அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஒரு நல்லடியானுக்கு இடர்களும் துன்பங்களும் ‘இப்திலா’ (சோதனை)களாக அமையும். அவர் அந்த துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம், உயர்ந்த நிலைகளை அடைகிறார்; வேறு பலரால் அடைய முடியாத உயர் நிலைகளை அல்லாஹ்விடம் அவர் அடைகிறார்.
இறை நம்பிக்கை கொண்ட அடியானுக்கு தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டே இருக்கும்; இறுதியில் அவர் பூமியில் எந்த பாவமும் இல்லாத நிலையில் நடமாடுவார்.
பாவத்தில் மூழ்கியிருக்கும் ஒருவருக்கு நிகழும் துன்பங்களில் அவை அல்லாஹ்வின் தண்டனை என்பதை காட்டும் அடையாளங்கள் இருக்கும். பாவத்தின் விளைவாக அருவருக்கு உரிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) அல்லாஹ்வால் மறுக்கப்படவும் கூடும்.
சில நேரங்களில் சோதனை பொதுவாக அனைவரையும் வந்தடையும். அத்தகைய நேரங்களில் மக்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்:
(1) முதல் பிரிவு:
ஆழமான ஈமானோடு, அல்லாஹ்வுக்கு பூரணமாகக் கீழ்படிந்து வாழ்பவர்கள். இவர்கள் தமக்கு வரும் துன்பங்களை அல்லாஹ்வின் சோதனைகளாகக் கருதி, பொறுமையுடன் அவற்றைத் தாங்கிக் கொள்வார்கள். அவர்களது பொறுமைக்காக அவர்களுக்கு அல்லாஹ் மிக அதிகமான வெகுமதிகளை வழங்குவான். அவர்கள் அல்லாஹ்விடம் தமது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு அவனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வார்கள்.
நல்லடிகளுக்கு சோதனைகள் வரும் என்பதையும் அவற்றுக்கு அவர்கள் எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதையும் அதற்காக அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் வெகுமதிகளையும் பின்வரும் குர்ஆன், ஹதீஸ் வசனங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.
“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் குறைப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன.இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.(2:155-157)
“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.” (புகாரி-5645)
“ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்” (புகாரி 5642)
அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (புகாரி – 5653 )
நபி (ஸல்) அவர்கள் :- “இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமைகாக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. [முஸ்லிம்-5726]
“உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவர்:
- தொற்று நோய் ஒன்றால் இறந்தவர்
2.வயிற்றுடன் சம்பந்தப்பட்ட நோய் ஒன்றால் இறந்தவர்
- தண்ணீரில் மூழ்கி இறந்தவர்.
- (வீடு, கட்டிடம் போன்றவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்
- இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.(புஹாரி 2829,முஸ்லிம்1914)
எனவே அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாகும் நல்லடியார்களுக்கு இப்படியான வெகுமதிகள் கிடைக்கும். அவற்றை ஒருபோதும் நம் தண்டணை எனக் கூறலாகாது.
(2) இரண்டாவது பிரிவு:
வாழ்க்கையில் அலட்சியத்தோடும் பொடுபோக்காகவும் இருப்பார்கள்; ஆனால் இவர்கள் சோதனை வந்தபின் விழித்தெழுந்து திரும்பிவிடுவார்கள். உணர்வு பெற்று திருந்துவார்கள். இந்த சோதனைகளுக்குள்ளும் அல்லாஹ் அவர்களுக்கு ஓரு நலவையே வைத்திருப்பான் .
“(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அவர்கள் பணிந்து வரும் பொருட்டு அவர்களை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம்.”(அல்-அன்ஆம்: 42)
(3) மூன்றாவது பிரிவு :
மிகுந்த பொடுபோக்குடன் பாவங்களில் மூழ்கிய நிலையில் வாழ்பவர்கள். இவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள். திருந்தவும்மாட்டார்கள். இவர்களது இதயங்கள் இறுகியிருக்கும் ; சைத்தான் அவர்கள் செய்யும் தீமைகளை அழகாகக் காட்டிக் கொண்டிருப்பான்.
அல்லாஹ்:“நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததை, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல்-அன்அாம்: 43)
இந்த மூன்று பிரிவினரில் இந்த மூன்றாம் பிரிவினர் தான் மிக மோசமானவர்களாவர்.
எது எப்படிப்போனாலும் தற்போதைய அனர்த்தங்களின் பொழுது பாதிக்கப்பட்ட முதலாவது பிரிவினர் அல்லாஹ்வின் அருளுக்கு உட்பட்டவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பொறுமையையும் அளவற்ற பாக்கியங்களையும் உலகிலும் மறுமையிலும் வழங்குவானாக!
அவர்களிற் சிலர் நீரில் மூழ்கியும் வேறு சிலர் கட்டடங்கள் இடிந்து விழுந்ததனாலும் வேறு சிலர் மண்சரிவினால் மண்ணுக்குள் புதையுண்டும் வபத்தாகியிருக்கிறார்கள்.
மேலே கூறப்பட்ட ஹதீஸின் படி அவர்களை ஷஹீதுகளாக, பெரும் தரஜாக்களைக் கொடுத்து அல்லாஹ் தன் பால் எடுத்துக் கொண்டான். அவர்கள் பெரும் பக்கியசாலிகள். சுவர்க்கத்துச் சென்று விட்டார்கள்.
மற்றொரு விடயத்தையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்:-
தனவந்தர்களும் சமூகசேவையில் ஈடுபடுவதற்கான உடல்,உள வலிமை கொண்டவர்களும்,சமூக சேவை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஏலவே மெச்சத்தக்க பல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலிகளை வழங்குவானாக!
பணம், உடல் வலிமை, அதிகாரம், செலக்வாக்கு போன்றவற்றைப் பெற்றிருப்பவர்கள் அல்லாஹ்விடமிருந்து அவற்றை அமானிதங்களாகப் பெற்றிருக்கிறார்கள். இந்த இக்கட்டான வேளையில் அவர்கள் தம்மால் முடிந்த பங்களிப்புக்களை நிவாரணப் பணிகளுக்காக வழங்குவது பர்ளு பட்டுமல்ல அவ்வாறு ஈடுபடாமல் தாமும் தம் பாடும் குடும்பமும் என்று இருப்பது எவ்வகையிலும் நல்லதல்ல.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையாக இருப்பதன் மூலமும் பாதிக்கப்படாதவர்கள் உதவிகளைச் செய்வதன் மூலமும் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்.
வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்




