குடும்ப நிறுவனத்தின் மீதான தாக்குதல்
முஸ்லிம் சமூகத்திலுள்ள குடும்பத் தகராறுகளையும் காளி நீதிமன்றங்களில் நிலவும் கோளாறுகளையும் ஆதாரம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பெண்ணியல் வாதிகளும் மேற்குலக சிந்தனைகளது பக்தகோடிகளும் விஷமப் பிரசாரங்களை பல மட்டங்களிலும் குறிப்பாக மீடியாக்களில் செய்து வருகிறார்கள். இவர்களுக்குப் பின்புலத்தில் பல ‘மறைகரங்கள்’ இருந்து செயல்பட்டு வருகின்றன என உறுதியாக நம்ப முடியும்.
பணம் கிடைத்தால் யாரும் எதனையும் செய்வார்கள். ‘பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்று சொல்வது போன்று இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ட்ரில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் சக்திகளது வலைகளில் சில முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சிக்கியிருக்கிறார்கள்.’இஸ்லாம் பற்றிய பீதி’யை உண்டு பண்ணுவதற்கு இவ்வாறு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு இஸ்லாம் கட்டிக் காக்கும், புனிதமாக மதிக்கும் குடும்ப நிறுவனத்தின் மீது பல கோணத்தில் இருந்தும் இவர்கள் தாக்குதல்களை நடத்திவருகிறார்கள்.
தற்போதைய நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் குடும்ப நிறுவனம் பல்வேறுபட்ட பிரச்சினைகளோடு இருந்து வருகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. இதற்கு அடிப்படையான காரணம் அவ்வாறான பிரச்சினைகளோடு வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவின்மையும் இஸ்லாத்துக்கு எதிரானவர்களது தீவிர பிரச்சாரங்களுமாகும்.
இனவாதம்
அடுத்ததாக இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு ஒரு பீடை என்றும் அவர்களது மார்க்கம் பிற்போக்கானது, கொடூரமானது என்றும் இந்த நாட்டின் பெரும்பாலான முஸ்லிம் அல்லாத புத்திஜீவிகள் தமது மனங்களில் பதித்துக் கொண்டிருப்பது தெட்டத் தெளிவான உண்மையாகும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக உழைக்கும் அமைப்புகள் மற்றும் தனி மனிதர்களை பயங்கரவாகப் பட்டியலில் சேர்த்து அவர்களை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளும் தெளிவாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் பாராளுமன்றத்தில் ஒருவர் முஸ்லிம்களோடு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தைப் பற்றி பேசிய உரை யூடியூப்பில் வந்த பொழுது இந்த நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் தமது கொமன்ட்ஸ் பகுதியில் இஸ்லாமிய விரோதப் போக்கை கொட்டியிருப்பதையும், இஸ்லாத்தின் பகிரங்கமான விரோதிகளைக் கூட நியாயம் கண்டிருப்பதையும் காண முடிந்தது. இந்த கமெண்ட்ஸ்களை பார்த்த போது இனவெறியானது இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர்களது மனங்களில் நீறுபூத்த நெருப்பாக மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.
ஆகவே இன்னும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பற்றிய பிழையான அபிப்பிராயம் தொடர்ந்து இருந்து வருவது பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக முஸ்லிம்களது வாழ்வு முறையும் இஸ்லாமும் நவீன உலகத்துக்கு பொருத்தமற்றவை என்று கூறும் சடவாத நாஸ்திகவாத சிந்தனைகள் படையெடுத்துள்ளன. இதன் மாயை வலையில் பலர் தம்மை அறியாமலேயே சிக்கி ஸ்லாத்துக்கு எதிராக பல சதிகளை செய்து வருகிறார்கள்.
இதற்கு என்ன தீர்வு?
இதுபோன்ற சிந்தனை ரீதியான படையெடுப்புகளை முறியடிப்பதற்கு இஸ்லாமிய ஷரீஅத்தைப் பற்றிய ஆழமான அறிவும் நடைமுறை சட்டங்கள் பற்றிய தெளிவும் மொழிகள் பற்றிய அறிவும் உள்ள, கவனமாகவும் சமூகமாகவும் மிகத் தகுதியான விதத்திலும் தமது பிரச்சார உத்திகளை மேற்கொள்ளும் தாஈக்களும் சமூக ஆர்வலர்களும் திறமைசாலிகளும். தேவைப்படுகிறார்கள்.இதற்கு பணபலம், அறிவுப் பலம் மனிதவளம், இஸ்லாமிய அறிவு, சமூக அறிவு போன்றன ஒன்றிணைய வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தை விடவும் சிந்தனைப் போராட்டம் மிகவும் வித்தியாசமானது; ஆழமானது; நீண்ட ஆழமான வடுக்களை ஏற்படுத்தும். மனப்பாங்கு மாற்றம் அதனால் தான் ஏற்படுகிறது. ஒரு சமுதாயத்தைப் பற்றிய தப்பபிராயம் அல்லது மதிப்பீடு அந்த சமுதாயம் உலகில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனதில் தோற்றுவிக்கும். அது சில போது அல்லது பல போது வன்முறைக்கு இட்டு செல்லும் வன்முறையாளர்களை தோற்றுவிக்கும்.
கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த தப்பபிப்பிராயங்களும் பிழையான மனப்பதிவுகளுமே காரணமாக அமைந்தன.
எனவே இனங்களுக்கிடையிலான ஐக்கியம், சமாதான சகவாழ்வு என்பன நிலவுவதற்கு ஆரோக்கியமான சிந்தனை மாற்றம் ஒன்று தேவை. அதற்கான நீண்டகால திட்டங்களை முஸ்லிம் சமூகம் வகுத்து செயல்பட வேண்டும்.
பாரிய பொறுப்பு
இது பொதுமக்களது கடமை என்பதனை விடவும் உலமாக்கள், கலாநிலையங்கள், புத்திஜீவிகள்,சமூகத்தின் முக்கிய பதவிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவரதும் பொறுப்பாகும்.
“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.உங்களது பாதங்களையும் பலப்படுத்துவான்.” என்பது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.
இதன் அர்த்தம் எமது உதவி அவனுக்குத் தேவை என்பதல்ல. அவனது மார்க்கத்தை உலகில் பாதுகாப்பதற்கும் வாழ வைப்பதற்கும் எமது முயற்சிகள் தேவை என்பதையே அவன் கூறுகிறான்.
தனது மார்க்கத்தை பாதுகாக்க அவனுக்கு பௌதீக விதிகளுக்கு அப்பால் மலக்குகளை அனுப்பி பாதுகாக்க முடியும். இருப்பினும் மனித முயற்சியின் ஊடாகவே மார்க்கத்தின் வெற்றியை அவன் அமைத்திருக்கிறான் என்பதனால் எமது ஆழமான ஈமானும் நல்லெண்ணமும் முயற்சிகளும் தேவை.
மறுமையில் எமக்கு அல்லாஹ் தந்த வாய்ப்புகள், கல்வித் தராதரங்கள், திறமைகள் என்பவற்றை பற்றி நிச்சயம் விசாரிப்பான்.



