முதியோருக்கான உரிமைகள்

தொகுப்பு:-அஷ்ஷைக் எஸ்.எம்.எம் பளீல்(நளீமி)

முதுமை அனைவருக்கும் சொந்தம்

மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை

  1. குழந்தைப் பருவம்,
  2. இளமைப்பருவம்,
  3. முதுமைப்பருவம்.

“அல்லாஹ் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையையும்) நரையையும் இறைவன் ஆக்கினான்.” திருக்குர்ஆன் (30:54)

இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கின்றன. முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்களுக்கு சரியாக‌ சாப்பிட முடியாது; சரியாக‌ நடக்க முடியாது. சரியாக‌ தம்முடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது.

ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்று பிள்ளைகளை சார்ந்து வாழும் பருவம் தான் முதுமைப்பருவமாகும்.

நாமும் ஒரு நாள் இது போன்ற நிலையை அடைந்தால் பிறருடைய உதவி நமக்கும் தேவைப்படும் என்பதை உணராமல் இன்றைக்கு முதியவர்களை கண்டும் காணாமல் தற்காலத்தில் பலர் இருக்கிறார்கள். இவ்வாறு கவனிப்பரற்ற நிலையில் உள்ள முதியோர்கள் தாமும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது.

எனவே தான் நபி ﷺ அவர்கள் தள்ளாத வயதை விட்டும் இறைவனிடத்தில் அதிகமாக‌ பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

قال سعد بن أبي وقاص كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يُعَلِّمُنَا هَؤُلَاءِ الكَلِمَاتِ، كما تُعَلَّمُ الكِتَابَةُ: اللَّهُمَّ إنِّي أعُوذُ بكَ مِنَ البُخْلِ، وأَعُوذُ بكَ مِنَ الجُبْنِ، وأَعُوذُ بكَ مِن أنْ نُرَدَّ إلى أرْذَلِ العُمُرِ، وأَعُوذُ بكَ مِن فِتْنَةِ الدُّنْيَا، وعَذَابِ القَبْرِ. )صحيح البخاري 6390)

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ‘எழுத்து கற்பிக்கப்படுவதைப் போன்று இந்த (பிரார்த்தனை)ச் சொற்களை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கற்பித்து வந்தார்கள். “இறைவா! உன்னிடம் நான் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். உன்னிடம் நான் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புக்கோருகிறேன். நாங்கள் தள்ளாடும் வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.” (புஹாரி -6390)

” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن الْعَجْزِ)رواه البخاري)

“இறைவா! இயலாமையிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.” (புஹாரி 6363)

வயது முதிர்ந்த பெற்றோர்

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!”

முதிர்ந்த பெற்றோர்களை நாம் கைவிட்டால் இறையருள் நம்மை விட்டும் தூரமாகிடும்:-

رغِمَ أَنفُ رجلٍ ذُكِرتُ عندَهُ فلم يصلِّ عليَّ ، ورَغِمَ أنفُ رجلٍ دخلَ علَيهِ رمضانُ ثمَّ انسلخَ قبلَ أن يُغفَرَ لَهُ ، ورغمَ أنفُ رجلٍ أدرَكَ عندَهُ أبواهُ الكبرَ فلم يُدْخِلاهُ الجنَّةَ) . أخرجه الترمذي (3545) واللفظ له، وإدراك الأبوين أصله في -صحيح مسلم 2551)

‘வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ; அல்லது ஒருவரையோ பெற்றிருந்து அவர்களின் மூலம் (அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுக்காமல்) சுவனம் செல்லாமல் போய் விட்டவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும்’ என்ற ஜிப்ரயீல் [அலை] அவர்களின் துஆவிற்கு நபி ﷺ அவர்கள் ஆமீன் சொன்னார்கள். {திர்மிதீ}

நாம் நம் பெற்றோர்களை நம் பிள்ளைகளுக்கு முன்னிலையில் மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது. அது அவர்களது மனதில் பதிந்து விடும். அவர்கள் நாளை நம்மையும், நம்முடைய முதுமையின் பொழுது இப்படித்தான் நடாத்தப் போகிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க போவதில்லை.

தான் சிறு குழந்தையாக இருக்கும் போது தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் வயது முதிர்ந்த உடன் அவர்களுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராமல் பலர் தங்கள் பெற்றோரை கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் கவனிப்பில்லாமையால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் செய்யும் 100 தவறுகளை பெற்றோர் மன்னிக்க தயங்குவதில்லை. ஆனால் பெற்றோர் தெரியாமல் செய்யும் ஒரு தவறைக் கூட பிள்ளைகள் மன்னிக்க தயாராவதில்லை.

1.ஸலாம் சொல்வதில் முன்னுரிமை

பெரியவருக்கு மரியாதை செய்து பணிவாக நடக்க வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலாம் சொல்லும் ஒழுங்கு முறை:-

يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ. ‏‏ رواه البخاري

“சிறியவர்கள் பெரிவர்களுக்கு சலாம் சொல்லட்டும்.” [புகாரி 6231]

2.முன்னுரிமையும் ஆலோசனையும்

சில குடும்பங்களில் பெரியவர்கள் பெரும்பாலான விஷயங்களில் ஒதுக்கப்படுகின்றார்கள். வயதாகி விட்ட காரணத்தினால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அளிப்பதில்லை. அவர்களிடத்தில் ஆலோசனை செய்யாமல் பல காரியங்கள் நடத்தப்படுகின்றன. மூத்தோர் சொல் அமிழ்தம்’ என்பது பழமொழி. உண்மை தான். ‘அறிவாளியிடம் கேட்பதை விட ஒரு அனுபவசாலியிடம் கேள்’ என அரபியிலே ஒரு பழமொழி உண்டு.

இவ்வுலகத்தின் சகல காரியங்களிலும் முதிர்ச்சியை நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள் முதியோர்கள் மட்டுமே. முதியோர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உலகிற்கான உயிர் நாடியாகும்.

“சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்”.(3: 159)

“இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.” 42:38

3.இமாமத்தில் முன்னுரிமை

أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم” إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا” (رواه البخاري)

பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்லப்பட்ட பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள். [புகாரி 630]

இஸ்லாமிய சமூகத்தில் குர்ஆனை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கும் உயரிய அந்தஸ்து உண்டு. அவர்களை சபைகளிலும் தொழுகைக்கு இமாமாகவும் முன்னிலைப்படுத்த வேண்டுமென நபிமொழி வலியுறுத்துகிறது.

“ஒரு கூட்டத்திற்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் சுன்னாவில் சமமாக இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் மூத்தவர் இமாமத் செய்யட்டும்..” [முஸ்லிம் 1192]

  1. முதியோரைக் கவனித்து இமாமத்

வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரம் தொழ நின்றால் அது அவர்களுக்குக் கஷ்டத்தைத்தரும் என்பதால், மக்களுக்குத் தொழ வைப்பவர் சுருக்கித் தொழ வேண்டும் என்று நபியவர்கள் கூறியது அவர்களை எந்த நிலையிலும் சிரமப்படுத்தக்கூடாது என்பதனை தெரியவருகிறது.

قَالَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ. رواه البخاري

“உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்!” (புகாரி 703)

நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்த போது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹமான் இப்னு ஸஹல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”பெரியவர்களுக்கு மரியாதை கொடு”என்றார்கள். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் மெளனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர்.

5.எதிலும் முதியோருக்கு முன்னுரிமை

ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பது தான்”. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

  1. முஸ்லிம் சமூகத்தில் இருந்து விலகல்!

பெரியவர்கள், சிறியவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். சிறியவர்கள் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவற்றைச் செய்யாதவர்கள் முஸ்லிம் சமூக உறுப்புரிமையை இழப்பார்கள்.

ليسَ منَّا من لَم يَرحَمْ صغيرَنا ، و يعرِفْ حَقَّ كَبيرِنا أخرجه أبو داود (4943)، والترمذي (1920)، وأحمد (6733) واللفظ له

நபி (ஸல்) அவர்கள் :“எமது சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், எமது பெரியவர்களது உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.” (ஸுனன் அபூதாவூத்,அஹமத்,திர்மிதீ) எனக் கூறினார்கள்.

மேலும்,

ليس منا من لم يُوَقِّرْ كبيرَنا (صحيح الجامع الرقم : 5445

“யார் நமது பெரியவருக்கு மரியாதை செய்யாமல் இருக்கிறார்களோ அவர் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்லர்” என்றும் கூறினார்கள்.(ஸஹீஹுல் ஜாமிஉ 5445)

மேற்கூறிய நபிமொழி என்பது இருபிரிவினருக்கும் இடையே ஒரு பாலம் போல அமைகிறது. முதியவர்களுக்கு உரிய மரியாதையை சிறியவர்கள் கொடுக்கும் போது சிறியவர்களுக்கு காட்ட வேண்டிய இரக்கத்தை முதியவர்கள் காட்டுவார்கள். முதியோர் மதிக்கப்படுவதும், சிறியவரைவிட அவரை முன்னிலைப் படுத்துவதும் இச்சமூக மேன்மையின் அடையாளமாகும். மேலும் அது இச்சமூகத்தவர்கள், மனிதநேயப் பண்புகள் குறித்து, அறிந்தவர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கான ஆதாரமாகும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை முஸ்லிம்களின் உள்ளத்தில் உறுதிப்படுத்தி அப்பண்புகளின் அவசியத்தை உணர்த்தினார்கள்.

  1. மூத்தவர்களுக்கு இப்படி ஒரு மரியாதை

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மெளனமாக இருந்து விட்டார்கள். இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது ‘பேரீச்ச மரம்’ என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ”அது பேரீச்ச மரம்” என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ”எனது தந்தையே என் மனதில் ‘பேரீச்சமரம்’ என்று தோன்றியது” என்றேன். அவர்கள் ”அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?” அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே” என்றார்கள். ”உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்” என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

  1. அல்லாஹ்வுக்கு கண்ணியம் வழங்கியமைக்கு நிகரான செயல்!

إنَّ من إجلالِ اللَّهِ إِكْرامَ ذي الشَّيبةِ المسلِمِ ، وحاملِ القرآنِ غيرِ الغالي فيهِ والجافي عنهُ ، وإِكْرامَ ذي السُّلطانِ المقسِطِ (صحيح أبي داود 4843 )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”முஸ்லிமான நரை வந்தவரையும், குர்ஆனில் வரம்பு மீறாமலும்,அதைப் புறக்கணிக்காமலும் இருந்து அதனை சுமப்பவரையும், கண்ணியப்படுத்துவது, நீதம் செலுத்தும் அதிகாரியை கண்ணியப்படுத்துவது ஆகியன அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதில் சேர்ந்ததாகும்.” (ஸுனன் அபூதாவூத்)

ما أَكْرمَ شابٌّ شيخًا لسنِّهِ إلَّا قيَّضَ اللَّهُ لهُ مَن يُكْرمُهُ عندَ سنِّهِ (أخرجه الترمذي (2022) واللفظ له)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஓர் இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்காக அவருக்கு கண்ணியமளித்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில் அவனை கண்ணியம் செய்யக் கூடிய ஒரு நபரை அல்லாஹ் ஏற்படுத்துவான்’ என்றார்கள்.

இஸ்லாம், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமென தனித்தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

تقولُ عائشة أم المؤمنين أَمرَنا رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أنْ نُنزِّلَ الناسَ مَنازلَهُمْ

(أخرجه أبو يعلى في ((مسنده)) (8/ 246)، وأبو نعيم في ((حلية الأولياء)) (4/ 379)، والبيهقي في ((الشعب -7/ 462).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை அவர்களுக்குரிய அந்தஸ்தில் வைக்குமாறு எங்களை ஏவினார்கள்.”

ஒருவரை அவரது அந்தஸ்துக்கேற்ப மதிக்க வேண்டுமெனில், அவர்களது அந்தஸ்தை அறிந்திருக்க வேண்டும். முதலில் மார்க்க அறிஞர்கள், குர்ஆனை இதயத்திலும் செயலிலும் சுமந்திருப்போர், மேதைகள் மற்றும் சான்றோர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

அல்லாஹவின் மார்க்க நெறியில் நம்பிக்கையாளர்களாக இருந்து, சத்தியத்தை உரக்கச் சொல்லி, இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாப்பதை பணியாகக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் பெரும் அந்தஸ்தும் உயர்வும் உண்டு.

(நபியே) நீர் கேளும்: கல்வி அறிவுடையோனும் கல்வி அறிவில்லா தோனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் எல்லாம் (கல்வி) அறிவுடையோர்தாம். (அல்குர்ஆன் 39:9)

சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஐ.நா சபை ஒக்டோபர் 01 ஆம் திகதியை சர்வதேச சிறுவர்கள் தினமாகவும் அதேபான்று முதியோர்களைக் கொண்டாடும் வகையில் சர்வதேச முதியோர் தினமாகவும் இந்நாளை பிரகடனம் செய்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் அந்தஸ்திற்கேற்ப மதிப்பளிக்க வேண்டுமென்பதை தொழுகைக்கான அணிவகுப்பை சரி செய்தபோது அவர்கள் கூறியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”எனக்குப் பின் வரிசையில் உங்களிலுள்ள சான்றோர்களும் கல்விமான்களும் நிற்கட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ليلينِّي منكم أولو الأحلامِ والنُّهى ثمَّ الَّذينَ يلونَهُم ثمَّ الَّذينَ يلونَهُم (أخرجه مسلم (432)، وأبو داود (675)،

மேற்கூறப்பட்ட நபிமொழி, மனிதர்கள் அந்தஸ்த்துக்கேற்ப மதிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக விவரிக்கிறது.

அறிவுடையோர்களும், சான்றோர்களும் தங்களது அந்தஸ்த்திற்கேற்ப முஸ்லிம்களின் பல்வேறு காரியங்களுக்குப் பொறுப்பேற்பவர்கள் என்ற காரணத்தினால் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தினார்கள். ”ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் சான்றோர்களுக்கு கண்ணியத்தில் முதலிடம் அளித்தார்கள். மார்க்கப் பற்றில் உள்ள அந்தஸ்த்திற்கேற்ப கண்ணியமளித்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கைக் குரியவராக இருப்பவரை சங்கை செய்தார்கள், அவரையே அக்கூட்டத்தின் தலைவராகவும் ஆக்கினார்கள்.

ஒரு நாள் ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அன்னவர்களிடம் வந்த பொழுது அவருடைய முகம் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளதே! என்ன காரணம்? என்று கேட்டார்கள். ஒன்றுமில்லையே இறைவனின் தூதரே! என்றார்கள் அலீ (ரலி) அவர்கள். இல்லை! ஏதோ ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறதே! என்ன அது? என்று மீண்டும் பெருமானார் (ஸல்) கேட்ட பொழுது அலீ (ரலி) அவர்கள்: நான் இங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் எனக்கு முன்னாள் ஒரு யூதப் பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முஸ்லிமல்லாத இந்த யூதருக்குப் பின்னால் எவ்வளவு நேரம் சென்று கொண்டிருப்பது என்று நினைத்து அவரை முந்திக் கொண்டு வந்தேன். வழி குறுகலாக இருந்ததால் அவர் மீது என் உடல் மோதிவிட்டது. இதுதான் நடந்தது என்று கூறினார்கள்.இதனைக் கேட்ட அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்; அலியே! நீர் பெரிய தவறு செய்து விட்டீர். உம்மை விட வயதில் மூத்தவருக்கு மரியாதை தராமல் அவரை உராய்ந்து கொண்டு முந்தி வந்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் அவருடைய மனம் வருத்தமடைந்திருக்கும் எனவே, உடனே அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு வருவீராக! என்று பணித்தார்கள்.

  1. முதியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவர்களை பாதுகாப்பதும்

ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபா அவர்களை இஸ்லாத்தைத் தழுவும் பொருட்டு பெருமானாரிடம் அழைத்து வருகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் நம் ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ‘அபூபக்கரே, வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே? நான் வந்து சந்தித்து இருப்பனே’ என்றார்கள் நாயகம்.‘யா ரசூலல்லாஹ், நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை வந்து சந்திப்பது தான் ஏற்றமான செயலாகும்’ என அபூபக்கர் (ரலி) அவர்கள் பதிலுரைத்தார்கள்.

ஒரு நாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் பெருமானாரை சந்திக்க வருகைத் தருகிறார். அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களோ அம்முதியவருக்கு வழி விடாமல் தாமதப்படுத்தினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த நாயகம் (ஸல்) அவர்கள் உடனே நபித்தோழர்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள். ‘யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல’ என்றார்கள் நாயகம்.

“பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ‘எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.” 4:75.

  1. முதியவர்களுக்கு உதவி செய்தல்

“தனது பெற்றோருக்கு – (முதியோராகிவிட்ட நிலையில்) நன்மை செய்து வருமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனது தாய் அவனை பலவீனத்தி்ன் மீது பலவீனமாகச் சுமந்திருந்தாள்.மேலும், அவனுக்கு பால்குடி மறத்தல் இரண்டு ஆண்டுகளில் உள்ளது. (ஆகவே) எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே மீளுதல் உள்ளது.” (அல்குர்ஆன் – 31 : 14)

“நாம் எவரையும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம்.”

வயோதிபர்களுக்கான உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுக்கும் எவரும் அதற்கான இஸ்லாத்தின் அணுகுமுறையை நன்கு விளங்க வேண்டும்.

  1. பொதுவாக வயோதிபர்களையும் குறிப்பாக பெற்றாரையும் பராமரிப்பது வாஜிப்-கட்டாயக் கடமை. அதில் பொடுபோக்காக இருப்பது சிறிய பாவமல்ல. ’கபாஇர்’ எனப்படும் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகும்.பெரும் பாவமாகும். ஆனால், அவர்கள் விடயமாக ஈடுபாட்டோடு நடந்துகொள்வது அளப்பரிய நன்மைகளையும் இம்மை மறுமை நலன்களையும் பெற்றுத்தரும். இந்த ஆத்மீக, பசுமையான கண்ணோட்டமும் மனப்பதிவும் சமூகத்தில் வந்துவிடும் போது அந்த சமூகத்தில் வயோதிபர்கள் மிகுந்த மன நிம்மதியோடு வாழ்வார்கள். எனவே, முதலில் தக்வா-அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயமே ஏற்படுத்தப்பட வேண்டும்.
  2. மனிதர்களிடம் நன்றி உணர்வை வளர்க்க வேண்டும். ‘செய்நன்றி மறப்பது நன்றன்று’. அல்லாஹ்வுக்கு அடுத்ததாக எமக்கு எமது பெற்றாரை விட உதவி செய்தோர் யாரும் இருக்க முடியாது.

எனவே, அல்லாஹ் أن اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ “எனக்கும் உனது பெற்றார் இருவருக்கும் நன்றி செலுத்துவீராக” என்றான். அல்லாஹ்வுக்கு அடுத்தாக நாம் கடமைப்பட்டிருப்பது எமது பெற்றோருக்காகும். {وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا} அல் இஹ்சானு இலல் வாலிதைன்’, ’பிர்ருல் வாலிதைன்’என்ற சொற்களை அல்லாஹ் குர்ஆனிலும் நபியவர்கள் ஹதீஸ்களிலும் இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும் .

பெற்றார் தமது பிள்ளைகளது உடல் வளர்ச்சி,ஆளுமை விருத்தி,அறிவு வளர்ச்சி போன்றவற்றில் அதிகமான பங்கை வகித்திருக்கிறார்கள். தாய் ‘பத்தியன்’கள் பல இருந்து பாரமான கருவை சுமந்தது முதல் மலம்,சலம் கழுவியது உணவு தீத்தியது வரை தகப்பன் வியர்வை சிந்தி உழைத்தது முதல் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க படாது பட்டது வரை செய்த ஈடிணையற்ற உதவிகளை பிள்ளைகள் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

  1. மூன்றாவது கட்டமாகவே முதியோர் பரமரிப்புக்கான திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும். அதாவது முதலில் மனப்பாங்கு மாற்றம் அதன்பிறகு தான் ஏனைய திட்டமிடல்கள் தேவை. இல்லாத போது காய்ந்த வரண்ட திட்டங்களாகவே அவை அமையும்.

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களைக் பரிமாறும் போதும் முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். என்பதற்க்காக‌ பல விஷயங்களில் வயதைக் கவனித்து பெரியவர்களை முற்படுத்தியுள்ளார்கள். நபி ﷺ அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “நான் கனவில் ஒரு குச்சியால் பல் துலக்குவதைப் போன்று கண்டேன். அப்போது (என் அருகிலிருந்த) இரு மனிதர்கள் (அந்தக் குச்சிக்காகப் போட்டியிட்டுக்கொண்டு) என்னை இழுத்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராக இருந்தார். அவர்களில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் அந்தக் குச்சியை நான் கொடுத்தேன். அப்போது என்னிடம் “வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை தருவீராக” என்று சொல்லப்பட்டது. ஆகவே, நான் பெரியவரிடம் அந்தக் குச்சியைக் கொடுத்தேன்.” [முஸ்லிம் 4568]

இஸ்லாத்தின் முதியோர் குறிப்பாக பெற்றார் பற்றிய அருமையான போதனைகளை குத்பாக்கள், சொற்பொழிவுகள், அஹதியாக்கள்,பாடசாலைகள், மத்ரஸாக்கள் திரைப்படங்கள் ,நாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாக இளம் வயதினரதும் ஏன் வளர்ந்தவர்களதும் உள்ளங்களில் பதிக்க எம்மாலான முயற்சிகளைச் செய்வோமாக!

அதன் மூலம் அல்லாஹ்வின் அபரிமிதமான நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top