காளி நீதிமன்ற நடைமுறைகளில் அவதானிக்கப்படும் சில பிரச்சினைகளை சமூகத்துக்கு வெளிச்சப்படுத்தும் நோக்கில் தற்காலத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களது விவகாரங்களை சமூகமயப்படுத்தும் நோக்குடன் அண்மையில் குறுந் திரைப்படம் ஒன்று கூட தயாரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பின்வரும் அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1. முஸ்லிம் சமூகத்தில் குடும்பப் பிரச்சினைகள் உள்ளன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மறைந்துள்ள பிரச்சினைகள் அதிகமான உள்ளன. அவற்றை கட்டாயமாக இனம் காண வேண்டும். அத்துடன் நிற்காது அவற்றிற்கான காரணங்கள் யாவை என்பது தேடப்பட வேண்டுவதுடன் காத்திரமான தீர்வுகளும் முன்வைக்கப்பட வேண்டும். வெறுமனே கருத்துக்களை முன்வைப்பவர்களாக மட்டும் எவரும் இருக்காமல் தியாகத்தோடு செயலில் இறங்கவும் வேண்டும்.
2. முஸ்லிம் அல்லாத சமூகங்களில் உள்ள குடும்பப் பிரச்சினைகளை இனம்காண இதே அக்கறையும் ஊக்கமும் இதே அளவில் காட்டப்பட வேண்டும்.இல்லாத போது அது ஓரவஞ்சனையாக, காழ்ப்புணர்ச்சியாக இருக்கும்.
3. ஏனைய சமூகங்களில் இப்பிரச்சினைகள் இருப்பதாயின் அவற்றிற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு திட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும்.
4. சர்வதேச ரீதியாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்து சிந்தனா ரீதியான யுத்த மொன்று நடைபெறுகிறது. அந்த யுத்த முனையில் இருப்போர் இதய சுத்தியோடு அல்லாமல் வஞ்சக எண்ணத்தோடு திட்டமிட்டு செயல்படுவது யாவரும் அறிந்ததே. அதன் ஓர் அங்கமாக இஸ்லாமிய சமூக அமைப்பின் குடும்ப அலகை தகர்த்தெறிந்து அங்கு ஒருபாலுறவு,விபசாரம் போன்ற முறைகேடுகளை மாற்றீடு செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அது விடயமாக யாவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
5. தற்போதுள்ள காளி நீதிமன்றங்களது சில நடைமுறைகள் திட்டவட்டமான சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல. கால சூழல் மாற்றமடைவதற்கெற்ப அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
6. காளியாக பெண் இருக்க முடியுமா இல்லையா என்ற விடயத்தில் கருத்து பேதமுண்டு. ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது பிரச்சினைகளை காளியிடம் தெளிவாக முறையிடுவதில் சங்கடங்கள் இருப்பின் பெண் ஜூரீக்களை அணுகி தனது முறைப்பாட்டை முன்வைக்க தாராளமாக அனுமதியுண்டு.
7. கணவன், மனைவிக்கிடையில் தகராறு உருவாகினால் அவற்றை தீர்த்து வைக்க படிமுறையாக பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய அணுகுமுறையாகும். அவை எதுவும் பலனளிக்காத போது தவிர்க்க முடியாத, நிர்ப்பந்தமான கட்டத்தில் மட்டுமே நீதிமன்றத்தை ஒரு பெண்/ஆண் அணுக வேண்டும் என இஸ்லாமிய சட்ட ஒழுங்கு கூறுகிறது.
இஸ்லாமிய குடும்ப வாழ்வின் அடிப்படைகள்:-
1. இஸ்லாமிய குடும்ப வாழ்வை முழுமையான சமூக அமைப்பின் ஓர் அங்கமாகவே இஸ்லாம் அமைக்கிறது. எனவே, குடும்ப அலகை மாத்திரம் தனியாக பிரித்து நோக்க முடியாது. அடிப்படையில் முஸ்லிம் சமூகமானது வளமான அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும். அது சீராக, ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும். அதன் சீரான இயக்கம் குடும்ப வாழ்வில் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
2. திருமணம் முடிப்பதற்கு முன்னர் சதிபதிகளை தெரிவு செய்யும் விடயத்தில் அடிப்படையில் ஈமானிய விழுமியங்களும் பண்பாடுகளும் அறிவுப் பின்புலமும் நிபந்தனைகளாக கவனிக்கப்படும்.
3. திருமணத்துக்கு முன்னரான வழிகாட்டல்களும் ஒழுங்கு முறைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும்.
4. திருமணத்தின் பின்னர் குடும்ப வாழ்வானது ஈமான்,இறையச்சம்,அன்பு, பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அமையும். மனித வாழ்வு அல்லாஹ்வின் முன்னிலையில் பதிலளிக்கப்பட வேண்டியது என்ற உணர்வு குடும்ப வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கட்டத்திலும் இழையோடியிருக்கும்.
5. கணவன், மனைவிக்கு இடையிலான உரிமைகள்- கடமைகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு அவை உரிய முறையில் அமுலாகுவதற்கான, உளரீதியான, சமூக ரீதியான உத்தரவாதங்கள் இருக்கும்.
6. இவை அனைத்தும் இருந்தும் கூட மனக்கசப்பு, தகராறுகள் தம்பதிகளுக்கு இடையில் உருவாகலாம்.
அப்போது பின்வரும் ஒழுங்குகள் மூலம் கையாளப்படும்:-
அ. கணவனும் மனைவியும் ஈமான், இறையச்சம், கூட்டுப் பொறுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றின் அடிப்படையில் அவற்றை தமது மட்டத்தில் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்காக அவர்கள் உளவியல் ஆலோசனையைக் கூட பெற முடியும்.
ஆ. கணவனது புறத்திலிருந்து ஒருவரும் மனைவியின் புறத்திலிருந்து ஒருவரும் இதற்காக நீதிபதிகளாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குர்ஆனிய கட்டளையாகும். அவ்விருவரும் இந்த விவகாரத்தை மிகக் கவனமாக ஆய்வு செய்து, சிறப்பான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்து இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும்.
இ. ஊரில் உள்ள பள்ளிவாயில்கள், சங்கங்கள் போன்ற அமைப்புகள் இணைந்து ‘சமாதானப் பேரவை’ ஒன்றின் மூலம் இவ்விடயத்தை இரகசியமாகக் கையாள வேண்டும்.
ஈ. இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத போது அடுத்த கட்டமாக, முழுக்க முழுக்க இஸ்லாமிய ஒழுங்குகளையும் நெறிமுறைகளையும் கொண்ட காளி நீதிமன்றத்தை இருவரும் அணுக வேண்டும். அங்கு இப்பிரச்சினை இன்னும் ஆழமாக ஆராயப்பட்டு பொருத்தமான தீர்வுகள் வழங்கப்படும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பொதுச் சட்டத்தின் கீழ் குடும்பத்தகராறுகள் கையாளப்படும் முறையில் உள்ள குறைபாடுகளை பின்வரும் ஆக்கம் தெளிவு படுத்துகிறது.
In Sri Lanka, divorce in any age group is statistically very rare, being just 0.15 per 1000 people. However, this is not because there is no felt need for divorce but because the law makes divorce very difficult. The Civil Code says that a husband or wife can petition for divorce two years after a decree of judicial separation or after seven years after separation.
In their paper entitled From Vows to Divorce Papers: Understanding Sri Lanka’s Marriage and Divorce Landscape, Kelaniya University scholars Geethani Amaratunga and Waruni Wickramarachchi, say that 300 to 400 divorce cases are filed per day, but only a very few (just 9 couples) manage to navigate the intricate process of divorce successfully each day.
Reasearchers Amartunga and Wickremarachchi warn that the difficulty of obtaining a divorce in Sri Lanka may leave individuals trapped in unhappy or even abusive relationships. This can take a toll on their well-being and limit their potential for personal growth.
முஸ்லிம் குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகள், காளி நீதிமன்றங்களில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாக இதுவரை துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பாலும் ஆங்காங்கே பேசப்படும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
அதேபோன்று காலத்திற்கு காலம் மாறி வந்த அரசாங்கங்கள் முஸ்லிம்களிடமிருந்து ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஆவணத்தை எதிர்பார்த்து வந்திருக்கின்றன. ஆனால் எமக்கிடையில் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருப்பதினால் MMDA ல் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக காத்திரமான, ஒருமைப்பட்ட ஆவணத்தை தயாரித்து வழங்க முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது.
எனவே அரசாங்கங்களை குறை கூற முன்னர் முதலில் எம்மை நாமே குறை கூறிக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது.
அல்லாஹ்வின் அருளால் இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்ட உரிமையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்.




