பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போது

1.சிறந்த சித்திகளைப் பெற்றவர்கள் புகழப்பட வேண்டும். கல்வியில் முஸ்லிம் சமூகம் பின்னடைந்திருப்பதால் இந்தவகை உற்சாகமூட்டல் அவசியமாகும். நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்கள் மென்மேலும் முன்னேற அவர்களை அது உற்சாகப்படுத்தும். பிற மாணவர்களுக்கு அது முன்மாதிரியாக இருக்கும். பண பலம், குடும்ப அந்தஸ்து ,அரசியல் அதிகாரம் என்பவற்றை கெளரவத்தின் அடையாளங்களாக கருதும் சமூக அமைப்பில் தக்வா, அறிவு, பண்பாடுகள் என்பவற்றையே கெளரவத்தின் துலாக் கோல்களாகக் கொள்ள வேண்டும் என்பதை இத்தகைய உற்சாகமூட்டல்களாலும் விளம்பரங்களாலும் வலியுறுத்த முடியும்.

அந்த வகையில் உயர் பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவியரையும் அவர்களுக்கு கற்பித்த ஆசான்களையும் அவர்கள் கற்ற பாடசாலைகளையும் பெற்றாரையும் மற்றோரையும் நாம் புகழுகிறோம்,மெச்சுகிறோம்,துஆச் செய்கிறோம்.அறிவுக்கு முன்னுரிமை வழங்க மென்மேலும் உங்கள் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.

  1. இந்த க.பொ.த.உ/த பரீட்சையில் அதியுயர் பெறுபேறுகளை பெற்றவர்கள் மேல் கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளமாட்டார்கள். ஆனால் குறைந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் பெரும் தடுமாற்றத்தில் இருப்பார்கள். எந்த Course ற்குச் செல்வது என்பதில் அவர்களிடத்தில் குழப்ப நிலை காணப்படும். எனவே அவர்களுக்கு தேவையான கல்வி வழிகாட்டல், துறைசார் வழிகாட்டல் சமூகத்திலுள்ளவர்களால் வழங்கப்பட வேண்டும்.இல்லாதபோது அவர்கள் மனம் உடைந்து போவார்கள். அல்லது, பொருத்தமற்ற துறைகளைத் தெரிவு செய்வார்கள். அல்லது சமூகத்தில் கைவிடப்பட்டு பிழையான வழிகளில் செல்வார்கள்.
  2. எல்லாவற்றையும் விடவும் மிக முக்கியமான மற்றொரு அம்சம் இருக்கிறது. அதுதான் குறைந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் அல்லது பரீட்சையில் சித்தியடைய தவறியவர்கள் மனம் நொந்து போயிருப்பார்கள்.அவர்களை ஆற்றுப்படுத்துவதும் ஆறுதல் சொல்வதும் அவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குவதும் சமூகத்தின் முக்கியமான கடமையாகும். நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்களை மாத்திரம் அளவு மீறி புகழ்ந்து கொண்டிருப்பதனால் ஏற்படக்கூடிய பயங்கரமான பின் விளைவுகளைப் பற்றி சமூகம் கட்டாயமாக சிந்திக் வேண்டும். சித்தியடையத் தவறியவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. பெரும்பாலும் இவர்கள் டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள். மனவெழுச்சிகள் கொண்டவர்கள். அவர்கள் மனம் நொந்து போய் முடங்கி விடக்கூடாது.

பின்வரும் ஏதாவது ஒரு வழிகாட்டலை அத்தகையவர்களுக்கு சமூகம் வழங்கலாம்:-

*அவர்கள் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற வழிகாட்டலாம்.

*Re correction க்கு விண்ணப்பிக்கும் படி கூறலாம்.

*அவர்கள் பெற்றிருக்கும் குறைந்த பெறுபேறுகளுக்கு ஏற்ப நாடெங்கும் பல Courses உள்ளன. அவர்களது இயலுமை, பொருளாதார நிலை,விருப்பம்,அந்த Courses இனால் சம்மந்தப்பட்ட மாணவருக்கும் சமூகத்துக்கும் கிடைக்கும் அனுகூலங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த வழிகாட்டல்கள் அமைய வேண்டும்.

இவை

பாடசாலை அதிபர்கள்

பழைய மாணவர்கள்

பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்

கவுன்சிலிங் பொறுப்பாசிரியர்கள்

பாட மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்

உளவளத்துணை மற்றும் Motivation நிகழ்ச்சிகளை நாடுபூராவும் நடாத்திவருவோர்

முஸ்லிம் கல்வி மாநாடு, பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள்

இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள்

போன்ற பல தரப்பினரதும் தலையாய கடமையாகும்.

அந்த மாணாக்கர்களுக்கும் பெற்றோருக்கும் இவை தொடர்பான அனுபவங்களும் அறிவும் குறைவாக இருப்பதனால் மேற்கூறப்பட்ட அந்த ஒத்துழைப்பை அவர்களுக்காக கட்டாயமாக வழங்க வேண்டும்.

சமூகத்தில் இருக்கின்ற துறை சார்ந்த வல்லுநர்களும் பணக்காரர்களும் இதற்குத் தேவையான ஆலோசனைகளையும் பணத்தையும் கொடுக்க வேண்டும். இல்லாத போது அவர்களை நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான். சமூகத்தின் கல்வித்துறையானது பின்தங்கிய நிலையில் இருப்பதனால் இது விடயமாக உடனடியாக கவனம் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கல்வியில் உச்ச நிலையில் இருக்கும் சமூகத்தை அல்லாஹ் உயர்த்துவான். உலகிலும் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

அல்லாஹ் போதுமானவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top