இந்தோனேசிய சர்வதேச மாநாடு ஒரு பார்வை

அஷ்ஷைக் பளீல்

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மோதல்களை தவிர்ப்பதற்காக மதங்களுக்குள்ளும் மதங்களுக்கு இடையிலுமான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான இரண்டாவது சர்வதேச மாநாடு கடந்த 17,18,19(12.2019) ஆகிய தினங்களில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்றது.

சமாதான சகவாழ்வை அடையும் நோக்குடன் வியன்னாவை மத்திய தலமாகக் கொண்டு சர்வதேச ரீதியாக இயங்கி வரும் KAICIID (கைசீட்) எனும் அமைப்பும் OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

Together For Diversity (ஒன்றிணைவது பன்மைத்துவத்துக்காக) என்பது மாநாட்டின் மகுட வாசகமாக இருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய இரு நாடுகளில் இருந்தும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் அதேவேளை இனரீதியான நெருக்குதல்களை சந்தித்து வரும் மியன்மார், இலங்கை, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் மாநாட்டுக்கு பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஐந்து நாடுகளையும் சேர்ந்த இஸ்லாம் மற்றும் பெளத்த Religious Leaders (மதத்தலைவர்களும்) Policy Makers (தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட சிலரும்) இந்த மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

மூன்று நாள் மாநாட்டில் பிரதான உரைகள், குழுக் கலந்துரையாடல்கள், கேள்வி பதில் அமர்வுகள் போன்றன ஊடாக இப்பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் மூலோபாயத் திட்டங்கள் பற்றி மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த ஒன்பது பிரதிநிதிகளுடன் இணைந்து இதில் கலந்து கொள்ள முடிந்தது.அல்ஹம்து லில்லாஹ்.

1.இலங்கையில் மதரீதியான கடும்போக்கு, வன்முறைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என்பவற்றைத் தடுப்பதற்கான மற்றும் முறியடிப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்துக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி

2.புத்தசாசன அமைச்சின் விஷேட பிரதிநிதி திரு விமல்

  1. அனுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி திவுலபெலஸ்ஸ விமலானந்த தேரர்

4.NPC தேசிய சமாதானப் பேரவைப் பிரதிநிதி நிஷான்த

5.மாத்தறை நூரானிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷைக் அர்கம் நூரமித்

6.கொழும்பு ஸாஹிரா கல்லூரி பிரதி அதிபர் அஷ்ஷைக் ஏ.மிஹ்லார்

7.கைஸீட் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி ஸபிய்யுள்ளாஹ் மன்சூர்

8.சர்வதேச செம்பிறைச் சங்க பணிமனை உத்தியோகத்தர் கலாநிதி அம்ஜத் சலீம்

ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மதத் தலைவர்களது ஒத்துழைப்பின்றி கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களது ஒத்துழைப்பின்றி மதத்தலைவர்கள் மட்டுமோ சமாதான சகவாழ்வு க்கான திட்டங்களை வகுக்கவோ அமுலாகாகவோ முடியாது என்பதும் இரு சாராரும் இணைந்து செயல்பட்டால் மாத்திரமே முயற்சிகள் காத்திரமாகவும் முழுமையாகவும் நடைமுறைச் சாத்தியமான வகையிலும் அமையும் என்பதும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களது ஆழமான நம்பிக்கையாகும்.

மாநாட்டில் பிரதானமாகப் பின்வரும் அம்சங்களோடு தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

1.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் குறிப்பாக பெளத்த சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சிக்கல்களும் அவற்றைத் தீர்க்க கையாளப்படும் வழிவகைகள் மற்றும் அந்த சிறுபான்மையினர் அனுபவிக்கும் சுதந்திரங்களும்.

2.முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்கள் முகம் கொடுக்கும் சவால்களும் அவற்றுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களும்.

3.முஸ்லிம்களதும் பெளத்தர்களதும் வேதக் கிரந்தங்களில் காணப்படும் சமாதான சகவாழ்வுக்கான வழிகாட்டல்கள்.

  1. சமாதான சகவாழ்வை அடையும் நோக்கில் ஒவ்வொரு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் Best Practices (உன்னதமான நடைமுறைகள்).

5.இன நல்லுறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப ஒவ்வொரு நாட்டிலும் எத்தகைய மூலோபாயம் திட்டங்களை வகுக்கலாம்? அவற்றை நடைப்படுத்தும் நிறுவனங்கள் யாவை?

மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கலந்துரையாடல்களையும் பலஸ்தீனைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் அபூநிமைர்,கலாநிதி அம்ஜத் சலீம்,கலாநிதி சபிய்யுல்லாஹ் போன்றோர் நடாத்தி வைத்தனர்.

OIC அமைப்பின் கலந்துரையாடல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பஷாஇர் அவர்களும் KAICIID அமைப்பின் செயலாளர் நாயகம் முஅம்மர் அவர்களும் மாநாட்டில் கலந்து கருத்துரைகளை வழங்கினர்.

மாநாட்டின் இறுதியில் விதந்துரைகள் வெளியிடப்பட்டதுடன் பத்திரிகையாளர் மாநாடொன்றும் இடம்பெற்றது.

மாநாட்டுப் பிரதிநிதிகள் இந்தோனேசியாவின் மஸ்ஜிது இஸ்திக்லால் எனப்படும் ஜகார்த்தாவில் அமைந்துள்ள மிகப் பெரிய பள்ளிவாசலுக்கும் அதன் அருகே அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தம் மிக்க தேவாலயத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பள்ளிவாயல் நிர்வாகப் பிரதானியாலும் தேவாலய ஆயராலும் வரவேற்கப்பட்டனர்.

உலகில் ஆகக்கூடிய முஸ்லிம் சனத்தொகையான 27 கோடி முஸ்லிம்களைக் கொண்டிருக்கும் அதேபோல் மிகச் சிறுபான்மையினராக கிறிஸ்த்தவர்கள் வாழும் இந்தோனேஷியாவில் இப்படியாக இரு மத ஸ்தாபனங்களும் அருகருகே அமைந்திருப்பது தரிசித்தோரது வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமன்றி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தேவாலயத்தில் இடம்பெறும் ஆராதனைகளுக்காக வரும் கிறிஸ்தவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பள்ளியில் வாகன நிறுத்தகத்தில் அனுமதி வழங்கப்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவின் மற்றுமொரு விஷேடம் என்னவெனில் பொருபதூர் எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய பெளத்த தேவாலயமும் அங்கு தான் அமைந்துள்ளது.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் அவதானிக்க முடிந்த பிரதானமான மாற்றங்கள் வருமாறு:-

1.இனங்களுக்கிடையிலான உறவுகள் விரிசலடைந்திருப்பதால் மனித சமூகம் சந்தித்துள்ள அவலங்களை புரிந்தமை.

2.புரிந்துணர்வின்மைக்கும் மோதல்களுக்கும் பின்னணியாக உள்ள உண்மையான காரணிகளை இனம்கண்டமை.

  1. தப்பாக புரியப்பட்ட பல விவகாரங்களுக்கான தெளிவுகள்.

4.குறுகிய உள்ளங்களோடும் வரையறுத்த அறிவோடும் வாழுவோரை பாதுகாப்பதன் அவசியம்.

  1. சகவாழ்வுக்கான வேலைத் திட்டங்களை தீவிரப்படுத்துவதன், சிதறுண்ட முயற்சிகளை ஒருமுகப்படுத்துவதன் அவசியம்.

மேற்படி மாநாட்டில் பெற்றுக் கொண்ட அனுபவங்களினடியாக இலங்கையில் சில வேலைத் திட்டங்களை மேற்கொள்ள இன்ஷாஅல்லாஹ் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் போதுமாவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top