பரீட்சையும் ஹிஜாபும்

அஷ்ஷைக் பளீல்

ஹிஜாபுக்குள் Bluetooth, Headset போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களை மறைத்து வைத்துக் கொண்டு கடந்த காலங்களில் சில முஸ்லிம் பரீட்சாத்திகள் பரீட்சை எழுதியதனால் இரு காதுகளையும் திறந்த வண்ணமே பரீட்சை எழுத முடியும் என சில அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

இதற்கு துவேஷம் தான் காரணம் என்றும் இதனை விட்டுக் கொடுத்தால் சங்கிலித் தொடராக படிப்படியான வேறு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வரும் போன்ற விளக்கங்களும் கூறப்படுவதை காணமுடிகிறது.

பரீட்சை மோசடிகள் இடம்பெறக்கூடாது என்பதில் பரீட்சை அதிகாரிகள் கவனமாக இருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதை தவறாக எடை போடக்கூடாது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்.

எனவே இந்த நிலையை கவனத்தில் கொண்டு காதுகளை திறக்கும்படி அதிகாரிகள் நிர்பந்திக்கும் பட்சத்தில் அல்லது வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் இரு காதுகள் மாத்திரம் தெரியும் வண்ணம் தமது ஹிஜாபை பரீட்சார்த்திகள் அமைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பது எமது பணிவான கருத்தாகும்.

الضرورات تبيح المحضورات

“நிர்பந்தமான சூழ்நிலைகள் தடுக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக மாற்றும்”

என்ற இஸ்லாமிய சட்ட விதியுடன்

الضرورة تقدر بقدرها

“நிர்பந்தத்தின் அளவு கவனமாக தீர்மானிக்கப்படும்”

என்ற பிக்ஹ் சட்ட விதியையும் சேர்த்து தீர்மானம் எடுக்கலாம்.

தாகமோ பசியோ அளவு மீறுகிறது. ஆனால் குடிக்கவோ சாப்பிடவோ ஹலாலான எதுவுமில்லாத போது ஹராமானவை மட்டுமே இருந்தால் உயிரைக் காத்துக்கொள்ள அவற்றை புசிக்க அல்லது குடிக்க அனுமதியுண்டு. இது இஸ்லாமிய சட்டமாகும்.

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத் தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவத்தில் ஆசைவைக்காத நிலையில் – அளவு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

எனவே சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த சலுகையை கவனமாக அனுபவித்துக் கொள்வதற்கான அனுமதி உண்டு.

காதைத் திறக்கும் படி கூறியிருக்க அதனைக் காரணம் காட்டி முழுத் தலையையும் திறப்பது عاد அப்பட்டமான அத்து மீறலும் باغي தீமை விரும்பலுமாகும்.

எனவே, இஸ்லாத்தின் சலுகைகளை கவனத்தில் எடுக்கலாம். ஏற்கனவே முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கி இருப்பதனால் நாம் தற்போதைய சில அசௌகரிய சூழ்நிலைக்காக பரீட்சை எழுதாமல் இருப்பதோ சூழ்நிலைகளின் அழுத்தத்தால் மனமுடைந்து போயிருப்பதோ எம்மை இன்னும் கல்வித் துறையிலே பின்னடையச் செய்யும்.

எனவே அல்லாஹ்விடத்தில் நம்பிக்கை வைத்தவர்களாக எமது புறத்தில் ஏதும் தவறுகள் நடந்தால் அவன் மன்னிக்க வேண்டும் என்ற தவ்பாவை செய்தவர்களாக சில நிர்ப்பந்தமான சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மாணவியர்களும் அவர்களது பெற்றோரும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இது பற்றி பேசி சமூகத்தைப் பாதுகாக்க சமூகத்தின் புத்தி ஜீவிகளும் துறை சார்ந்தவர்களும் முன்வர வேண்டும்.

அல்லாஹ் எல்லோருக்கும் பொறுமையையும் வெற்றியையும் கொடுப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top