது. மட்டுமன்றி அதனை மிகக் கவனமாகப் பாதுகாப்பதற்கான எல்லா பாதுகாப்பு அறன்களையும் அது இட்டுள்ளது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பகுதி 2
-பாலுணர்வை நெறிப்படுத்த குடும்ப நிறுவனத்தை பாதுகாக்க இஸ்லாமிய ஏற்பாடுகள்




