உலகில் வரலாறு நெடுகிலும் அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் பலவிதமான அனர்த்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெள்ளம், மண் சரிவு, எரிமலைக் குமுறல், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், என அவை பல வகைப்படும்.
எனவே, உலகத்திற்கு இவை ஒன்றும் புதியவை அல்ல. சிறிய அளவில் சில அர்த்தங்கள் நடைபெற்று ஓரளவு பாதிப்புகள் இருப்பினும் மற்றும் சில அனர்த்தங்கள் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
1931 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் இடம் பெற்ற வெள்ளத்தினால் 4 மில்லியன் மக்களும் 1887 ஆம் ஆண்டு அதே நாட்டில் இடம் பெற்ற மற்றுமொரு வெள்ளத்தினால் 2 மில்லியன் பேரும் 1970 கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதுள்ள பங்காளாதேஸ்) இடம்பெற்ற சூறாவளியினால் 5 லட்சம் பேரும் 2010ல் ஹெய்ட்டியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 3 லட்சத்து 16 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.இது உயிர்ச் சேதம் மட்டுமே பொருட்சேதம் பற்றிய புள்ளி விபரங்கள் வேறாக உள்ளன.
அனர்த்தங்களை இரண்டு வகையாக பாகுபடுத்தலாம். மனிதன் தனது மோசமான நடத்தைகளால் அல்லது கவனயீனத்தால் தேடிக்கொள்ளும் அனர்த்தங்கள் முதல் வகையாகும். யுத்தங்கள், இனக்கலவரங்கள், வன்முறைகள் என்பன இதற்கு சில உதாரணங்களாகும். அல்லாஹ்வின் ஏற்பாட்டால் மனிதனுக்குத் தெரியாத காரணங்களால் ஏற்படும் அனர்த்தங்களில் சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்றன அடங்கும்.
மொத்தத்தில் இந்த இரண்டு வகை அர்த்தங்களும் இடம்பெறும் என அல்லாஹ்வின் பதிவில் ஏற்கனவே இருந்திருக்கும் என்பதை முஸ்லிம்களாகிய நாம் உறுதியாக நம்புகின்றோம்.அது ‘களா கத்ர்’ மீதான நம்பிக்கையாகும்.
“பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்” என்று கூறும் அல்லாஹ்:
இந்த நம்பிக்கையினால் ஏற்படக்கூடிய பலனை பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ
“உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும்,அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.”(57:22,23)
தப்பிப்போன எதற்காகவும் கவலைப்படாமலும் கிடைத்த எதனை நினைத்தும் அகம்பாவம் கொள்ளாமல் இருப்பதற்கும் அதாவது சமநிலையான மனோநிலைக்கும் இந்த நம்பிக்கை துணை நிற்கிறது என்ற கருத்தை அவன் குறிப்பிடுகிறான்.
எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடுகள் ஏலவே எழுதப்பட்டவை. அல்லாஹ் எல்லாவற்றையும் திட்டமிட்டு இயக்குகிறான்.அவன் விதித்தது தவறாமல் நடக்கும் என்ற ‘களா கத்ர்’ நம்பிக்கை நிம்மதியைத் தரும். அவனது தீர்மானங்களுக்கான காரணங்களை அவனே மிகவும் அறிந்தவன்.
ஆனால், மனிதனாக தேடிக்கொள்ளும் அனர்த்தங்களுக்கு மனிதன் தான் பொறுப்பு என்றால் அல்லாஹ் ஏற்படுத்தும் அனர்த்தங்களுக்கு காரணங்கள் எவை என்பதுதான் இங்குள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.
இறைவனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுக்கு நாஸ்திகவாதிகள் இறைவனை குறை கூறுவார்கள். ஆனால், முஸ்லிம்களாகிய நாம் இதுவிடயமாக கடுகளவேணும் அல்லாஹ்வை குறை கூறமாட்டோம். காரணம் அவனது ஏற்பாட்டிற்கு பல காரணங்கள் இருக்க முடியும்.
அல்குர்ஆன், அல் ஹதீஸ் ஆகிய இரண்டையும் நோக்குகின்ற பொழுது அந்த நிகழ்வுகளுக்கு பின்வரும் காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது:-
அனர்த்தங்களுக்கான பின்னணிகள்
- இறைவனது இருப்புக்கு ஆதாரம் (ஆயாத்-அத்தாட்சிகள்)
புறநடையான, வழமைக்குப் புறம்பான, எதிர்பாராத விதமான, அதிர்ச்சியான சம்பவங்களுக்கு அல்லாஹ் ‘அத்தாட்சிகள்’ என்று பெயரிட்டுள்ளான். அவற்றை அவன் ஏற்படுத்துவதன் மூலம் தனது இருப்பை நினைவூட்டி, அவன் பால் மக்கள் திரும்ப வேண்டும் என எதிர்பார்ர்க்கிறான்.”(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.”(அல்குர்ஆன் – 17:59)
இதற்கு சிறந்த உதாரணமாக,சந்திர சூரிய கிரகணங்களைக் குறிப்பிட முடியும். நபி(ஸல்) அவர்களது காலத்தில் அன்னாரது மகன் இப்ராஹிம் வஃபாத்தான சந்தர்ப்பத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் “சூரியன் மற்றும் சந்திரன் என்பன அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை (நீங்கள் மறையக்) கண்டால் அல்லாஹ்விடம் இரைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி -1044)
இவ்வாறான நிகழ்வுகளின் பொழுது மனிதன் தன்னைப் பற்றியும் இந்த பிரபஞ்ச நிகழ்வுகளை ஏற்படுத்துபவனைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றான். அந்த நிகழ்வுகள் அவனை பாதிக்கலாம்; அல்லது பாதிக்காமல் இருக்கலாம்.எனவே புறநடையான இது போன்றன நிகழ்வுகள் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்பதை மக்கள் உணர்ந்து அவன்பால் திரும்புவதற்கு தூண்டுவதற்காக அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்றன.
- மனித அறிவுக்கான சவால்
அறிவியலின் உச்சத்தில் தான் இருப்பதாக நினைக்கும் மனிதன் இந்த அனர்த்தங்கள் வரும் நேரத்தை முன்கூட்டியே அறிந்திருந்தானா? அவற்றுக்கு தயாராக முடிந்ததா? அல்லது அவற்றைத் தடுக்க முடியுமா? போன்ற கேள்விகளைத் தொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
உலகிலேயே விஞ்ஞானத்திலும் தொழிநுற்பத்திலும் மிக உச்சத்தில் உள்ள அமெரிக்காவில் இடபெற்ற மாபெரும் அனர்த்தங்கள் அந்த நாட்டின் இயலாமைக்கு சான்றாகும்.
1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலால் அமெரிக்காவில் 6,75,000 பேர் உயிரிழந்தனர். 2020 டிசம்பர் நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்தமாக 1.6 கோடிக்கும் (16 மில்லியன்) அதிகமான COVID-19 நோயாளிகள் பதிவாகியிருந்ததுடன், உலகிலேயே அதிகமான COVID-19 தொடர்புடைய மரணங்களும் அமெரிக்காவில்தான் ஏற்பட்டன.
1900 செப்டம்பர் 18 அன்று டெக்சாஸ் மாநிலத்தின் கல்வஸ்டன் நகரத்தை தாக்கிய வெப்பமண்டல சூறாவளி, அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இயற்கை பேரழிவாகும். இதில் சுமார் 12,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
2017 செப்டம்பரில், ஹரிகேன் மரியா என்ற சக்திவாய்ந்த புயல் அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவை தாக்கியது. அதன் அழிவுகள் பல மாதங்கள் வரை தொடர்ந்தன. இதன் காரணமாக குறைந்தது 2,975 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது; இந்த புயல், போர்ட்டோ ரிகோவில் மட்டும் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதத்தையும், கரீபியன் பிராந்தியமெங்கும் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதத்தையும் ஏற்படுத்தியது.
https://www.evergladesuniversity.edu/…/worst-disasters…/
மனிதன் தனது நவீன நாகரிக முன்னேற்றத்தால் தன்னை யாராலும் அடக்கமுடியாது எனக் கருதுகிறான், ஆனால், இத்தகைய பேரிடர்கள் நிகழும் போது இயலாமையில் தடுமாறுகிறான். அவன் பெருமையை விட்டு விட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முன் பணிவுடன் தலைக்குனிய வேண்டும்; தன்னை தெய்வீக நிலைக்கு உயர்த்தும் அகந்தையை விட்டு, தனது படைப்பாளியை மட்டுமே வணங்க வேண்டும். இந்த யதார்த்தத்தை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகிறான்:-
“இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்.” (10:24)
எனவே இந்த அனர்த்தங்கள் உலக வாழ்வின் நிலையற்ற தன்மை, மனித ஆற்றல்களது வரையறுத்த தன்மை என்பவற்றை உணர்த்துவதற்கான அரிய சந்தர்ப்பம்.
- நிழலின் அருமை வெயிலுக்குப் போனால் தெரியும்
இத்தகைய அனர்த்தங்கள் அல்லாஹ் தந்துள்ள மகத்தான அருளை நாம் மறந்து விட்டோமோ அல்லது கவனிக்காமல் விட்டோமோ என்பதை நினைவூட்டுகின்றன. பூமியின் நிலைத்தன்மைக்கும் அமைதிக்கும் பழகிவிட்டதால் அதன் மதிப்பை உணராமல் போகிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: “நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?”
“உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).”
“அல்லாஹ் தான் உங்களுக்கு பூமியை நிலையான வாசஸ்தலமாகவும், வானத்தை ஒரு கட்டிடமாகவும்.”
“இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.” (நம்ல்: 61)
எனவே, மனிதர்கள் அல்லாஹ்வின் அருள்களை தொடர்ந்தும் அனுபவித்து வரும் போது அதன் அருமை பெருமை தெரியாமல் நன்றி செலுத்தாமல் வாழும் நிலை காணப்படும்.அப்போது அந்த அருள்களுக்கு சொந்தக்காரன் அனர்தங்களின் மூலம் மக்களை உணர்ச்சிபெறச் செய்கிறான்.
- சிலருக்கு நேரடியான தண்டணை
அனர்தங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் கோபத்தின் விளைவாகவும் அவை ஏற்படலாம் என்பதும் கசப்பான உண்மையாகும்.
இறைவனின் தூது கிடைத்தும் கூட, அதனை ஏற்காத அல்லது அதனை நடைமுறைப்படுத்தாதோர் இறை கோபத்துக்கு உள்ளாகுவர் என்பது குர்ஆன் கூறும் கருத்தாகும். அந்தவகையில், சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாட்டை தூதுவர்கள் அல்லது பிரசாரகர்கள் செய்தும் கூட அவற்றை ஏற்காமல் மக்கள் முரண்டுபிடித்து தொடர்ந்தும் பாவச் செயல்களில் ஈடுபடும் போது இறைதண்டனை வரும். ‘நாம் (அந்த மக்களிடம்) ஒரு தூதுவரை அனுப்பாமல் அவர்களைத் தண்டிக்க மாட்டோம். (இஸ்ரா-15) என அல்லாஹ் கூறுகிறான்.
“இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள்.ஆனால், அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை. இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.”(29:39,40)
“அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.”(42:30) என்ற அல்லாஹ்வின் கருத்து பாவங்களுக்கும் அனர்த்தங்களுக்குமான தொடர்பை தெளிவாகக் காட்டுகிறது.
“தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம். (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.” (28:58,59)
அந்தவகையில் முன்னர் வாழ்ந்த சமூகங்களுக்கு பலவிதமான தண்டனைகளை அல்லாஹ் இறக்கியுள்ளான்.
உதாரணமாக:-
- பூமிக்குள் இழுத்தல்
- கடும் சத்தம்
- கடும் காற்று
- பிரளயம்
- உருமாற்றம்
- அச்சுறுத்தலாக சில நிகழ்வுகள்
பாவங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் தமது பாவங்களை தொடராமல் அவற்றை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலபோது அல்லாஹ் சில அனர்த்தங்களை உலகில் ஏற்படுத்துவான். அவற்றின் மூலம் அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஆனால்.அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்தால் எதிர்காலத்தில் கடும் தண்டணை வரும் என இதன் மூலம் அல்லாஹ் எச்சரிப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்:“நாங்கள் இந்த அடையாளங்களை அச்சுறுத்துவதற்காகவே அனுப்புகிறோம்.”(இஸ்ரா : 59)
இமாம் கதாதா (ரஹ்) அவர்கள் கூறினார்:“அல்லாஹ் தன் அடையாளங்களில் எவற்றை விரும்புகிறானோ அவற்றின் மூலம் மக்களை அச்சுறுத்துகிறான்; அவர்கள் பாடம் படிக்க வேண்டும், அல்லது நினைவுகூர வேண்டும், அல்லது அவனிடமே திரும்ப வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பாகும்”
“(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா?”
எனவே, நோயை, வறுமையை முதலில் அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் அவற்றைப் பார்த்து படிப்பினை பெறுகிறார்களா என பார்ப்பான்.
ஆனால், அவர்கள் தொடர்ந்தும் தமது நிலைகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததாகவும் பின்னர் என்ன நடந்தது என்றும் பின்வருமாறு கூறுகிறான்:-
“அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”(6:42-45)
எனவே, சிலபோது அனர்த்தங்கள் அபாய அறிவுப்புக்களாக வரலாம்.அதன் மூலம் மக்கள் படிப்பினை பெறாது போனால் பெரிய தண்டணையை அல்லாஹ் இறக்குவான்.
6 .ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அமையும்
ஒரே நிகழ்வு ஒருவருக்கு ஒரு மாதிரியும் மற்றொருவருக்கு இன்னொனொருவருக்கு இன்னொரு மாதிரியும் அமையாலாம். உதாரணமாக ஒருவரை அல்லாஹ் இறக்கச் செய்வது அவருக்கு நலவாக அமையும். மற்றொருவரை இறக்கச் செய்வதன் மூலம் உலகத்துக்கு அதன் மூலம் பயன் கிட்டும். அதாவது அவரது தொல்லைகளில் இருந்து உலக மாந்தர்கள் விமோசனமடைவார்கள்.
இக்கருத்து பின்வரும் ஹதீஸில் இருந்து தெளிவாகிறது:-
இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன’ என்றார்கள்.(புகாரி: 6512)
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்:- நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் “அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால்) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான்” எனத் தெரிவித்தார்கள். (புகாரி: 5734)
எனவே, அனர்தங்களால் பாதிக்கப்படும் சிலர் நல்லவர்களாகவும் மற்றும் சிலர்
பாவிகளாகவும் இருப்பர் என்பதையும் நல்லவர்கள் பாதிக்கப்பட்டு அதன் போது அல்லாஹ் எதிர்பார்த்தபடி அவர்கள் நடந்து கொண்டால் அவனது மகத்தான கூலிகளைப் பெறுவர் என்பதையும் இதன் மூலம் புரியமுடியும்.
7 .சோதனைகள் அருளாக அமையும்
விபத்துக்கள், நோய்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இறைவனின் அருளாகவும் பாவங்களுக்கான பரிகாரமாகவும், மறுமை ஈடேற்றத்துக்கு வழிவகுப்பவையாகவும் கருணையாகவும், தரங்களை உயர்த்தவும் காரணமாகிறன.
அல்லாஹ் கூறுகிறான்:“நாங்கள் உங்களை பயம், பசி, செல்வ இழப்பு, உயிரிழப்பு, விளைச்சல் இழப்பு ஆகியவற்றால் சோதிப்போம்; பொறுமையுள்ளோருக்கு நற்செய்தி.”(பகரா: 155)
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய சில நபி மொழிகள் இந்த உண்மையை புலப்படுத்துகின்றன.
உதாரணமாக ‘உயிர்த்தியாகிகள் (ஷஹீதுகள்) ஐந்துவகைப்பவடுவர். கொள்ளை என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர், வயிற்றில் ஏற்படும் நோயினால் இறப்பவர்கள், நீரில் மூழ்கி இறப்பவர்கள், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவர்கள், இஸ்லாமிய யுத்த களத்தில் போராடி இறப்பவர்கள்.’ (புகாரி: 2829)
மற்றுமொரு ஹதீஸில், தீக்காயங்களுக்கு உள்ளாகி இறப்பவர்கள், பிள்ளைப் பேறின் போது (சிசுவோடு) இறக்கும் கர்ப்பிணிப் பெண் ஆகியோரும் ஷஹீதுகள் என்றும் நபிகளார்(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூதாவூத்: 3111, நஸாயீ :1846, அஹ்மத்:23804)
அதாவது இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகள் பெறும்பாலும் பேரதிர்ச்சியைத் தருபவையாக அமையும். மேலும் உயிர் பிரியும் போது உடலுக்கு அதிக வலியையும் வருத்தத்தையும் கொடுக்கும். அவை அல்லாஹ்வின் நாட்டப்படி மனிதன் மீது ஏற்படுத்தப்படுவதனால் அதற்குப் பகரமாக அல்லாஹ் ‘ஷஹீது’ என்ற உயர் பதவியை அவனே வழங்குகிறான். இது அவனது பேரருளுக்கான சிறந்த அத்தாட்சியாகும். இப்படியான அனர்த்தங்களில் சிக்குபவர்கள் தமக்கு இறை அருளும் நற்பேறும் கியாமத் நாளில் நிச்சயமாகக் கிட்டும் என நம்பி மன நிறைவடையலாம்.
காளி இயாள் (ரஹ்): “இந்த அந்தஸ்துக்கள் அவர்களுடைய கடுமையான வேதனை மற்றும் துன்பத்தால், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஒரு ‘சிறப்பு’ ஆகும்.அத்தகைய துன்பத்தைத் தாங்கி மரணமடைந்ததால், அல்லாஹ் அவர்களுக்கு ஷஹீதுகளின் நன்மையை அளித்தான்.அல்லது, அவர்கள் மரணத்தின் வேதனையின் போது, அல்லாஹ் அவர்கள் காத்திருக்கும் பெரும் நன்மையை ‘பார்க்கும்’ நிலையை அடைவதால், அவர்கள் ‘ஷஹீத்’ என அழைக்கப்படுகிறார்கள்.”எனக் கூறினார்.
மேலும் ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் கொள்ளை நோய் பற்றிக் கூறுகையில், “(இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்.”(புகாரி:5734) எனத் தெரிவித்தார்கள்.
எனவே, இங்கு அடியார்கள் தாமாகத் தேடிக் கொள்ளாத, ஆனால் அல்லாஹ் நாடி அனர்த்தங்களை, ஆபத்துக்களை அவர்கள் மீது உண்டு பண்ணும்போது இத்தகைய வெகுமதியை அவன் வழங்குகிறான். ஆனால் அந்த அனர்த்தங்களுக்கு உள்ளாகுபவர்கள் நல்லடியார்களான விசுவாசிகளாகவும் பொறுமை சாலிகளாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகக் கொள்ளப்படும்.
பாரிய அனர்த்தங்கள் அல்லது அழிவுகள் ஒரு புறமிருக்க ஒரு முஃமினுக்கு வரும் சின்னஞ் சிறிய இடுக்கன்கள் கூட அவனுக்கு அனுகூலமானதாகவே அமையும் என்பது பின்வரும் நபிமொழி தரும் பொருளாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.”(புஹாரி:5641)
எனவே, ‘யாவும் நலவுக்கே’ என்ற மனோபாவத்தில் ஒரு முஃமின் இருப்பதோடு அவற்றின் போது பொறுமை காப்பது அவனது சிறு பாவங்களுக்கான குற்றப்பரிகாரமாகவும் அமைந்திவிடும்.
இக்கருத்தை நபியவர்கள் “ஒரு முஃமினான ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உயிர்கள், சந்ததிகள், சொத்து செல்வங்கள் போன்றவற்றில் சோதனைகள் தொடர்ந்தும் உண்டு பண்ணப்பட்டால் அவர் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவர் மீது எவ்வித குற்றங்களும் (மாசுமறுக்களும்) இல்லாத நிலையில் தான் அவர் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்.” (திர்மிதி:2399,அஹ்மத்: 7859) என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றின் பொருள், நோய்க்கு மருந்து செய்யாமல், அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் அல்லாஹ்வின் விதியில் பாரத்தைப் போட்டுவிட்டு வாளாதிருப்பவர்களுக்கும் இந்தப் பேறு கிடைக்கும் என்பதல்ல. மாறாக உலகின் வாழ்வாங்கு வாழ்வதற்கான தன்னாலான சகல ஏற்பாடுகளையும் செய்த போதிலும் அவை தோல்வி காணும் போது அதாவது, இறை சித்தம் யாவற்றையும் மிகைக்கும் போது மாத்திரமே இந்தப் பேறுக்கு அவர்கள் அறுகதையுடையவராவார் என்பது கவனிக்கத்தக்கதாகும். (இது பற்றிய விரிவான விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் வரும்)
உலக வாழ்வின் இத்தகைய தவிர்க்க முடியாததும் எதிர் பாராததுமான நிகழ்வுகள் மனித மனங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து மறுமையின் நிரந்தரத் தன்மையை சதாவும் மனதில் இருத்தி வாழ்பவர்கள் மறுமையில் பெறும் கூலிக்கு நிகரில்லை. ‘நிச்சயமாக பொறுமையாக இருப்பவர்கள் தமக்கான கூலியை எவ்வித வரையறைகளுமின்றி நிரப்பமாகப் பெறுவார்கள்’ (ஷுமர் 10) என அல்லாஹ் கூறுகிறான்.
“உலகில் சோதனைகளுக்கு உள்ளானவர்களுக்கு மறுமையில் நன்மை வழங்கப்படும் போது, உலகில் ஆரோக்கியமாக (நல்ல நிலையில்) வாழ்ந்தவர்கள், “நாங்கள் உலகில் வாழும்போது எங்களுடைய தோல்கள் கத்திரிக்கோலால் வெட்டப்பட்டிருக்க வேண்டுமே!” என்று ஆசைப்படுவார்கள்”என நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ:2402)
நபி(ஸல்) அவர்கள் இன்னொரு ஹதீஸில் கூறினார்கள்:“முஃமினின் நிலை மிகவும் ஆச்சரியமானது! அவனது அனைத்து நிலையும் அவனுக்கு நன்மையே. இது முஃமினைத் தவிர வேறொருவருக்கில்லை.அவனுக்கு நன்மை ஏற்பட்டால் நன்றி கூறுவான் .அது அவனுக்கு நலவாக அமையும் .துன்பம் ஏற்பட்டால் பொறுமை காட்டுவான் .அது அவனுக்கு நலவாக அமையும்.”(முஸ்லிம் :2999)
அல்லாஹ் தன் அடியார்களை அவர்களின் ஈமான் உண்மையா என்பதைச் சோதிப்பதற்காக பரிசோதிக்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் கதவினை பற்றிக்கொண்டு தாழ்மையுடன் இருக்கிறார்களா என்பதை பரீட்சிக்க இவ்வாறு செய்கிறான்.
“சோதனை பெரியதாக இருக்கும் அளவுக்கு கூலி(நன்மை)யும் பெரியதாக இருக்கும். எந்த சமூகத்தை அல்லாஹ் நேசிக்கிறானோ அவர்களை அவன் சோதிப்பான். யார்(சோதனையை) திருப்தியோடு ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தி கிட்டும். யார் அதிருப்தியடைவார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் அதிருப்தி கிட்டும்.” (திர்மிதீ:2396, இப்னு மாஜா:4031)
மற்றொரு ஹதீஸில் ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி:2396)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் கூறினான்: “இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.” (புகாரி :6424)
எனவே,அல்லாஹ் எமக்கு ஏதாவது ஒரு சோதனையைத் தரும் போது அல்லது எம்மிடமிருந்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளும் போது அதனை நாம் எமக்கான தண்டணையாகப் பார்ர்க்காமல் எமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான எமது நன்மைகள் அதிகரிப்பதற்கான பாக்கியமாகவே அவற்றைக் கருத வேண்டும். அனர்த்தங்களின் போது நல்லடியார்கள் பாதிக்கப்பட்ட வேளைகளில் அவர்களும் மற்றோரும் இந்த மனோநிலையில் இருந்து பொறுமை காத்து அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்தால் இன்ஷா அல்லாஹ் அது ஈமானிய வெளிச்சத்தைத் தந்து வீணான, ஷைத்தானிய எண்ணங்களில் இருந்து யாவரையும் பாதுகாக்கும்.விரக்தி, தோல்வி மனப்பான்மை என்பன வரவே வரமாட்டாது.
- இரவலாகத் தந்ததை மீளப்பெறுவது
இந்த உலகில் மனிதன் சொந்தமாக வைத்திருக்கும் அனைத்தும் அவை சொத்து செல்வங்களாகவோ அவனது உடலாகவோ மனைவி மக்களாகவோ அல்லது ஆற்றல்களாகவோ இருந்தாலும் அவை அடிப்படையில் அவனுக்குரித்துடையவை அல்ல. எல்லாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும்.அந்த மனிதன் இறக்கும் போது உலகிலிருந்து எதையுமே தன்னோடு எடுத்துச் செல்வதில்லை. எனவே, அல்லாஹ் எமக்கு இரவலாகத் தந்தவற்றை எம்மிடமிருந்து எப்படியும், எந்த வேளையிலும் எடுத்துக் கொள்ளும் பூரண உரிமை அவனுக்குண்டு. ஏன் என எமக்கு கேள்வி கேட்க முடியாது.‘அவன் செய்யும் எதுபற்றியும் அவன் எவராலும் விசாரிக்கப்படமாட்டான். அவர்கள் (அவர்கள் செய்யும் கருமங்கள் பற்றி) விசாரிக்கபடுவார்கள்.’(அல் அன்பியா- 23) சுனாமி, தித்வா போன்ற ஏதாவது ஓர் அனர்த்தத்தை அனுப்பி அவன் தன்பால் தனது உயிர்களையும் சொத்துக்களையும் எடுத்துக்கொள்வான்.
அபூதல்ஹா(ரழி)வின் ஒரு குழந்தை நோயினால் இறந்த போது அது பற்றி மனைவி உம்மு ஸுலைம்(ரழி) கணவனுக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் இங்கு எமது சிந்தனைக்கு உரியவையாகும்:- “ஒரு சாரார் தமது பொருளொன்றை இன்னொரு வீட்டாருக்கு இரவலாகக் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம்.கொடுத்தவர்கள் அந்த இரவல் பொருளை திருப்பித் தரும்படி வேண்டும் போது தரமாட்டோம் எனக் கூற முடியமா?” என உம்மு ஸுலைம்(ரழி) கேட்ட போது கணவர் “ஆட்சேபனை தெரிவிக்க முடியதே” என்றார். அப்போது உம்மு ஸுலைம் “உங்களது (இறந்த) மகன் விடயமாக பொறுமையைக் கடைப்பிடித்து அதன் கூலியை அல்லாஹ்விடம் எதிர்பாருங்கள்” என்றார்கள். (முஸ்லிம் 4/1909)
முழுப் பிரபஞ்சத்திலுள்ள சடப்பொருட்கள், வாயுக்கள், உயிர்கள், மலக்குகள் போன்ற எல்லாப் படைப்பினங்களதும் உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான். ‘வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும்.’(பகரா: 284) என அல்லாஹ் கூறுகிறான்.
எனவே, மனிதன் ‘தனக்குரியவை’ என்று நினைக்கும் அனைத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். ஏதும் துன்பங்கள் பீடிக்கின்ற போது முஃமின் மொழிய வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கும் வாசகம் பற்றி அல்லாஹ் கூறும் போது: “அவர்களுக்கு ஏதும் சோதனைகள் வந்தால், ‘இன்னா லில்லாஹி வ இன்னா லில்லாஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம்) என்று கூறுவார்கள்” என்கிறான். (பகரா – 156)
இந்த உயர்ந்த மனோநிலைக்கும் அழகிய வார்த்தைக்குமான வெகுமதியாக ‘இவர்களுக்குத் தான் அவர்களது இரட்சகனிடமிருந்து புகழ்ச்சியும், பாவமன்னிப்பும் கிட்டும். இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்”.(பகரா:157) என்று கூறுகிறான்.
எனவே, மனிதர்களுக்கு தரப்பட்டவை அவர்களுக்கு உரியவையல்ல என்ற ஆழமான நம்பிக்கை அவர்களது மனதில் வேரூன்றுகின்ற அளவுக்கு அவர்களது ஈமான் பலமடையும். கூலியும் கிட்டும்.
- மறுமை நிகழ்வுகளை நினைவூட்ட
நிலநடுக்கம் அல்லது வெள்ளம் எனும் அனர்த்தம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தாலும் அது கட்டடங்களை வீழ்த்திவிட்டது. வீதிகளை சேதப்படுத்தி விட்டது. நிலத்தை பிளந்துவிட்டது, வீடுகளை இடித்துவிட்டது, மக்களை சிதறி ஓடச் செய்துவிட்டது. அவர்களை பயமும் பதட்டமும் ஆட்கொண்டுவிட்டன. அந்த கோர நிகழ்வுகள் இதயங்களை பிடுங்கியெறியப் பார்த்தன.
இந்த உலகில் சில வினாடிகளே நீடித்த ஒரு நிலநடுக்கத்தால் அல்லது வெள்ளத்தால் இவ்வாறு நிகழ்ந்தால் அல்லாஹ் மறுமை நிகழ்வதற்கு முன்னால் தான் ஏற்படுத்தும் சம்பவங்களது தன்மை பற்றிக் கூறும்போது “பூமி தனது நிலநடுக்கத்தால்(கடுமையாக) குலுக்கப்படும் போது.(99:01) “பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.”(56: 4-5) என அதனை விப்ரிக்கிறான். அப்படியாயின் அந்த நிகழ்வின் பயங்கரம் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். கியாமத்துக்கான முன்னோட்டங்களாக இவை அமையக்கூடும்.
இது இவ்வாறிருக்க கியாமத் நெருங்கும் போது பூமியதிர்வுகள் அதிகமாகும் என்றும் ஹதீஸ்களில் வந்துள்ளது. “அறிவு கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிகரித்து, காலம் நெருங்கி,சோதனைகள் வெளியாகி, கொலைகள் அதிகரித்து,உங்களுக்கு மத்தியில் சொத்து செல்வங்கள் பெருகும் வரை மறுமை நாள் ஏற்படமாட்டாது.” (புகாரி:1036) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- கெட்டவர்களுக்கும் நல்லவர்களுக்கும் சேர்த்தே தண்டணை
ஆனால், சிலபோது இந்த அனர்த்தங்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கான தண்டனையாகவும் அமையும் என கூறமுடியும். அதாவது அந்த நல்லடியார்கள் தம்மைச் சூழ நிகழும் பாவங்களைப் பற்றிய கரிசனையின்றி, நன்மையை ஏவி தீமையைத் தடுக்காது, ‘தாமும் தம்பாடும்’ என வாழ்ந்தால் தீயவர்களுக்கு இறங்கும் தண்டனை இந்த நல்லடியார்களையும் சேர்த்தே தாக்கும்.
எனவே, அல்லாஹ்! ‘உங்களில் அநீதி இழைத்தவர்களை மட்டுமே பாதிக்காத தண்டனையை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ (அன்பால் – 25) என்று கூறுகிறான்.உலகுக்கு இறங்கும் தண்டனை அநீதியை சகித்துக் கொண்டு வாய்மூடி இருந்தவர்களையும் சூழ்ந்து கொள்ளும் அபாயம் இருப்பதாக அல்லாஹ் இங்கு எச்சரிக்கிறான்.
ஒரு கப்பலில் பிரயாணம் செய்யும் கூட்டத்தார் பற்றி வந்த ஒரு ஹதீஸில்,கப்பலின் கீழ்மாடியில் இருப்போர் தமக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது கப்பலை துளை செய்து கடல் நீரைப் பெற முயற்சிக்கையில் மேல்மாடியில் இருந்தவர்கள் அது கீழ்மாடியில் உள்ளவர்களது செயல் தானே என வாய்மூடி இருந்ததால் கப்பலினுள் வரும் தண்ணீரினால் எல்லோரும் சேர்ந்து மூழ்கும் ஆபத்து ஏற்படும் என நபி(ஸல்) கூறியுள்ள ஹதீஸ் புகாரியில்(2493) பதிவாகியுள்ளது.
‘மக்கள் ஓர் அநியாக்காரனைக் கண்டும் அவனைத் தடுக்காவிட்டால் அல்லாஹ் தனது தண்டனையை அனைவருக்கும் பொதுவாகவே (நல்லவர் கெட்டவர் என்று பாராது) அனுப்புவான்’
(அபூதாவூத்:4338, திர்மிதி:3057) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, அந்த பாவிகளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நன்மக்கள் தீமைகளை தடுக்க வேண்டிய விதத்தில் தடுக்காதவர்கள் மற்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டும் திருந்தாதவர்கள் ஆகிய மூன்று சாராரும் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படலாம்.
ஒருதடவை நபி(ஸல்) அவர்களிடம் ‘எமக்கு மத்தியில் ஸாலிஹானவர்கள் (நன்மக்கள்) இருந்தாலும் நாம் அழிக்கப்படுவோமா?’ என வினவப்படுவதற்கு “ஆம். பாவச் செயல்கள் அதிகரிக்கும் போது” என அன்னார் பதிலளித்தார்கள். (புகாரி;3346, முஸ்லிம்:2880)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருதடவை: “ஒரு படையினர் கஃபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட ஆயிஷா(ரழி): ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!’ எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!’ என்றார்கள். (புகாரி: 2118)
எனவே, கெட்டவர்களுக்கு இறங்கும் தண்டனை அவர்களுக்கு அருகில் இருக்கும் நல்லவர்களுக்கும் சேர்ந்து இறங்கும் என்ற கருத்தை நபி(ஸல்) இங்கு குறிப்பிடுவதுடன் மறுமையில் மாத்திரம் கேள்வி கணக்கின் போது எண்ணம் பார்க்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
- தெளபாவும் பிறஅமல்களும்
இந்த சம்பவங்களைக் காணும் ஒவ்வொருவரும் இனிமேல் இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தாமலிருக்கும் அல்லாஹ்விடம் படிபணிவுடன் வேண்டுதல் செய்யவும் அவன்பால் முழுமையாக திரும்புவதற்கும் பாவங்களை முற்றிலும் கைவிட்டு தாமதமின்றி தவ்பா (பச்சாதாபம்) செய்து, இஸ்திக்ஃபார் (மன்னிப்பு வேண்டுதல்) செய்யவும் முயற்சியெடுக்க வேண்டும். இவ்வாறான எச்சரிக்கைச் சம்பவங்களைப் பார்ப்போர் ஏன் தெளபா செய்யாமல் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கேட்கிறான்.“எமது தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் ஏன் பணிவுடன் வேண்டவில்லை?”
(அல்அன்ஆம் : 43) “அவர்கள் மன்னிப்புக் கோரி கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவன் அல்ல.”(அல்-அன்ஃபால் : 33)
அதேபோல் தொழுகையை நிறைவேற்றுவதும், துஆவின் மூலம் அல்லாஹ்விடம் தொடர்ச்சியாகவும் உறுதியுடனும் வேண்டிக்கொள்வதும், திக்ர் ஸதகா வழங்குதல் மற்றும் அல்லாஹ்வின் தண்டனை மற்றும் கோபத்தைக் தவிர்ப்பதற்கான பிற காரியங்களை மேற்கொள்வது, ஸலாதுல் ஆயாத்’,’குனூதுன் நவாஸில்’,என்பவற்றில் ஈடுபடுவதும் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசும் போது துஆக்கள் செய்வதும் அவசியமாகும்.
- பாதிகப்படாதவர்களுக்கு சோதனை
இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்து இழப்புக்களை மக்கள் சந்திக்கும் போது அவற்றால் பாதிக்கப்படாதவர்களுக்கு அது ஒரு சோதனையாக அமையும்.அதாவது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்களா? என அல்லாஹ் அவர்களை சோதிக்கிறான்.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் கஷ்டம் துன்பங்களில் சிக்கியிருப்போருக்கு கைகொடுப்பதற்கும் தமது செலவங்களில் இருந்து உதவி செய்யாமல் சுயநலமிகளாக தமது சொத்துக்களைப் பதுக்கி வைப்பவர்களுக்கு கடும் தண்டணை உள்ளதாக அல்லாஹ் பின்வருமாறு எச்சரிக்கிறான்:-
“இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!”. (9:34)
“அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால், எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)
மாறாக, தேவையுடையோருக்கு தமது உடலால் சொத்துக்களால் உதவி செய்து இல்லிடஙகளை இழந்திருப்போருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை அல்லாஹ் பின்வருமாறு புகழுகிறான்:-
“நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள்” (8:72)
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)



