பல்கலைக்கழக மாணவி தனது காதலனால் படுமோசமான முறையில் கொழும்பில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மனதை உலுகும், இறுகப் பிழியும், துன்பியல் நிகழ்வு என்பதில் கருத்து வேறுபாடில்லை.
பல்கலைக்கழகம் ஒரு மாணவியை இழந்துள்ளது.
தாயும் தகப்பனும் அன்பாக பெற்று வளர்த்த ஒரு மகளை இழந்து தவிக்கிறார்கள்.
ஓர் இளைஞன் பல்கலைக் கழகப் படிப்பை இழந்து ஆயுள் கால சிறைத் தண்டனைக்கு உள்ளாகிறான்.
வாழவேண்டிய வயதில் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் ஓடிய நிலையில் அப்பாவித்தனமாக சடலமாக விழுந்து கிடக்கும் பெண்ணை சமூகத்தில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் மீடியாவில் பார்த்து தலையில் கை வைக்கிறார்கள்.
என்ன அவலம் இது!!!!
ஆனால், ஆண்- பெண் உறவுக்கான வழிகாட்டல்களோ கட்டுப்பாடுகளோ இல்லாத சமூகங்களில் இவ்வாறு நடப்பது சாத்தியமே. திருமணத்துக்கு முன்பிருந்தே, ஏன் பருவ வயதை எய்த முன்னரே ஆண் பெண் தொடர்புகளை அவர்கள் ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் அவ்வுறவு வித்தியாசமான வடிவங்களை எடுக்கும். சில போது திருமணத்தில் முடியும். பல போது இப்படியான கொலையிலோ அல்லது தற்கொலையிலோ முடியும். இடைநடுவே கற்பழிப்பு, கருச்சிதைவு, மன உளைச்சல், நிரந்தர விரக்தி, சிறிய பெரிய பழிவாங்கல்கள் போன்ற இன்னோரன்ன பரிணாமங்களை அது எடுக்கும்.
இலங்கை போன்ற மத கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளில் ஓரளவு கட்டுப்பாடுகள் இருப்பினும் மேற்குலகில் நிலை படுமோசமாகும்.
அங்கு ஒரு யுவதி பருவ வயதை அடைய முன்னரே தனது பெற்றோருடனான உறவை பூரணமாக துண்டித்துக் கொண்டு தனக்கான ஆண் துணையைத் தேடிக்கொள்வாள். அவர்கள் இருவரும் (Living together) ஒன்றாகவே வாழ்ந்து பிறகு விருப்பமில்லை என்ற நிலை வருகின்ற பொழுது பிரிந்து அதன் பின்னர் வேறு துணைகளையும் தேடிக் கொண்டு வாழ்வார்கள். மிருகங்களும் அப்படித்தான். மிருகங்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் கிடையாது.
திருமணம் என்ற பந்தம் பாரம்பரியமாக கீழைத்தேசங்களில் இருந்து வந்தாலும் மேற்குலகில் அது அரிதிலும் அரிதாக மாறி வருகிறது.
அண்மைக் காலத்தில் இலங்கை போன்ற நாடுகளில் மேற்கத்திய கலாசார தாக்கம் அதிகம் ஊடுருவியிருப்பதாலும் மதக் கட்டுப்பாடுகளை விரும்பாத நிலை இருப்பதனாலும் தனது உடம்பு தனக்குச் சொந்தமானது; தனக்கு எவரும் கட்டுப்பாடுகளை போடக்கூடாது என்ற உணர்வு இருப்பதனால் மிக பயங்கரமான ஒரு சூழ்நிலையை நோக்கி இலங்கை மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இஸ்லாத்தை கொள்கையாக ஏற்ற, அல்லாஹ்வின் நியதிகளை பின்பற்றுவதிலே நன்மை இருக்கிறது; பின்பற்றாமல் விட்டால் நரகம் இருக்கிறது என்ற ஆழமான நம்பிக்கை கொண்ட சமூக அமைப்பில் இப்படியான கோரக் காட்சிகளை நாம் காணக் கூடாது.
ஆனாலும் துரதிஷ்டமாக காதல் தொடர்புகள் மலிந்து விட்ட ஒரு உலகத்தில் வாழுகின்றோம்.
இளமைப் பருவத்தில் இருக்கும் ஆணும் பெண்ணும் பருவக்கிளர்ச்சி கொண்டவர்கள். பஞ்சும் நெருப்பும் போன்றவர்கள். அதே நேரம் பாலியல் உணர்வு என்பது மிகவுமே கூர்மையானது. எனவே இந்த உணர்வை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதற்காக இஸ்லாம் மிகவுமே நியாயமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
#அன்னிய(அஜ்னபீ) ஆணுடன் ஒரு பெண் தனித்திருப்பதும் பயணிப்பதும் ஹராம்.
#ஒரு பெண் தனது மஹ்ரம்கள் அல்லாதவர்களுக்கு முன்னிலையில் இஸ்லாமிய ஆடையுடன் மாத்திரமே வர முடியும்.தனது அழகை காட்சிப்படுத்துவது ஹராம்.
#ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் பிறரது அவ்ரத்களை பார்ப்பதில் இருந்து முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.
#ஓர் ஆணாயினும் பெண்ணாயினும் பிற பாலாரது அவ்ரத்தை பார்ப்பது மட்டுமல்ல அவர்களது உடம்பைத் தொடுவதும் ஹராம்.
#பெண்கள் பிற ஆடவர்களுடன் நிர்ப்பந்தமாக உரையாட நேரிட்டால் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் குழைந்து பேசுவதோ உடல் அசைவுகளை ஏற்படுத்துவதோ ஹராமாகும்.
“ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர” என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2611
“உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 109)
இது போன்ற போன்ற இறுக்கமான கட்டுப்பாடுகளை இஸ்லாம் இட்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பு காதலிக்கும் போது இக்கட்டுப்பாடுகளை முழுமையாகவோ ஓரளவோ மீற வேண்டிவரும்.
இஸ்லாம் என்பது தொழுவதும் குர்ஆன் ஓதுவதும் நோன்பிருப்பதும் மட்டுமல்ல.இஸ்லாத்தில் ஆடையணிகள், பேசும் விதம், ஆண் பெண் உறவு பற்றியெல்லாம் மிகத் தெளிவான வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றில் கருத்து பேதங்கள் கிடையாது.
எனவே,
தனக்கு நல்லதொரு மனநிறைவான குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என எவரும் விரும்பினால்…
தாய் தகப்பன் பற்றிய நல்லெண்ணம் கொண்ட, அவர்களை மரியாதையாக நோக்குகின்ற பரம்பரைகள் கிடைக்க வேண்டும் என எவராவது விரும்பினால்…
விரக்தி, கொலை, தற்கொலை.. அற்ற இளமைக்காலத்தை கடத்த வேண்டும் எவரும் விரும்பினால்…
அவர்கள் முதலில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.அடுத்ததாக திருமணத்துக்கு முந்திய ஆண் பெண் உறவை முற்றிலும் தவிர்க்கட்டும்.
அல்லாஹ் நல்லவர்களுக்கு மட்டுமே நல்லவர்களை தயார் செய்வது அவனது நியதி. மனக்கட்டுப்பாட்டுடன், பொறுமையாக இளமையை கடத்துபவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் நல்ல குடும்ப வாழ்வும் கிட்டும்.
ஈமானோடு கூடிய கற்பொழுக்கத்துக்கு நிகர் எதுவுமில்லை.
அல்லாஹ் எம் அனைவரையும் ஈமானையும் கற்பொழுக்க வாழ்வையும் பாதிக்கும் செயல்களில் இருந்து பாதுகாப்பானாக!




