இன்று சர்வதேச தந்தையர் தினமாகும்.

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

இஸ்லாத்தை பொறுத்தவரையில் அப்படி ஒரு நாளை அதற்காக ஒதுக்கி தந்தையர்களை நினைவு கூரும், அன்று மாத்திரம் அவர்களை கவனிக்கும் அவர்களைத் தேடும் வழக்கம் கிடையாது.வருடத்தில் எல்லா நாட்களிலும் தந்தைக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை பிள்ளைகள் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது.

இருப்பினும் சில பதிவுகளை இங்கு இட வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் தந்தை யாரென்று தெரியாத, தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்ட, தந்தை இருந்தும் விவாகரத்தின் காரணமாக தந்தை தாய் பிரிக்கப்பட்ட நிலையிலுள்ள, உள்ளத்தில் ஈரமற்ற, எட்டியும் பார்க்காத தந்தைமாரைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்காக இந்த பதிவு.

இதனை வாசிக்கும் உங்களிற் சிலர் இப்படியிருக்கலாம். அல்லது உங்களது குடும்பத்தில் உறவுகளுக்குள் அயல்வீட்டில் ஊரில் வேறு ஊர்களில் இப்படியான பச்சிளம் பாலகர்கள் குழந்தைகள் சிறார்கள் இருக்கலாம். அவர்களது நிலையை, மனநிலையைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம்.

Fatherhood (தந்தைத்துவம்) இன் அதாவது தந்தையின் அன்பை, அரவணைப்பை, ஆசீர்வாதத்தை, கவனிப்பை முழுமையாக அனுபவிப்பவர்களுக்கு தந்தையற்று வாழ்வோரின் மனவேதனைகள், புலம்பல்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. தந்தையற்ற பிள்ளையின் வாழ்வு சோகமானது. தந்தையற்ற ஒரு பிள்ளைக்கு தாய் இருக்கலாம்.ஆனால், பிள்ளையின் முழுமையான ஆளுமை விருத்தியில் தாயின் பங்கு அரைவாசி தான். தந்தையின் இடைவெளி இடைவெளி தான்.

தகப்பன் எனும் பாத்திரத்துக்கு அல்லாஹ் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறான். நூஹ், இப்ராஹீம், லுக்மான்,லுக்மான் (அலை) போன்றோர் தத்தமது மகன்மாரை நெறிப்படுத்த, பயிற்றுவிக்க, பாதுகாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை அல்குர்ஆன் மிகத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ஒரு தாயின் பங்கை தந்தை வகிக்க முடியாது. தந்தையின் பங்கை தாய் வகிக்க முடியாது. தாய் குழந்தையை பத்து மாதம் சுமத்தல், பிரசவித்தல், பாலூட்டும், உணவூட்டல், கழிவுகளை அகற்றல், கற்பித்தல், நெறிப்படுத்தல் போன்ற அடுக்கிக்கொண்டே போகமுடியுமான பல சேவைகளை பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் செய்கிறாள். இவற்றில் பின்னால் குறிப்படப்பட்ட சில பணிகளை தந்தையும் செய்வதுண்டு. பிள்ளை கருவில் இருக்கும் போதும் மழலையாக இருக்கும் போதும் தாயின் பங்கே அதிகமானது. அதனாலோ என்னவோ தாயின் பங்கை பற்றி அல்லாஹ் அதிகமாக நினைவூட்டுகிறான். எனவே தாய்க்கு முதல் அந்தஸ்து இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் பொதுவாக தந்தையின் பங்கு சற்று வித்தியாசமானது. ஆனால், அத்தியாவசியமானது.

கருவில் குழந்தை இருக்கையில் கர்ப்பிணித் தாய்க்குத் தேவையான அனைத்து அடிப்படையான தேவைகளையும் அவரே பூர்த்தி செய்கிறார். உணவு, மருந்து, பாதுகாப்பு, மனநிம்மதி என்பன அவரால் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக கர்ப்பிணித் தாய்க்குக் கொடுப்பட வேண்டும்.

பிள்ளை பிறந்த பின்னர் தாய்க்கும் சேய்க்கும் சேர்த்து இப்பங்களிப்பு இருமடங்காக மாறவேண்டிய நிலை வருகிறது.

பிள்ளையின் அங்க சம்பூரணமான ஆளுமை விருத்திக்கு சத்துணவு,பாதுகாப்பான இல்லிடம், சுற்றுச்சூழல், வயதின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏற்ற கல்வி போன்றவை மிக முக்கியமான தேவைகளாகும். பெரும்பாலும் இவற்றை தாயால் வழங்க முடியாத நிலை தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தந்தையின் அரவணைப்பும் கண்டிப்பும் பிள்ளை வளர்ப்புக்கு மிக அவசியம். தாய் பெரும்பாலும் இரக்க சுபாவமுடையவளாக இருப்பாள். ஆனால் தகப்பனின் கண்டிப்பும் உறுதியான நிலைப்பாடுகளும் அதனை சமநிலைப்படுத்தும்.

அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கை நிர்ணயித்து மனித வாழ்வை சமச்சீராக இயக்குகிறான்‌.

இந்த சந்தர்ப்பத்தில் தான் தந்தையை இழந்த அல்லது தந்தையால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான சமூகத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும்.

சிறு வயதில் தந்தையை இழந்தவர்கள் அநாதைகள்(யதீம்கள்) எனப்படுவர். அவர்களை பராமரிப்பதும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வதும் சமூகத்தின் மீதான பாரிய பொறுப்பாகும். தந்தை உயிருடன் இருந்தும் தந்தையின் அரவணைப்பை இழந்து தவிப்போரையும் இந்தப் பிரிவில் சேர்க்க வேண்டும்.

தந்தை இல்லையே என்ற குறையை அவர்கள் சிறிய அளவில் கூட உணராத விதத்தில் உற்றார் உறவினர் மற்றோர் அனைவரும் மிகக் கவனமாக நடக்க வேண்டும். அனாதையின் மனதில் ஏற்படும் ஒரு சிறிய காயமும் சமூகத்திற்கு பாரிய அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

அநாதை பராமரிப்பு பற்றிய குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் ஏராளம் உள்ளன.அவற்றை இங்கு விரிவாக குறிப்பிடத் தேவையில்லை.

அனாதைகளே!

தகப்பன் இருந்தும் அநாதைகளாக இருப்பவர்களே!

நீங்கள் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்.அவன் உங்களுக்கு உதவுவான்.

தந்தையர் தினத்தில் உங்களது உணர்வுகளை நாம் மதிக்கிறோம். உங்களுக்குரிய அடிப்படை உரிமைகளை வழங்காமல் பொடுபோக்காக இருப்பவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்கட்டும். அது ஒரு பெரிய பாவம் என்பதை அவர்கள் உணரட்டும்.

உங்களிற் சிலர் உங்கள் பெற்றோரின் விவாகரத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். விவாகரத்துக்கு யாரெல்லாம் காரணமாக அமைந்தார்களோ அவர்கள் அனைவரும் மறுமையில் நிச்சயமாக கடுமையாக விசாரிக்கப்படுவார்கள். நீங்களும் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தான் போகிறீர்கள்.

சர்வதேச தந்தையர் தினத்தில் கவனப்பாரற்று இருக்கும் அனாதைகளே! உங்களது மன தைரியத்துக்காக அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.உங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!

சூரதுல் ளுஹாவில் அல்லாஹ் அநாதையாகிய தனது நபிக்கு ஆறுதல் கூறுகிறான்.அந்த ஆறுதல் உங்களுக்கும் கிடைக்கட்டுமாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top