கல்வியை இஸ்லாம் என்று இரு வகையாக நோக்குகிறது. மனிதனது அன்றாட நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் அனைத்து அறிவுகளையும் ‘பர்ளு அய்ன்’ ஆன கல்வி என்றும் சமூக நோக்கத்திற்காக வேண்டி கற்கும் கல்விகளை ‘பர்ளு கிஃபாயா’ என்றும் அது பிரிக்கிறது. இது மார்க்கத்துறையோடு தொடர்பான கல்விகளாக இருப்பினும் உலகத்துறையோடு தொடர்பான கல்விகளாக இருப்பினும் சரியே.
அதேவேளை குர்ஆன், ஹதீஸ்,பிக்ஹ் போன்ற இஸ்லாமிய கலாஞானங்களில் தேர்ச்சி மிக்க தேவையான அளவு துறை சார் நிபுணர்கள் உருவாக்கப்படுவது பர்ளு கிஃபாயா போலவே மருத்துவம், தொழில்நுட்பம், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகவியல், அரசியல், கல்வி, ஊடக துறை போன்ற துறைகளிலும் தேவையான அளவு துறை சார் நிபுணர்கள் உருவாக்கப்படுவது ‘பர்ளு கிஃபாயா’ ஆகும்.
முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரத்திலும் உலக விவகாரத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான அளவு எண்ணிக்கையில் கல்வி கற்றவர்கள் உருவாக்கப்படுவது பர்ளு கிஃபாயா என நவீன கால அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் பொடுபோக்கு காட்டுவது அதாவது மார்க்க கல்விகளை மாத்திரம் படித்து, உலகக் கல்விகள் எனப்படும் துறையை புறக்கணிப்பது சமூகத்தை மிக அதிகமாக பலவீனப்படுத்தும்.
அதேவேளை உலகக் கல்விகளையும் அல்லாஹ்வினுடைய திருப்தியை எதிர்பார்த்து, சமூக சேவை நோக்கத்தோடு கற்கின்ற பொழுது அதுவும் ஒரு இபாதத்தாக மாறும். பழைய கால இமாம்களில் ஒருவரான இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் கூட மருத்துவம், கணிதம், விவசாயம், தையல் போன்ற துறைகளில் தேவையான அளவு எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
உண்மையில் உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று இஸ்லாம் கல்வியை பிரிக்க வில்லை மாறாக, ‘பயனுள்ள கல்வி’, ‘பயனற்ற கல்வி’ என்று மாத்திரமே பிரித்துள்ளது. மனித வாழ்வுக்கு தேவைப்படும் அனைத்து பயனுள்ள கல்விகளும் கற்கப்பட வேண்டும். மனித வாழ்வை பாதிக்கும் எந்த ஒரு கல்வியும் கற்கப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் கவனமாக இருக்கிறது.
நபிகளார் (ஸல்) அவர்கள் பயனற்ற கல்வியை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிய அதே நேரத்தில் பயனுள்ள கல்வியைக் கேட்டிருக்கிறார்கள்.




