நிலநடுக்கத்தால் ‘ஷஹீது’ அந்தஸ்து கிடைத்தவர்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)

துருக்கிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். காரணம் அவர்கள் ‘ஷஹீது’களாவர்.

நபிகளார் (ஸல்) அவர்கள் ஐந்து நபர்கள் ஷஹீதுகள் என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவர் ‘இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இறப்பவர் ஆவார்” என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, அல்லாஹ் அவர்களது சடுதியான மரணத்திற்குள்ளும் அவர்களுக்கான பாக்கியத்தை மறைத்து வைத்திருக்கின்றான்.

மரணித்தவர்கள் தவிர படுமோசமாக காயப்பட்டவர்கள், அங்கங்களை இழந்தவர்கள் இருக்கலாம். அவர்களும் ஒரு வகையில் பாக்கியசாலிகள் தான்.

காரணம் நபி அவர்கள்:-

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் களைப்பு, நோய், துயரம், கவலை, நோவினை, மனவேதனை மாத்திரமன்றி காலில் ஒரு முள் குத்தினால் கூட அவற்றை அல்லாஹ் அவரது சில பாவங்களுக்குரிய குற்றப் பரிகாரமாக ஆக்கி விடுகிறான்” (ஸஹீஹுல் புகாரி) என்று கூறியிருக்கிறார்கள்.

பல போது இதுபோன்ற சோதனைகள் மனிதர்களது பாவக்கறைகளை கழுவுவதற்கும் அவர்களது அந்தஸ்துகளை கூட்டுவதற்குமான காரணிகளாக அமைந்து விடுகின்றன.

அந்தவகையில் இந்த ஷஹீதுகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக! அவர்களது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக!!

உலக வாழ்வு என்பது பஞ்சனை மெத்தைமல்ல.அங்கு உறவு- பிரிவு, ஏற்றம்- இறக்கம், இன்பம் -துன்பம், சோதனைகள் – சந்தோஷங்கள் என்பன மாறி மாறி வரத்தான் செய்யும். இதுதான் உலக வாழ்வு சோதனை கூடம் என்பதன் அர்த்தமாகும்.

எது எந்த சந்தர்ப்பத்தில், யாருக்கு நிகழும் என்று கூற முடியாது. நிரந்தரமான நிம்மதியும் சந்தோஷமும் மறுமையில் மாத்திரமே கிடைக்க முடியும். இவ்வாறான எதிர்பாராத நிகழ்வுகளின் பொழுது நாம் அல்லாஹ்வினது சக்தியை நினைவு கூருவது அவசியமாகும். நாம் பலநூறு மாடிகளை கொண்ட கட்டிடங்களை அமைத்து பாதுகாப்பாக வாழ்ந்தாலும் ஒரு வினாடி அல்லது சில வினாடிகள் பூமியை அல்லாஹ் குலுங்குகின்ற பொழுது அவை தரைமட்டமாக மாற முடியும் என்பதை இது காட்டுகிறது.

மனிதன் எப்போதும் இது போன்ற நிகழ்வுகளை எதிர்பார்த்திருக்கும் பொழுது, தவ்பாவோடும் பாவக் கறைகளில் இருந்து தூய்மைப்படுத்தி தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்ற பொழுது அவனுக்கு எப்படி மரணம் வந்தாலும் அது பற்றி அவன் கவலைப்படமாட்டான்.

وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍۢ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍۢ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ ۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ

“நிச்சயமாக நாம் உங்களை கட்டாயமாக சோதிப்போம். அது சிறிய அளவிலான பயத்தினால், பட்டினியால், பொருட்கள், உயிர்கள் விளைச்சல்கள் குறைக்கப்படுவதன் மூலம் அமையும். பொறுமையோடு இருப்பவர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்” (2:155)

என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே ‘எல்லாம் நலவுக்கே’ என்ற கண்ணோட்டத்தில் நாம் சம்பவங்களை பார்க்க வேண்டும்.

அல்லாஹ் இன்னும் ஓர் இடத்தில்:-

وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ} [البقرة: 216]

நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நலவாக இருக்கும். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்கு கெடுதியாக இருக்கும். அல்லாஹ் அறிந்தவன். நீங்கள் அறியமாட்டீர்கள்” எனக் கூறுகிறான்.

எனவே சில சம்பவங்களது நோக்கம்- பின்னணி பற்றிய அறிவு எமக்கு இல்லாவிட்டாலும் அல்லாஹ் எந்தவொரு காரியத்தையும் காரணத்தோடு மாத்திரமே செய்வான் என்ற நம்பிக்கையும் எமக்குத் தேவைப்படுகிறது.

எனவே, இந்த சம்பவத்தினால் உயிரிழந்த அனைவருக்கும் நாம் உளப்பூர்வமாக துஆச் செய்ய வேண்டும். உடல் உபாதைகளுக்கும் காயங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றவர்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் நாம் ஆறுதல் கூறுவதோடு தேவைப்பட்ட நிவாரண உதவிகளையும் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

அல்லாஹ் உயிர் அளவிலும் உடல் அளவிலும் மனதளவிலும் சொத்துக்கள் அளவிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மிக உயர்ந்த கூலிகளை வழங்குவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top