இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் …

அல்லாஹ்வின் திருப்தியை அடைய எம்மால் முடிந்தளவு எதிர்காலத்துக்காக திட்டமிட்டுவோம்.

ஹஜ்ஜின் கதாநாயகர்,அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம்(அலை) அவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வோம்! அன்னாரது ஏகத்துவக் கொள்கை பற்று, தியாகம், முன்மாதிரியான வாழ்வு அனைத்திலிருந்தும் படிப்பினை பெற்று அன்னாரது வாழ்வைப் போன்று எம் வாழ்வையும் அமைத்துக் கொள்ள இந்த புனிதமான தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.

பெற்றார், உற்றார் உறவினர், அயல் வீட்டார் ,ஏழை எளியவர் ஆகியோரை கவனிப்போம். இருண்ட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குள் இருந்து கொண்டு, மனமுடைந்து போயிருக்கும் ஒவ்வொரு மனிதனதும் இடத்தில் நாமும் இருப்பது போன்று உணர்ந்து அவர்களது துயரை துடைப்போம்.

பாலஸ்தீனில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் ஒடுக்கப்பட்டுள்ள அனைவரதும் விடுதலைக்காக வல்லவன் அல்லாஹ்விடம் மன்றாடுவோம்!!!

இந்த நன்நாளில் அநாவசியமான செலவுகள், வீண்விரயம்,பிறரது உரிமைகளை பாதிக்கும் செயல்கள்,ஷைத்தானிய எண்ணங்கள் என்பவற்றில் இருந்து முற்றாக தூரமாகுவோம்!

இது ஒரு சந்தோஷமான நாள் என்ற வகையில் குடும்பத்தாரோடு எமது பொழுதுகளை சந்தோஷமாகக் கழிப்பதற்கு நாம் உயர்ந்த பட்சம் முயற்சிப்போம். அவர்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவோம். இந்த நாளில் தேவையான செலவுகளை அவர்களுக்காகச் செய்வோம்.

دينارٌ أنفقْتَهُ في سبيلِ اللهِ ، ودينارٌ أنفقتَهُ في رقَبَةٍ ، و دينارٌ تصدقْتَ بِهِ على مسكينٍ ، ودينارٌ أنفقتَهُ على أهلِكَ ، أعظمُهما أجرًا الذي أنفقْتَهُ على أهلِك (أخرجه مسلم -995)

நபியவர்கள் ‘ நீர் உமது குடும்பத்திற்காக செலவு செய்யும் ஒரு தீனார் தான் எல்லாவித செலவினங்களை விடவும் மகத்தான கூலியைப் பெற்று தரும் தீனார்” என்று குறிப்பிட்டார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 995)

எனவே பெருநாள் தினத்தில் குடும்பத்திற்காக, உறவினர்களை பார்க்கச் செல்லும் பயணங்களுக்காக, குடும்பத்தாரது மனதை குளிரச் செய்யும் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காக செலவு செய்வது நிச்சயமாக மிகப்பெரிய ஸதக்காவாக அமையும்.

ஏனைய நாட்களில் தொழில், சமூக சேவைகள் என்றறை ஓடிக்கொண்டிருப்போர் இந்த நாளிலாவது தொழில்சார் உரையாடல்களையும் சோஷியல் மீடியாத் தொடர்புகளையும் கணிசமான அளவு குறைப்பது மிகவும் நல்லது.

நபியவர்கள் மிகுந்த வேலைப் பளுக்களுக்கும் சோலிகளுக்கும் மத்தியில் பள்ளிவாயலில் அபீசீனிய நாட்டவர்கள் அம்புகளாலும் வில்லுகளாலும் விளையாடிக் கொண்டிருந்த காட்சியை தனது அருமை மனைவிக்கு காண்பிப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். அதுவும் இந்த பெருநாள் தினத்தை தான்.

யா அல்லாஹ்!

இந்த நன்நாளில் நல்லமல்கள் செய்யும் பாக்கியத்தை எமக்குத் தந்து அவற்றை அங்கீகரித்து எம்மைப் பொருந்திக் கொள்வாயாக!!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top