- தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி,மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பன சிலருக்கு அல்லாஹ்வின் சோதனையாகவும் வேறு சிலருக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளன.
- நல்லமனிதர்களும் இந்த அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனைகளின் பொழுது நன்மக்களது பாவங்களை அல்லாஹ் மன்னித்து தரஜாக்களை உயர்த்துகிறான் என்ற உண்மையை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு சிலர் பாவம் செய்ததனால் அவர்களுக்கு தண்டனையாகவும் இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கலாம். அப்படியானவர்கள் தமது குற்றங்களை தவிர்த்து அல்லாஹ்வின் பால் மீள வேண்டிய தேவை இருக்கிறது.
- அல்லாஹ் மிகப் பெரிய வல்லமை கொண்டவன் என்பதை இந்த நிகழ்வுகளின் மூலம் நிரூபித்திருக்கிறான். இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து நிர்மாணித்த கட்டிடங்களும் வியாபாரத் தளங்களும் ஒரு சில நிமிடங்களில் தண்ணீருக்குள் அமிழ்ந்து போன பொழுது அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போனார்கள். மண் சரிவினால் பல வீடுகளும் பல கட்டடங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயின. அவன் நாடினால் எதனையும் செய்யும் சக்தி கொண்டவன் என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது . மனித நலனுக்காக அல்லாஹ் படைத்திருக்கும் நீர், காற்று, நெருப்பு போன்றவற்றை சிலபோது சோதனைகளாகவும் அவன் மாற்றுவான் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அவனது படைகள் பற்றிய அறிவு அவனுக்கே இருக்கின்றது.எனவே நாம் அவனது வல்லமையை விளங்கி செயல்பட வேண்டும்.
- அல்லாஹ்வின் நாட்டம் இன்றி பிரபஞ்சத்தில் உள்ள அனுபவம் அசையாது என்ற வகையில் நடந்து கொண்டிருக்கும் இந்த அர்த்தங்கள் அல்லாஹ்வின் திட்டமிடலின் ஒரு பகுதியாகும். அதனை ஏன் அவ்வாறு செய்தான் என்பதற்கு அவனுக்கு மாத்திரமே காரணம் தெரியும். அவனது ஏற்பாட்டை நாம் சரிவர விளங்கிக் கொண்டு எமது போக்குகளை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை அடிக்கடி நினைப்பதும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதும் மிக அவசியமாகும்.
- பாதிக்கப்பட்டவர்கள் இந்த சோதனையின் பாதிப்புக்களில் இருந்து அவசரமாக வெளியேறுவதற்கு பிறரது உதவியுடன் தமது சொந்த முயற்சியினால் உச்சகட்டமாக முயற்சிக்க வேண்டும்.
- இந்த சோதனையில் பாதிக்கப்படாதவர்கள் தமக்கு அல்லாஹ் இந்த பாதுகாப்பை தந்தமைக்காக நன்றி செலுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உயர்ந்த பட்ச உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். உதவிகளின் பொழுது மத வேறுபாடுகள், பிரதேச வேறுபாடுகள் என்பவற்றை முற்றும் முழுதாக மறந்து பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்கள் என்ற வகையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை முடிந்த வரை செய்ய வேண்டும்.
யா அல்லாஹ் தற்போதைய இந்த நெருக்கடியான நிலையில் இருந்து எமது நாட்டுக்கும் எமது நாட்டில் உள்ள அனைவருக்கும் நீ பாதுகாப்பைக் கொடுப்பாயாக!




