துல்கர்னைனின் அணைக்கட்டும் வெள்ள அனர்த்தமும்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)

சில பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்கிறது. சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இப்படியான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு வகையான விளக்கங்கள் சொல்லப்படலாம். பரஸ்பரம் விமர்சனக் கணைகள் வீசப்பட்டலாம்.

மக்கள் செய்த பாவத்தின் காரணமாகவே மழை அதிகமாக பெய்கிறது என்று உலமாக்கள் பொதுமக்களை நொந்துகொள்வர்.(இதில் உண்மை இருக்கிறது.) தவ்பா செய்வதே ஒரே வழி என்பர்.

அரசியல்வாதிகள் தமது எதிர்கால வாக்குகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமது நண்பர்கள் உறவினர்கள் அமைத்துக் கொண்ட கட்டிடங்கள் அல்லது வீடுகளை அகற்றாமல் இருப்பதே இதற்குரிய காரணம் என இன்னும் சிலர் அரசியல்வாதிகளை குற்றம் சொல்வர்.

ஊரில் இருக்கின்ற திட்டமிடும் தகைமை கொண்டவர்கள் தாமும் தமது பாடும் என்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊரில் ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான திட்டமிடும் தகுதி இருந்தும் கூட வாழாதிக்கிறார்கள் என்று இன்னும் சிலர் குற்றம் சுமத்துவர்.

உலமாக்கள் கூறும் காரணத்தை தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் அதிக மழையும் அதனால் ஏற்படும் சேதங்களும் தண்டனைக்காக வருகின்றன என்று மாத்திரம் கூற முடியாது. சோதனைக்காகவும் வரலாம். நல்ல மக்களையும் அல்லாஹ் சோதிக்கலாம். கெட்டவர்கள் ஒரு பிரதேசத்தில் இருந்தால் அவர்களுக்கு அது தண்டனையாக அமையும். எனவே ஒரே நேரத்தில் தண்டனையாகவும் சோதனையாகவும் அது பார்க்கப்பட வேண்டும். சோதனையின் பொழுது நன்மக்கள் பொறுமையாக இருக்கிறார்களா? சோதனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்களா? என்றெல்லாம் அல்லாஹ் இன்னொரு வகையில் சோதிப்பான்.

சுயநலமிக்க அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மக்கள் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு அது பற்றி கவலை இல்லை.

பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்பவற்றுக்காக போட்டியிட இருப்பவர்கள் தமது வாக்காளர்களை பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். வெள்ளம் வருவதற்கு காரணமாக அமையும் கட்டடங்களை அகற்ற முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதுவும் கூட மிகப் பயங்கரமான பாவச் செயல் என்பதை பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் பாவம் செய்வதனால் மாத்திரம் தண்டனை இறங்குவதில்லை. ஒரு பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்பார்த்து வாக்கு வேட்டைக்காக சிலவற்றை செய்யாமல் இருப்பதும் அல்லது சிலவற்றைச் செய்வதும் ‘பெரும் பாவம்’ என்பதை நாம் உணர வேண்டும்.

ஊரில் இருக்கின்ற படித்த, உயர் பதவிகளை வகிக்கின்ற, ஆலோசனைகளைச் சொல்லி சாதிக்கும் திறமை உள்ளவர்களும் ஊருக்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவைப்படுகின்ற போது தியாகங்களை செய்வதற்கும் முயற்சி எடுக்காத போது அவர்களும் பாவம் செய்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் துல்கர்னைன் அவர்கள் அமைத்துக் கொடுத்த அணைக்கட்டு ஞாபகம் வருகிறது.

ஒரு சமூகத்தினர் தமக்கு யஃஜூஜ் மஃஜூஜ் படையினரால் மிகப்பெரிய தொல்லைகள் இருப்பதாக துல்கர்னைன் அவர்களிடம் முறையிட்டனர். அவர்களது அட்டூழியங்களை தவிர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு அணைக்கட்டு கட்டப்பட வேண்டும் என்று துல்கர்னைன் ஆலோசனை வழங்கிய பொழுது துல்கர்னைன் அப்பிரதேசத்து மக்களுடைய அறிவு, ஆற்றல், ஆள்வளம் என்பவற்றை பயன்படுத்தி அந்த அணைக்கட்டை கட்டிக் கொடுத்தார். அதனால் அந்த மக்கள் சீரும் சிறப்புமாக பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

எனவே, சமூகத்தில் இருக்கும் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள்,உலமாக்கள், கல்விமான்கள் போன்றோர் இத்தகைய கட்டங்களில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டி இருக்கிறது.

பாவங்களுக்காக தௌபா செய்வது அவசியம். சோதனைகளின் பொழுது பொறுமையாக இருப்பது கட்டாயம். பொறுமைக்கு அல்லாஹ்விடத்தில் கூலி இருப்பதாக நம்புவது முஃமின்களது பண்பு.

அது மாத்திரம் போதாது. அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் அல்லாஹ்வைப் பயந்து சமூகத்தின் நலனுக்காக மாத்திரமே செயல்பட முன்வர வேண்டும். சுயநலத்தை தூக்கி ஒரு பக்கத்தில் எறிந்து விட்டு கியாமத்தில் பதில் சொல்ல வேண்டும் என்ற பயத்தோடு செயல்பட வேண்டும்.

உலமாக்களும் கற்றவர்களும் துறை சார்ந்தவர்களும் தனவந்தர்களும் முன் வந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படவிருக்கின்ற, ஏற்பட்டிருக்கின்ற அனர்த்தங்களை களைவதற்கு தம்மாலான பங்களிப்புகளை செய்ய வேண்டும்.

அனர்த்தங்கள் வராதிருப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்ததன் பின்னரும் அர்த்தங்கள் ஏற்படுமாயின் அது அல்லாஹ்வினுடைய நாட்டத்தின் பிரகாரம் ஏற்பட்டது என்று பொறுமையாக இருப்பது தான் இஸ்லாமிய வழிமுறையாகும். ஆனால் முயற்சி செய்வது என்பது எமது கடமையாகும். விளைவை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட வேண்டும்

வெள்ளம் என்பது அனர்த்தங்களில் ஒன்று மாத்திரம் தான்.

ஈமானில் கோளாறு அனர்த்தம்

இனவாத அனர்த்தம்

வறுமை அனர்த்தம்

அரசியல் அராஜக அனர்த்தம்

போதை வஸ்த்துப் பாவனை அனர்த்தம்

கொள்கை, இயக்க வெறி அனர்த்தம்

உளரீதியான நெருக்கடி அனர்த்தம்

என்று அனர்த்தங்களை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த அனர்த்தங்களை தவிர்க்க:-

ஆழமான ஈமான், கலந்தாலோசனை தியாக சிந்தனை, அர்ப்பணம் என்பன தேவை.

அல்லாஹ்வுக்காக சிந்தித்து செயல்பட வல்லவன் எமக்காக அருள் பாலிப்பானாக!

சூரா கஹ்பில் கூறப்பட்ட துன்கர்னைன் பற்றிய வசனங்கள்:-

அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95 قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏

18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.

18:96 اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97 فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

18:98 قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ؕ‏

18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top