தற்கால உலகில் முஸ்லிம் சமூகத்தில் தரீக்காக்கள் உட்பட தப்லீக், தவ்ஹீத், இக்வான், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
முதலில் அந்த ஒவ்வொரு இயக்கத்தையும் தோற்றுவித்தவர்களுக்கு நாம் துஆ செய்ய வேண்டும். அவர்கள் சுயநலத்துக்காக செயல்பட்டிருப்பார்கள் என கூற முடியாது. அவர்களது தியாகங்களை பார்க்கின்ற பொழுது அவர்கள் நிச்சயமாக புகழப்பட வேண்டியவர்கள் என்பது முதல் கருத்தாகும்.
அவர்களில் ஒவ்வொருவரும் தாம் வாழ்ந்த காலத்திலிருந்த தேவைகள், சவால்களை கவனத்தில் எடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்ந்த பிரதேசம், நாடு, சமூக சூழலில் இருந்த பாவங்கள், தேவைகள், குறைபாடுகள் என்பவற்றை திட்டமிடலின் போது செயல்பாட்டிலும் கவனத்தில் எடுத்து அவற்றுக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே, அவர்களது திட்டங்களில் அணுகுமுறைகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின், சமூகத்தின் வாசனையும் தன்மையும் வெளிப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, அவர்கள் வாழ்ந்த சூழலிலும் சமூக அமைப்பிலும் இருந்த பிரச்சினைகளும் தேவைகளும் எக்காலத்திலும் இருக்கும் என்று கூற முடியாது. அந்தவகையில் 2022 வது வருடத்தில் இருக்கும் நாம் அவர்கள் மேற்கொண்ட திட்டங்களில், முன்னுரிமை படுத்திய அம்சங்களில் பொருத்தமானவற்றை மாத்திரம் தெரிவு செய்து எடுத்துக் கொண்டு ஏனையவற்றை விட்டுவிட வேண்டும். எமது காலத்துக்கே உரிய தேவைகளை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
‘ரஷ்யாவில் மழை பெய்யும் போது ஒரு கம்யூனிஸ்ட் இலங்கையில் குடை பிடித்தானாம்’ என்பது போல ஒவ்வொரு நாட்டுக்குமான தேவைகளும் வித்தியாசப்படும் என்பதால் எல்லா இயக்கங்களிலும் உள்ள , நல்ல, நமது சூழலுக்கு பொருத்தமான தேவையானவற்றை மாத்திரம் எடுத்து அவற்றிற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் எவற்றை முன்னுரிமை படுத்த வேண்டும் என்பதிலும் ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவதிலும் சம்பவங்களை குறிப்பிடுவதிலும் அவர்கள் தவறுகளை விட்டிருக்க முடியும். ஆனால், அவற்றை நாம் மனிதர்களது தவறு என்று வைத்துக் கொண்டு அவற்றை விமர்சன ரீதியாகப் பார்த்து, அவர்களை மன்னித்து, அவர்களுக்கு துஆ செய்து, அன்னப்பறவை போன்று அவர்களது செயல்பாடுகளை நாங்கள் பார்த்து நடந்து கொள்வது தான் எல்லா வகையிலும் பொருத்தமாக இருக்கும்.
இப்போது அவர்களை நாம் தாறுமாறாக விமர்சித்தால் எமக்கு பின்னால் வர இருப்பவர்கள் எங்களை விமர்சிப்பார்கள். நாம் 2022ல் கடைபிடிக்கும் அதே ஒழுங்குதான் 2050 இலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று எமக்குப் பின்னால் வருபவர்கள் சொன்னால் அது பொருத்தமில்லை என்று நாமே சொல்லுவோம். எனவே, இது விடயமாக நிதானமாக கவனமாக யோசிக்க வேண்டும் என்று பணிவாக வேண்டிக்கொள்கிறேன்.
இல்யாஸ்(ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் ஈமானிலே மிகவும் பலவீனர்களாக, அடிப்படையான கடமைகளான தொழுகைகளைக் கூட நிறைவேற்றாதவர்களாக பாவங்களில் மூழ்கி வாழ்ந்து வந்தார்கள். எனவே, அத்தகைய மக்களை சீர்திருத்தி, இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளை முன்வைத்து ஸாலிஹானவர்களாக அவர்களை மாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறை எடுத்தார்கள்.
இமாம் ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்கள் வாழ்ந்த எகிப்திய சூழலிலே மக்கள் மேற்கத்திய நாகரிகம், சடவாதம், சுயநலம் நாஸ்திகம் என்பவற்றில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்.எனவே, மேற்கத்திய நாகரீகம் என்பது பிழை. அதனை நாம் பின்பற்றக் கூடாது. இஸ்லாம் தான் பொருத்தமானது என்ற கருத்தை அவர்கள் ஆழமாக, அறிவு பூர்வமாக முன்வைத்தார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய மௌலானா மௌலூதி(ரஹ்) அவர்களும் ஏறத்தாள இதே போக்கைத் தான் கடைப்பிடித்தார்கள். குறிப்பாக படித்த வர்க்கத்தை இலக்காகக் கொண்டு அவர்களது பிரசாரம் அமைந்தது.
சவூதி அரேபியாவில் தோன்றிய இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் தான் வாழ்ந்த காலத்து மக்கள் இஸ்லாத்தின் பெயரில் மூடநம்பிக்கைகள், பில்லி சூனியம், ஜாதகம் பார்த்தல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் தூய அகீதாவை முன் வைக்க அவர்கள் உழைத்தார்கள்.
தரீக்காக்களை ஸ்தாபித்த இமாம்களான அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) போன்றவர்கள் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தும் தஸ்கியாவுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள். பெருமை, பொறாமை,வஞ்சகம் உலக மோகம், கஞ்சத்தனம், நயவஞ்சகத்தனம் போன்ற உள நோய்களைக் கொண்டவர்களாக மனிதர்கள் இருப்பதை கண்டார்கள். எனவே உளப்பரித்தம் என்பது அவர்களது முன்னுரிமையாக இருந்தது.மேலும் மனிதர்களிடத்தில் அடிப்படையான பண்பாடுகளை அவர்கள் உருவாக்கினார்கள். மக்களை அல்லாஹ்வோடு நெருக்கமாக்குகின்ற ஆன்மீக பணியிலே சம்பந்தப்பட்டார்கள்.
மேலை கூறப்பட்டவற்றில் நாம் குறிப்பிடாத பல நல்ல செயற்பாடுகளிலும் ஒவ்வொரு இயக்கத்தவர்களும் அதன் ஸ்தாபகர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடத் தேவையில்லை.
எனவே ஒவ்வொரு இமாமும் தத்தமது காலத்தில் இருந்த தேவைகளை கருத்தில் கொண்டார்கள்.
ஒவ்வொரு நபியும் தான் வாழ்ந்த காலத்தில் ஈமான் மற்றும் இபாதத்களுக்காக மக்களை அழைத்ததோடு ஒவ்வொரு விதமான பாவத்தை எதிர்த்தமையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மூஸா (அலை) அவர்கள் பிர்அவுனின் அராஜகத்திற்கு எதிராகவும்,இப்ராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்புக்கு எதிராகவும், லூத் (அலை) அவர்கள் ஒழுக்க வீழ்ச்சிக்கு எதிராகவும், சுஐப்(அலை) அவர்கள் அளவை நிறுவையிலே மோசடி செய்து பூமியில் விஷமம் செய்தவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
எனவே, ஒவ்வொரு தூதரினதும் தூதில் அவ்வக்கால தேவைகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அது போலவே மேற்படி இமாம்களும் தத்துமது காலத்தின் தேவைகளை கருத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று நாம் நிதானமாக யோசிப்போம்.
ஆனால் எல்லாக் காலங்களுக்கும் எல்லா சமூகங்களுக்கும் எப்போதுமே அத்தியாவசியமாக தேவைப்படும் அடிப்படையான அம்சங்கள் எமது முன்னுரிமைப் படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
நவீன காலத்தில் நாம் மற்றவர்களை நல்ல கண்கொண்டு பார்த்து, அவர்களிடம் இருந்து நல்லவற்றை மாத்திரம் எடுத்து, பொருத்தமில்லாதவற்றை தவிர்ந்து, எமது காலத்துக்கு ஏற்ற தஃவா உத்திகளை கையாள்வோம். பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டு அவர்களைப் பற்றிய ஃபத்வாக்களை வெளியிட்டு கொண்டு நாம் அநியாயமாக பாவங்களை சம்பாதித்துக் கொள்ள கூடாது.
எமது பணிவான வேண்டுகோள்:-
எம்மில் ஒவ்வொருவரும் இஸ்லாமிய சமூகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு இயக்கத்தினதும் ஸ்தாபகர், அவரது கால சூழல், அவர் கொண்டிருந்த கொள்கைகள் கடைப்பிடித்த அணுகுமுறைகள் பற்றி எவ்வித பக்க சார்பும் இன்றி உளத்தூய்மையுடன் ஆராய்ச்சி செய்து நல்ல தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.இதற்காக அந்த அந்த இயக்கத்தவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் நிகழ்த்தப்பட்ட உரைகளையும் முதன் முதலில் தேடி எடுத்து படிக்கவும் பார்க்கவும் வேண்டும். கறுப்புக் கண்ணாடி போட்டு பார்க்காமல் நல்ல நிய்யத்தோடு ஈடுபட வேண்டும்.
பிழைகள் இருப்பின் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு தனிமனித திருப்தி தேவையில்லை. அல்லாஹ்வுக்கு பொருத்தமாக நடக்க வேண்டும்.
நான் ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்பான ஒரு மத்ரஸாவில், அத்தகைய கொள்கை கொண்ட உஸ்தாத்மார்களிடம் கற்றேன் என்பதற்காக அது தான் சரி என்ற முடிவுக்கு வராமல் தூய இஸ்லாத்தின் தராசில் மத்ரஸாவையும் உஸ்தாதுமாரையும் வைத்துப் பார்க்க வேண்டும்.
இதற்கு இஸ்லாம் பற்றிய மொத்தமான முழுமையான பார்வையும் தெளிவும் தேவை.பரந்த வாசிப்பும் தேடலும் வேண்டும்.
இஸ்லாம் முதலிலும் இயக்கம் இரண்டாவதும் வர வேண்டும். இஸ்லாத்துக்காக இயக்கம். இயக்கத்துக்காக இஸ்லாம் அல்ல.
நீதியாக நடப்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனை. ஒருவரது சுயம், குடும்பம், நற்பு, பணம், தொழில் அனைத்துக்கும் மேலால் தான் நீதி இருக்க வேண்டும்.
என்னால் எதனை சாதிக்க முடியும் என்று நான் நினைக்கின்றேனோ அதனை சாதிப்பதற்கும் சாதிக்க முடியாததை சாதிக்க முடிந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு மௌனமாக இருப்பதற்கு நான் பழகிக்கொள்ள வேண்டும்.
நான் மேலே கூறியவற்றில் பொருத்தமானவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு பிழையானவை என நீங்கள் கருதுபவற்றை நிராகரிப்பதற்கு எவருக்கும் உரிமையுண்டு.
அல்லாஹ்வே. போதுமானவன்.




