அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி
மேற்குலகத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட வயோதிபர் மடம் எனும் இந்த ‘பித்அத்தை’ (புதுமையை) நான் வெறுக்கிறேன்.
ஆண் ஒருவர் முதுமையை அடைகிறார். அவரது உறவினர்கள் அவர் விடயமாக சங்கடப்பட்டு அவரை கவனிக்க தயங்குகிறார்கள். எனவே, அவர் தன்னைப் போன்ற வயோதிபர்களுடன் சேர்ந்து வயோதிபர் மடத்தில் தஞ்சமடைகிறார். மரணத்தில் நிம்மதி காணும் வரை அந்த முதியவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்.
கிழப் பருவத்தை அடைந்த பெண்களது நிலையும் அப்படித் தான் இருக்கிறது. அவர்கள் தமது பிள்ளைகளையும் பேரப்பிள்ளையும் துறந்து வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். மரணத்தை எதிர்பார்த்த நிலையில் தம்மைப் போன்ற கிழவிகளோடு வயோதிபர் மடங்களில் இணைந்து கொள்கிறார்கள்.
அவர்களது வாழ்வின் சூரியன் மறைந்துள்ளது. பழைய ஞாபகங்கள் எத்தகைய எதிர்பார்க்கைகளை வைப்பதற்கும் பயன்படமாட்டா. இது இப்படியிருக்க அவர்களுக்கு வாழ்வில் ஏதாவது எதிர்பார்க்கைகள் உள்ளனவா?
வயோதிபர் மடம் என்ற இந்த முறைமை மேற்குலகைக் கண்மூடிப் பின்பற்றுவோரது கொள்கையாகும். பழைய காலத்தில் பண்பாடுகளும் மார்க்கத்தின் வழிகாட்டல்களும் ஈமானின் பரகத்துக்களும் எமது இல்லங்களில் தாராளமாக நிரம்பி வழிந்தன. அவை மங்கிப் போனதனால் இந்த மேற்குலக முறைமை எமக்குள் படையெடுத்துள்ளது.
நான் இளமைப் பருவத்தில் இருந்த பொழுது எனது வீட்டில் எது தகப்பன் தாய்,பாட்டன், பாட்டி சிறிய, பெரிய தாய் தந்தையர் ஆகியோரைக் கண்டேன். அங்கு மூன்று பரம்பரைகளைச் சேர்ந்தோர் வாழ்ந்தார்கள். அவர்களது தூக்கத்தையும் விழிப்பையும் தொழுகைக்கான அதான் தான் ஒழுங்குபடுத்திக் கொடுத்தது.(தொழுகை தான் அவர்களது வாழ்வின் அச்சாணியாக மையப் புள்ளியாக இருந்தது)
நபி(ஸல்) அவர்கள், “எமக்கு மத்தியில் உள்ள வயோதிபர்களை கண்ணியப் படுத்தாத, எமது சிறார்கள் மீது இரக்கம் காட்டாத, எமது அறிஞர்களுக்குரிய உரிமைகளை அறியாதவர்கள் எம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறிய ஹதீஸின் பொருளை நான் அப்போதெல்லாம் உணர்ந்து கொண்டேன்.
(குனூஸுஸ் ஸுன்னா எனும் நூலில் இருந்து)
அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி (ரஹ்) அவர்களது மேற்படி கருத்து தொடர்பான அபிப்பிராயங்களை நீங்கள் இங்கு பதிவிடலாம்.
Ash Sheikh Faleel (Naleemi)




