சமூகத்தில் ஈமானுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்றே பண்பாட்டு வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செயல்படுவது போன்றே பொருளாதார விருத்திக்கும் உளரீதியான மேம்பாட்டுக்கும் முயற்சிகள் செய்யப்படுவது அவசியமாகும்.
அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்கள் தனது “இஸ்லாமிய வாழ்க்கைப் பாதையில் உள்ள சிக்கல்கள்” எனும் நூலில் இக்கருத்தை பின்வருமாறு வலியுறுத்துகிறார்.
“உணவுக்கான தேவையை ஒத்ததாக உள நிம்மதிக்கான தேவையும் இருக்கிறது. அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மனிதனது உளவியல் உரிமைகளும் சடரீதியான உரிமைகளும் ஒரே அளவில் பேணப்பட வேண்டும் என்ற விடயத்தை சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
எனவே மக்காவை ஸ்தாபிப்பதற்கு முன்னர் தனது இரட்சகனிடம் அவர்களது பிரார்த்தனை பின்வருமாறு அமைந்ததாக அல்லாஹ் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்:-
“இன்னும் நினைவு கூருங்கள்: இப்ராஹீம்: ‘இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக என்று கூறினார்’
إنَّ الحاجة إلى الاستقرار النفسي كالحاجة إلى القوت، وكان الخليل إبراهيم يُقدِّرُ حقوقَ الإنسان الأدبية والمادية معًا، عندما دعا ربه قُبيل إنشاء مكة: (وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ)
❏ الشيخ محمد الغزالي
من كتابه: مشكلات في طريق الحياة الإسلامية
அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்களது மேற்படி கருத்து எமது ஆழமான சிந்தனைக்குரியது.
இதே விடயம் ‘ஸூரது குறைஷ்’ இலும் அல்லாஹ்வால் கூறப்படுகிறது.
لِاِيْلٰفِ قُرَيْشٍۙ
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கியமைக்காக,
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِۚ
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
இங்கு பட்டிணியும் அச்சமும் இல்லாத சூழ்நிலையை குறைஷியர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியமைக்காக அவர்கள் அவனை வணங்க வேண்டும் என்று கூறுகிறான். பாதுகாப்புணர்வும் தாராளமான உணவும் ஒரு சமூகத்தில் இருப்பது இரண்டும் பெரும் பாக்கியங்களாகும் என்ற கருத்தை அவன் தெளிவுபடுத்துகிறான்.
எனவே மனித வாழ்வில் அச்சம் பயமற்ற, மன நிம்மதியான சூழல் இருப்பதும் நிறைவாக உணவும் பானமும் இருக்கின்ற ஒரு நிலையும் உருவாக்கப்படுவது இஸ்லாத்தின் நோக்கமாக இருக்கிறது.
இவை இரண்டு மனித வாழ்வின் அடிப்படைகளாக இருப்பதால் தான் அவற்றிற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
யுத்தமும் இனப்பிரச்சினைகளும் சவால்களும் இல்லாத சூழல் உருவாக்கப்பட வேண்டும்.அதேபோன்று வறுமை, பசி, பட்டினி இல்லாத சூழலை உருவாக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.




