குறித்த ஒரு மதத்தைச் சேர்ந்த குருக்களில் ஒருவரது வெளிநாடொன்றில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோவும் நமது நாட்டில் வைத்து எடுக்கப்பட்ட மற்றொருவரது வீடியோவும் ஓரிரு நாட்களாக வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நோக்குகிறார்கள்.
- சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாத்தை எதிர்த்து துவேஷத்தை விதைத்தவர்களுடன் இருந்தனர் என்பதால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர் என சிலர் கூறி சந்தோஷப்படுவதுடன் அதனை இயன்றவரை பகிர்ந்து தமது உள்ளத்தின் கவலையைப் போக்கிக் கொள்கிறார்கள்.
இஸ்லாத்தை இத்தகையோர் எதிர்த்த போது முஸ்லிம்கள் அதற்கு பதிலடி கொடுக்க முடியாத நிலையில் இருந்தனர். கஃபதுல்லாஹ் மீதான அப்ரஹாவின் தாக்குதலை தன்னால் தடுக்க முடியாது என கருதிய அப்துல் முத்தலிப் அல்லாஹ்வின் பொறுப்பில் அதனை ஒப்படைத்த நிலைக்கு இதனை ஒப்பிட முடியும். பிரபஞ்ச நாயகனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களை அந்த ரப்பு காலந் தாழ்த்தியேனும் கவனித்துக் கொள்வான் என்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற பல சம்பவங்கள் சாட்சி. ‘தவக்கல்னா அலல்லாஹ்’. ‘ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்’. இன்னும் சிலரும் அல்லாஹ்வின் பட்டியலில் எஞ்சியிருக்கலாம்.
- இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்தியமை மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவ்வாறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர். அவர்கள் அதற்கு நியாயம் கூறும் போது மனிதர்களது மானத்தோடு சம்பந்தப்பட்ட பிறழ்வுகளை பகிரங்கப்படுத்துவது மனித உரிமை மீறல் என்றும் நமது நாட்டு சட்டமும் அவ்வாறு அம்பலப்படுத்துவதை தடுக்கிறது என்றும் கூறுகின்றனர். குறித்த அந்த மதத்தில் பக்திமிக்கவர்கள் மட்டுமன்றி வேறு சிலரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனர். இந்த கூற்றும் நிராகரிக்கத்தக்கதல்ல.
- இந்த தவறை அம்பலப்படுத்துவது பற்றிய இன்னும் சிலரது நிலைப்பாடு சற்று வித்தியாசமானது. அம்பலத்துவோர் இது போன்ற தப்புக்களை செய்திருக்கலாம். எனவே அவர்கள் இதனை விமர்சிக்க அருகதையற்றவர்கள் என்பது அவர்களது வாதமாகும்.
4.அந்த குருக்களது மதத்தையும் இனத்தையும் சேர்ந்த சிலரே அக்குருக்களை எவ்வித தயவுதாட்சன்யமும் இன்றி விமர்சிக்கிறார்கள். அவர்களால் அந்த மதத்துக்கு இழுக்கு என்றும் அவர்கள் இனம்காட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறும் அவர்கள் இந்த விமர்சன விடயத்தில் ஏனைய மதத்தவர்களை விட முன்னணியில் இருப்பது ஆச்சரியமாகவுள்ளது.
இது இப்படியிருக்க இதனை வேறு சில முறைகளிலும் பார்க்க முடியும்.
- பாலுணர்வு என்பது மிகப்பலமானது. அதனை கவனமாக கையாள போது சமூகத்தில் பல வெடிப்புக்களும் மிகப்பயங்கரமான விளைவுகளும் ஏற்படும்.
- விபசாரம் அல்லது பாலியல் பிறழ்வுகள் தொடர்பான தகவல்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் பரப்பப்படுமாயின் அல்லது அவை புழக்கத்தில் இருக்குமாயின் பலவீனமான மனநிலையில் இருப்பவர்கள் அல்லது ஈமான் பலவீனமானவர்கள் தாமும் அதே தவறை செய்தால் என்ன என நினைத்து அவற்றில் ஈடுபட முயற்சி செய்வார்கள். அல்லது ஈடுபடுவார்கள். எனவே தான் ஆயிஷா நாயகி பற்றி அவதூறு கூறப்பட்ட சந்தர்ப்பதில் அச்செய்தியை பரப்பியவர்களை அல்லாஹ் குர்ஆனில் கடுமையாக சாடினான். ஆயிஷா நாயகி அக்குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என்பதற்காக மாத்திரமல்ல சம்பவம் உண்மையாக இருந்தாலும் கூட அது பாரிய தவறாகும் என்பதனால் தான் அல்லாஹ் அவ்வாறு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தான்.
ஆபாசப் படங்களை பார்ப்பதால் பாவம் செய்யாதவர்களும் பாவம் செய்யத் தூண்டப்படுவதனால் தான் அவை ஹராமாக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே அனுமதிக்கப்பட்ட ஒரு சாதாரண செயல் பாவத்துக்கு இட்டுச் செல்லுமாயின் அச்செயலும் ஹராமாகாக அமையும் என்பது ‘பிக்ஹ் காயிதா'(இஸ்லாமிய சட்ட விதியா)கும். எனவே வேறு ஒருவர் பற்றி பேசுவது பல பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமாயின் அது தடுக்கப்படும்.
பாலியல் பிறழ்வில் ஈடுபட்டவர் எமக்கு விருப்பமற்றவராக இருந்தாலும் மேற்கூறப்பட்ட விதியை அங்கு கவனிக்க வேண்டும். அவரது தவறை சந்திக்கு இழுப்பதால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறதோ இல்லையோ சமூகத்தில் உள்ள பாவத்தின் விழிம்பில் நிற்போர் பாவக் கிடங்கில் விழும் ஆபத்து உள்ளது என்பதை மறந்துவிடலாகாது. எனவே இந்த வீடியோக்களை பகிர முன்னர் இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
- இந்த விவகாரம் வைரலாகிய பின்னர் தொலைக்காட்சியில் பத்திரிகைகளது தலைப்புச் செய்திகளை வாசிப்பவர் கூறிய ஒரு விளக்கமும் எமது கவனத்தை ஈர்த்தது. அவர் ‘சிலர் இந்த வீடியோக்களை பகிர்ந்ததற்கான காரணம் தமது ‘லைக்’குகளையும் ‘வீவர்ஸ்’ களையும் அதிகரித்துக் கொள்வதற்கே’ என்றார். பிறரது அசிங்கங்களை சந்தைப்படுத்தி தனது புகழையும் வருவாயையும் ஒருவர் சம்பாதிப்பதாயின் அது சுத்தமான சுயநலமாகும்.
- பிறரது தவறுகளை துருவித்துருவி ஆராய்வதை இஸ்லாம் கடுமையாக கண்டிப்பது போலவே பிறரது தவறுகளை மறைப்பவரது தவறுகளை அல்லாஹ் மறைப்பதாகவும் கூறுகிறது. இதற்கான குர்ஆன் ஹதீஸ் வசனங்களை இங்கு கூறுவதற்கு இடம்தரமாட்டாது.
- இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பாலுணர்வுக்கான ஏக வடிகாலாக திருமணம் மூலமான உடலுறவை மட்டுமே அது அனுமதிக்கிறது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அடிமைப் பெண்களுடனான உறவு மட்டுமே விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டது. அதற்கப்பால் இடம்பெறும் விபசாரம், ஒருபாலுறவு அனைத்தும் பெரும் பாவங்களாகவும் தண்டனைக்குரிய குற்றங்களாகவும் கணிக்கப்பட்டுள்ளன.
எனவே, திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. உங்களில் திருமணம் முடிக்காமல் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று குர்ஆன் கூறும் அதேவேளை திருமணம் செய்ய விரும்பாதவர் தன்னைச் சாராதவர் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாம் பிரம்மச்சாரியத்தையும் துறவு வாழ்வையும் எதிர்க்கிறது மட்டுமல்ல திருமண பந்தத்தை ஒர் இறைவழிபாடாகவே கருதுகிறது.
திருமணத்தை அடித்தளமாகக் கொண்ட குடும்ப வாழ்வு பாதுகாப்பானதும் மனநிம்மதி தருவதுமாகும். திருமணம் மூலமான பாலுறவால் எய்ட்ஸ் போன்ற சமூகநோய்கள் வருவதில்லை. குடும்பத்தின் நிழலில் வளரும் குழந்தைகள் உடல், உள ஆரோக்கியத்துடன் இருப்பர். தம்பதியர் தமக்கிடையே கடமைகளையும் உரிமைகளையும் கவனமாக சமநிலையில் பேணுவதற்கான சகல ஏற்பாடுகளையும் இஸ்லாம் கற்றுத் தருவது மாத்திரமன்றி வரலாற்றில் வாழ்ந்த நபிமார்கள் முதற்கொண்டு இற்றை வரை வாழும் முஸ்லிம்களும் உலகில் வாழும் குடும்ப வாழ்வை வலியுறுத்தும் ஏனைய சமயத்தவர்களும் திருமணம் செய்து மனித வாழ்வின் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.
திருமணம் மூலம் பாலியல் திருப்தி காணாத ஒருவர் வசதி வாய்ப்புக்கள், தகுதி மற்றும் சில நிபந்தனைகளையும் பெற்றிருப்பாராயின் நான்கு பெண்கள் வரை பலதார திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தனது கணவருடன் அவள் திருப்தி காணாத போது சட்டத்தின் முன் அவரை நிறுத்தி மணவிலக்கு செய்துவிட்டு மறுமணம் செய்யலாம் என்றும் இஸ்லாமிய சட்டம் தெரிவிக்கிறது.
இவ்வாறு திருமணத்தை வலியுத்திய இஸ்லாம் குடும்பம் என்ற குவலயத்தை மிக கவனமான பாதுகாப்பு அரண்களால் பாதுகாத்துமிருக்கிறது.
‘கிதாபுன் நிகாஹ்’ (திருமணம் பற்றிய பகுதி) என்று இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் தனியான சட்டப்பகுதியொன்று உள்ளது.
- எனவே சிலரால் துறவறம் வலியுத்தப்படுவதால் மனித நாகரீக இயக்கத்துக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அந்த மத குருக்களுக்கு திருமணத் தடை இருப்பதனால் அவர்கள் தமது உடல் ஆசைகளை வேறு வழிகளில் தீர்த்துக் கொள்கிறார்கள்.மனித இயல்பு கவனத்திற் கொள்ளப்படாத போது மனித உணர்வுகள் வெடித்துச் சிதறுவதை எவராலும் தடுக்க முடியாது.
- இறைவன் மனித இனத்தை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்து அவ்விருவரதும் உடல் அமைப்பில் பாலுப்புக்களையும் பாலியல் கவர்ச்சியையும் உண்டு பண்ணியிருப்பது உடலுறவு இடம்பெற்று ஆசைகளை தீர்த்து நிம்மதியடையட்டும் என்பதற்காகும். பிரமச்சாரியம் என்பது பெரும்பாலானோருக்கு ஒரு மாயை மாத்திரமே.அது இறை நியதிக்கு எதிரான அப்பட்டமான போராட்டமாகும்.
இறைவன் இல்லையென்று கூறும் நாஸ்திகன் தன்னையே தெய்வமாக எடுத்து வணங்குவது போல பாலுணர்வை அடக்க வேண்டும் என்று சொல்லும் பலருக்கு அது சாத்தியமற்ற எட்டாக் கனியாகும்.
இறுதியாக,
✓இந்த வீடியோக்களை பகிர்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
✓ஓரிரு மதங்களது தலைவர்கள் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக நாம் நினைத்து அவர்களை நோக்கி மட்டுமே விரல்களை நீட்ட முடியாது. அவர்களை நாம் குறை காணும் போது எமது மார்க்க தலைவர்களில் சிலரைப் பற்றியும் அவர்கள் ஆதாரங்களோடு நிருபிக்க முனைந்து விட்டால் நாம் தலைகுனிய நேரிடலாம். அவை பாலியல் சார் குற்றங்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.வேறு குற்றங்களாகவும் இருக்கலாம்.
✓ இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் எம்முடன் முரண்படுவோருக்கு ஏற்படும் துன்பங்களைப் பார்த்து சந்தோஷமடைவது கூடாது.
✓எவராவது முறைகேடாக நடந்ததாக உறுதியாகத் தெரிந்தால் தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் அவரை நாட்டின் சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லது.
✓மனித இயல்புக்கு இசைவான வாழ்வு முறையை சமூகமயப்படுத்தி குடும்ப நிறுவனத்தை பலப்படுத்த முயற்சிப்போமாக.
அல்லாஹ் எம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக!




