அஷ்ஷைக் பளீல் (நளீமி)
பள்ளி நிர்வாகம், ஸகாத் கமிட்டி, இளைஞர் சேவை, சமூக சேவை அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க பொதுவாக சமூகத்தில் உள்ள பலர் முன்வருவதில்லை.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
1. அப்பொறுப்புகளை வகிப்பதற்கான தகுதிகள் தமக்கு இல்லை என்று அவர்கள் நினைப்பது.
2. அப்பொறுப்புகளை வகிப்பதற்கு தமக்கு நேர காலம் போதாது என்று நினைப்பது.
3. பொறுப்புக்களை வகிக்கும் பொழுது வருகின்ற விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருப்பது. அதாவது ‘நமக்கு ஏன் வீண்வம்பு?’, ‘நாமும் நமது பாடும்’ என்று இருப்போம் என்று நினைப்பது.
4. அப்பொறுப்புகளை அவர்கள் வகிப்பதற்கு அவர்களது மனைவி அல்லது பிள்ளைகள் அல்லது உறவினர்கள் விருப்பமின்மை.
இதுபோன்ற இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துக்கும் அப்பால் இந்த பொறுப்புக்களை இஸ்லாமிய நோக்கில் நாம் பார்க்க வேண்டும்.
ஒரு மனிதன் இவ்வுலகில் பலவகையான கடமைகளை சுமந்திருக்கின்றான். அவற்றை நான்காக பிரிக்க முடியும்.
1. தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (ஆத்மீக, அறிவு, உடல் ரீதியாக தன்னை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்வது)
2. தன்னை நம்பி இருக்கும் மனைவி, மக்கள், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (அவர்களுக்கான ஆன்மீக, உடலியல், அறிவியல், பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது)
3. தான் பொறுப்பெடுத்திருக்கும் தொழிலுக்கு செய்ய வேண்டிய கடமை (தான் சுயமாக செய்கின்ற தொழிலுக்கு நேரம் ஒதுக்குவது அல்லது சம்பளத்துக்காக செய்யும் தொழிலுக்காக நேரம் ஒதுக்குவது)
4. தான் மனித சமுதாயத்தின் உறுப்பினன் என்ற வகையில் அவன் தன் மீது சுமத்திக் கொள்ள வேண்டிய கடமைகள்.
மேற்கு கூறப்பட்டவற்றில் நான்காவது பகுதியைப் பற்றியே நாம் இங்கு பேசுகின்றோம்.
சமூகப் பொறுப்புக்கள் ஒரு முஃமினை பொறுத்தவரையில், பொதுவாக தன்னைச் சூழவுள்ள சூழலுக்கும்,மனித சமுதாயத்திற்கும் குறிப்பாக தான் சார்ந்திருக்கின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கும் அவன் ஆற்ற வேண்டிய பல கடமைகள் இருக்கின்றன.
1. உலக நியதியின் படி மக்கள் இயல்பாக பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். அவ்வேளை அவற்றிலிருந்து அவர்களை கட்டாயமாகத் தடுக்க வேண்டும். அதேபோலவே, அவர்கள் நன்மைகளை அல்லது கடமைகளைச் செய்யாமல் இருப்பார்கள். அதன்போது அவர்களை அவற்றின் பால் தூண்ட வேண்டும்.
எனவே, ஒரு முஃமின் தானும் தன் பாடும் என்று இருக்க முடியாது. தீமைகளைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாது. நரகத்திற்கு போவதற்கான செயல்களில் இருந்து தான் மாத்திரம் தவிர்ந்து கொண்டால் போதாது. சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதற்கும் அல்லாஹ்வுடன் அனைவரையும் நெருங்கச் செய்வதற்கும் ஷைத்தானிடமிருந்து தூரமாக்குவதற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்குத் தான் ‘தஃவாப் பணி’ அல்லது ‘சமூகப்பணி’ என்று கூறப்படும். இப்பணி ‘வாஜிப்’ அல்லது ‘பர்ளு’ ஆகும்.
2. அல்குர்ஆனில் அல்லாஹ்வும் நபியவர்களும் பல சந்தர்ப்பங்களில் இதன் முக்கியத்துவத்தை, அவசியத் தன்மையைப் பற்றி வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். உலகில் வந்த நபிமார்கள் அனைவரும் எத்திவைத்தல்- ‘தப்லீக்’ என்ற பண்பைக் கொண்டிருந்ததுடன் தீமைகளுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார்கள். நன்மைகளை ஸ்தாபிப்பது தான் அவர்களது வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது.
‘கைர உம்மத்’ (சிறந்த சமூகம்) என்று முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் அல்குர்ஆனில் பெயர் சூட்டினான்.(3:110) அதற்கு காரணம், அச்சமூகத்தவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பது தான் என்றும் குறிப்பிடுகிறான். எனவே, இப்பணியில் ஈடுபடாத சமூகம் சிறந்த சமூகம் அல்ல. அப்படியாயின் ‘மோசமான சமூகம்’ என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
3. “மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். “(3:104)
இந்த வகையில் சமூகப் பணியில் ஈடுபடுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களாவர். ஏனையோர் தோல்வி கண்டவர்கள் ஆவர் என்பதே பொருளாகும். தோல்வி கண்டவர்களாக யார் தான் இருக்க விரும்புவார்கள்?
4. நபி(ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் தனது கையால் அதனைத் தடுக்கட்டும். அது முடியாவிட்டால் தனது நாவினால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தனது உள்ளத்தினால்(வெறுக்கட்டும்). அது ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்- 49) என்றார்கள். ‘ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற அளவுக்கு அவரது ஈமான் பலமாக, வளர்ச்சி கண்டதாக இருக்கும் அவர் சமூகப் பணிகளில் இருந்து தூரமாகி, தானும் தன்பாடும் என்றிருந்தால் அவரது ஈமான் பலவீனமாக இருக்கும்’ என்ற கருத்து இங்கு புலப்படுகிறது.
5. விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், சவால்களுக்கு பயந்து பொதுப் பணிகளில் ஈடுபடாமல் இருப்பது ஒருவகையில் கோழைத்தனமாகும். ‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’, ‘பழுத்த மரத்தை நோக்கித் தான் கற்கள் வீசப்படும்’ என்ற உண்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிமார்கள், முன்னோர்கள் பல்வேறுபட்ட சவால்களை சந்தித்துத் தான் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொண்டார்கள். கொலைகள், சிறைகள், நாடு கடத்தல்கள், புறக்கணிப்புகள் இருந்தன. தியாகங்கள் இல்லாமல் சுவர்க்கத்தை அடைய முடியாது சொர்க்கத்தின் விலை உயர்ந்தது அதற்கு உயர்ந்த விலையை கொடுத்துத் தான் பெற முடியும்.
6. ஒருவருக்கு அல்லாஹ் ஆற்றல்கள், திறமைகள், சந்தர்ப்பங்களை கொடுத்திருந்தால் அவர் அவற்றை மனித சமுதாயத்தின் உயர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். இல்லாத போது நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு கடும் தண்டனைகளை கொடுப்பான். அவர் ஒரு சுயநலமியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்படும்.
“பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.” (102:8)
நபி யூசுப்(அலை) தனக்கு பொருளாதார அறிவு இருந்தமையை உணர்ந்ததனால் எகிப்தில் ஏற்படவிருந்த பஞ்சத்தை தவிர்ப்பதற்கு தன்னிடம் திட்டமொன்று இருப்பதாகக் கூறி அந்த நாட்டு அரசரிடம் நிதி மந்திரிப் பொறுப்பை கேட்டு எடுத்து அதனை செவ்வனே நிறைவேற்றினார்கள்.
பிர்அவ்னின் அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருந்த பனு இஸ்ரவேலர்களை மூஸா(அலை) அவர்கள் விடுதலை செய்வதற்காக தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.
பெரும் ஆட்சியை அடைந்து கொண்ட துல்கர்னைன் உலகின் பல பாகங்களுக்கும் சென்று பலவீனப்பட்ட மக்களது வாழ்வு நிலையை உயர்த்துவதற்காக முயற்சிகளைச் செய்தார்.
எனவே, இவர்கள் வாய்மூடி மௌனமாக ‘தாமும் தான் பாடும்’ என்று இருக்கவில்லை. தமக்கு வழங்கப்பட்ட அருட் கொடைகளை பிறரது பயன்பாட்டிற்காக பயன்படுத்தினார்கள். தமது சமூகப் பணிகளின் பொழுது பல்வேறு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் செய்தார்கள். இவர்களை நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்பதற்காகவே குர்ஆனில் அல்லாஹ் இவர்களது வரலாற்றை குறிப்பிடுகிறான்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற வகையில் ஒருவர் தான் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் இஸ்லாத்தின் அனுகூலங்களை பிறரும் அனுபவிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
7. சமூகம் பாவங்களில் மூழ்கி இருக்கும் பொழுது அதனை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த சமூகத்திற்கு இறங்கும் தண்டனை அப்படியே இறங்கும். அதன் போது அத்தீமைகளது செல்வாக்கிலிருந்து அவர்களால் விடுபட முடியாது போய்விடும். அவர்களும் அவர்களது குடும்பமும் சேர்ந்தே பாதிக்கப்படும்.
கப்பலில் கீழ் தட்டில் இருப்போர் கப்பலில் துளையிடும் பொழுது மேல் தட்டில் இருப்போர் தடுக்காமல் விட்டால் எல்லோரும் சேர்ந்து மூழ்க வேண்டிவரும். தடுத்தால் அனைவரும் தப்பலாம் என்ற கருத்து ஹதீஸில் வருகிறது.(விரிவான ஹதீஸ் – ஸஹீஹ் புகாரியில் 2493)
“எந்த ஒரு சமூகத்திலாவது ஒரு மனிதன் பாவங்களைச் செய்யும் போது அவனை அச்சமூகத்தினர் மாற்றியமைப்பதற்கு சக்தி பெற்றிருந்தும் அவனை அவர்கள் மாற்றாவிட்டால் அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையை வழங்குவான்.” (அபூதாவுத் – 4339)
8. பிறர் நலத்திற்காக உழைப்பது ஈமானின் பண்பாகும்.”உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பும் வரை அவர் விசுவாசியாகமாட்டார்” (ஸஹீஹ் புகாரி-13) என்ற நபி மொழிக்கு இணங்க பார்த்தால் ஒருவர் தனக்கோ தனது குடும்பத்திற்கோ கஷ்டங்கள் துன்பங்கள் வருவதையோ நரகத்திற்கு போவதையோ விரும்பமாட்டார்.
எனவே, பிறருக்கு இவை போன்ற துன்பங்கள் ஏற்படாமலிருக்க அல்லது ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்க முயற்சிப்பதே ஈமானின் பண்பாகும்.
9. சமூகப் பணி என்பது நன்மைகளை சம்பாதிப்பதற்கான அரிய சந்தர்ப்பமாகும். ஒருவர் ஒரு நற்காரியத்தை சமூகத்தில் ஏற்படுத்தினால் அதன் மூலம் அமல் செய்பவர்களுக்கு கிடைக்கும் நன்மையின் அளவு அவருக்கும் கிடைக்கும். “ஒரு நாற்காரியத்தை (பிறருக்கு) காட்டிக் கொடுப்பவர் அதனைக் கொண்டு அமல் செய்பவருக்கு கிடைக்கும் கூலியை பெறுகிறார்.” (திரமிதீ : 2670)
ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற பொழுது அதன் மூலம் பயனடைபவர்களுடைய துஆக்கள், ஆசீர்வாதங்கள் அவரருக்கு நிச்சயமாக கிடைக்கும். அவருக்கு அது ‘ஸதகா ஜாரியா’ என்ற வகையில் அல்லது ‘பயன்மிக்க அறிவு’ என்ற வகையில் அவர் இறந்ததற்கு பின்னரும் அவருடைய மண்ணறைக்கு அவற்றின் நன்மைகள் வந்து கொண்டே இருக்கும். உலகில் வாழும் பொழுது ஒருவர் செய்யும் மிகப்பெரிய புத்திசாலித்தனமான முதலீடாக இது அமையும்.
உதாரணமாக, அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து ஒரு கலாநிலையத்தை ஒருவர் உருவாக்கினால் அதில் கற்று வெளியேறியோர் பெறுகின்ற அனைத்து நன்மைகளில் அவருக்கும் பங்கு உண்டு. பள்ளிவாயல் நிர்வாக சபையிலிருந்த வண்ணம் பல்வேறுபட்ட பணிகளை ஒருவர் மேற்கொள்ளுகின்ற பொழுது அதன் மூலம் பயனடைவோர் செய்யும் நற்காரியங்கள் அனைத்தினதும் கூலியில் அவருக்கும் பங்கு வரும்.
10. சில பொறுப்புகளை அவற்றுக்கு மிகவும் தகுதியானவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் சில பல காரணங்களுக்காக பின் வாங்கினால் அப்பொறுப்புகளை தகுதியற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அல்லது அங்கு அமர்த்தப்படுவார்கள். அப்போது அப்பொறுப்புக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனால் அல்லது உரிய முறையில் மேற்கொள்ளப் படாமையினால் மிகப் பயங்கரமான விளைவுகள் ஏற்படும். அல்லது அப்பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அப்படியான சந்தர்ப்பத்தில் பொறுப்புக்களை வகிப்பதற்கு தகுதியும் ஆற்றல்களும் இருந்தும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவர்கள் கட்டாயமாக அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு உள்ளாகுவார்கள். நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை கடுமையாக தண்டிப்பான் என்பதில் சந்தேகமில்லை.
பொதுப் பணிகளில் ஈடுபடக் கிடைப்பது என்பது அல்லாஹ் ஒருவருக்கு செய்யும் மிகப்பெரிய பாக்கியமாகும்.அது அவர் மீதான கடமையாகவும் அவருக்கான ஸதக்காவாகவும் இருக்கும். தகுதி இருந்தும் அப்பொறுப்புகளை எடுக்காமல் இருப்பது அல்லாஹ்வின் தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படும்.
எனவே தகுதியானவர்கள் பொறுப்புக்களை வகித்து அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அளப்பரிய கூலிகளையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.




