ஆங்கில வருடப் பிறப்பைக் கொண்டாடுவது முஸ்லிம்களாகிய எமக்குரியதாக இல்லாவிட்டாலும் ஒரு மரபுக்காக இந்த 2020 வருடத்துக்கான சல சிந்தனைகளை முன்வைக்க விரும்புகிறோம்.
2019 விரைவாகவே கழிந்து விட்டது.சர்வதேசமெங்கும் பதட்டமும் நெருக்குதல்களும் அடக்குமுறைகளும் நிலவுகின்றன. சர்வதேச முஸ்லிம் சமூகம் ரணங்களோடும் சுமைகளோடும் ஏக்கங்களோடும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையர்களாகிய எம்மைப் பொருத்தவரையில் பார்த்தாலும் பெருமைப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எந்த சாதனைகளை தான் இந்த ஆண்டில் சாதித்திருக்கிறோம்?
மத ரீதியாக இன ரீதியாக என்று சிந்திக்காமல் பொதுவாக இலங்கைத் தாயின் மைந்தர்கள் என்ற வகையில் 2019 ஐ ஊடுருவிப் பார்த்தால் மனது கனத்து பெருமூச்சுவிட வேண்டி வருகிறது.
விதவிலக்கின்றி எல்லோரும் போல நிம்மதியின்றி வாழுகிறார்கள். ஒவ்வொரு இனமும் மற்றைய இனத்தை பயத்தோடும் சந்தேகத்தோடுமே பார்க்கிறது. பெரும்பான்மையினருக்கு தமது இனம் அருகிவிடும் என்ற பயம் ஊட்டப்பட்டுவிட்டது. அதற்கும் அப்பால் சென்றும் அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டனர். அதாவது பெரும்பான்மையினரது சனத் தொகையைக் குறைக்க சிறுபான்மையினர் சூட்சுமமான முயற்சித்து வருவதாக அவர்கள் நம்புகின்றனர். சிறுபான்மையினர் முன்னரை விடவும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் எண்ணிக்கையிலும் பலம் பெற்று வருவதாக பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய பிரசாரங்களது நச்சுக் கனிகள் நாளாந்தம் வெளிவந்த வண்ணமுள்ளன.
ஏப்ரல் 21 நாசகார தாக்குதல்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பயங்கரமான உருவத்தை பிற சமுதாயங்களது உள்ளங்களில் வரைந்து விட்டன.
சிறுபான்மையினரோ தமக்குரிய உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதாகவும் உணருகிறார்கள்.
இந்த இனமுரண்பாடு நீடிப்பதால் சமூக உறவுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்பன பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. அச்சமற்ற சூழலும் பரஸ்பர நம்பிக்கையும் புரிந்துணர்வும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அஸ்திவாரங்களாகும். சிங்கப்பூர், கனடா, மலேசியா போன்ற நாடுகளில் இந்த வளர்ச்சியைக் காண முடிகிறது.
நமது நாட்டில் இனப்பிரச்சினை மட்டும் தான் பெரும் சாபக்கேடு என்று கூற முடியாது. குடும்ப நிறுவனம் ஆட்டம் கண்டுவருவது, போதைவஸ்துப் பாவனை, ஆபாச கலாசாரம் வேரூன்றி வருவது, சிறுவர் துஷ்பிரயோகம், சடவாத பொருள் முதல் வாத சுயநல மனப்பாங்கு, சூழல் மாசடைவது, தற்கொலைகள் அதிகரித்து வருவது, அரசியல் துறையில் இடம்பெற்று வரும் நயவஞ்சக தனமும் பயங்கர கழுத்தறுப்புக்களும், ஊழல், லஞ்ச கலாசாரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த ஆக்கத்தை எழுதும் வேளையில் கூட ஒரு தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மீடியாக்களது தலைப்புச் செய்திகள் எப்போதும் கவலையையைத் தோற்றுவிக்கும் பிரதிகூல செய்திகளாகவே அமைகின்றன. அவை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்ப்பதாக இல்லை. ஊடக நிறுவனங்களுக்கு எப்போதும் தேவை பணம். அதனை அடைய யாருடைய அந்தரங்கத்தையும் அவை அம்பலப்படுத்தத் தயாராக உள்ளன.எவர் எக்கேடு கெட்டாலும் இனங்கள் மோதிக் கொண்டாலும் கூடிய Hit உம் கூடிய Kik உம் இருப்பதே முக்கியம்.
இந்த தேசத்தையும் அதில் உள்ள அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
முஸ்லிம் சமூகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் அனந்தம். பிற சமுதாயங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நம் நிலையோ அதோகதி தான். அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதில் அக்கறை காட்டும் அளவுக்கு அடியார்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்கவும் தேசத்தைக் கட்டியெழுப்பவும் நாம் கவனமெடுப்பது போதாது. கடமைகளைச் செய்யாமல் உரிமைகளுக்காக போராடுவது நவீன உலகின் முக்கிய பிரச்சினையாகும் என தற்கால இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
எனவே மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம்.
أن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم
“எந்த சமூகம் தன்னளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையோ அந்த சமூகத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை”(அல்குர்ஆன்)
இன்ஷா அல்லாஹ் அனைவரும் கைகோர்த்து முயற்சிதால் 2020 ஐ சுபீட்சமான ஆண்டாக மாற்றலாம்.
நம்பிக்கை வைப்போம். துன்பங்கள் எப்போதுமே தொடர்வதில்லை.




