அஷ்ஷைக் பளீல்
மத்திய கிழக்கில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு இவ்வளவு கேள்வியா? சுபஹானல்லாஹ்!
இன்று இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்களது இயல்பு வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் பாலைவனங்களில் மக்கள் வரிசைகளில் நிற்பதுபோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும் மக்கள் சாரிசாரியாக கூட்டம் கூட்டமாக வரிசை வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
எரிபொருள் மனித வாழ்வுடன் மிக நெருக்கமான தொடர்பு பட்டுவிட்டது. எரிபொருள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் போக்குவரத்து சாதனங்களாக மாட்டு, கழுதை வண்டிகளும் துடுப்பின் உதவியால் இயங்கிய வள்ளங்களும் காற்றினால் இயங்கிய கப்பல்களுமே இருந்தன.
ஆனால், எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருளால் இயங்கும் போக்குவரத்து சாதனங்களும் இயந்திர சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது எரிபொருள் இல்லாமல் உலகமே இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. அது இல்லாமல் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடுகிறது.
இலங்கையில் மின்சாரம் நீர்வீழ்ச்சிகளால் பெறப்படுவதுபோலவே அனல் மின்சாரத்தாலும் பெறப்படுகிறது.அனல் மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் தான் தேவைப்படுகிறது.
தொலைத்தொடர்பு கோபுரங்கள் இயங்கவும் மின்சாரம் தேவை. மின்சார உற்பத்திக்கு எரிபொருள் தேவை என்ற நிலை வந்துள்ளது. கோபுரங்களுக்கு மின்சாரம் இல்லையாயின் கையடக்கத் தொலைபேசிகளும் இயங்காது.
சுருங்கக்கூறின், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளிலிருந்து எரிபொருள் இலங்கைக்கு வராவிட்டால் எமக்கு வாட்ஸ்அப் கூட ஏன் சாதாரணமான எஸ்.எம்.எஸ். கூட அனுப்ப முடியாது. இப்படியான நிலை வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களதும் ஸஹாபாக்கள், தாபியீன்களதும் கால்களுக்குக் கீழால் தான் அந்த எரிபொருளை அல்லாஹ் வைத்திருந்தான். இன்று அது இல்லாமல் உலகின் மூலை முடுக்குகளில் உள்ள சாதாரண மோட்டார் சைக்கிள்களோ தொலைபேசிகளோ வேலை செய்யாது என்றால் அல்லாஹ்வின் திட்டம்தான் என்ன?
உலகில் எண்ணை உற்பத்தி நாடுகளில் முறையே சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், அல்ஜீரியா, ஓமான், சூடான், எகிப்து என்பனவே முன்னணி வகிக்கின்றன. சவுதி அரேபியா ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய் களை உற்பத்தி செய்கிறது.ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் 13 அரபு நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியில் 36% ஐக் கொண்டிருக்கின்றன. முஸ்லிமல்லாத நாடுகளான வெனிசுலா, கனடா போன்றனவும் அதிகமான எண்ணெயை உற்பத்தி செய்தாலும் தற்போது இலங்கைக்கு இது விடயமாக அதிகம் உதவும் நாடாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம்(UAE) தான் இருந்து வருகிறது. அண்மையில் முன்னைநாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில அவர்கள் கூட ஐ.அ.ராஜ்யத்துக்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லாஹ் பூமிக்கடியில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு என்பன நாகரீக வளர்ச்சிக்கும் சனத்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளாக அவ்வப்போது வெளியே கொண்டு வரப்பட்டு மனித வாழ்வுக்கு தேவையான சக்தியை வழங்குகின்றன.
குறிப்பாக உலகத்தின் மொத்த எண்ணெய் வினியோகத்தில் கணிசமான பங்கு அரபு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது என்பதும் மிக அதிகமாக உலகம் இது விடயமாக அரபு நாடுகளிலேயே தங்கியிருப்பதும் அல்லாஹ்வின் நாட்டமாகும்.
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ ﴿٢١ الحجر﴾
“எந்த ஒன்றாக இருந்தாலும் அதனுடைய களஞ்சியங்கள் எம்மிடமே இருக்கின்றன. அவற்றை நாம் குறிப்பிட்ட அளவில் அன்றி நாம் இருக்குவதில்லை” என அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் எல்லா பாக்கியங்களையும் தன்னகத்தே வைத்திருக்கின்றான். மனிதனது தேவைக்கு ஏற்பவே பூமியில் அப் பாக்கியங்களை தேவையான அளவில் காலத்துக்குக் காலம் படிப்படியாக இறக்குகின்றான்.
ஸுப்ஹானல்லாஹ்!




