வெள்ளப்பெருக்கும் கடும் வறட்சியும் – காரணங்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)

அண்மைக் காலத்தில் குறிப்பாக நமது நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் வேறு சில காலங்களில் பயங்கரமான வறட்சி ஏற்படுவதையும் கண்டு வருகிறோம்.

வெள்ளப் பெருக்கினால் வீடுகள், கடைகள், பயிர் நிலங்கள் என்பன சேதத்துக்கு உள்ளாகின்றன.வேறு சில காலங்களில் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு கூட நீர் இல்லாத கடும் வளர்ச்சி ஏற்படுவதையும், பயிர் பச்சைகள் அழிந்து போவதையும் காண்கிறோம்.

வெள்ளம், வறட்சி ஆகிய இவ்விரண்டும் மிக வித்தியாசமான இரண்டு அனர்த்தங்களாகும்.

இந்த அர்த்தங்களைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? இவற்றைத் தடுப்பதற்கு எமது மார்க்கம் காட்டி தந்த ஒழுங்கு விதிகள் யாவை? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

உலகில் நடக்கும் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்று நாம் உறுதியாக விசுவாசிக்கின்றோம். அவை நலவாக இருந்தாலும் கெடுதியாக இருந்தாலும் இறைவனது நாட்டம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை.

ஆனால் மனிதன் தேடிக்கொண்ட தீவினைகளின் காரணமாக அவனை திருத்துவதற்காகவும் அல்லாஹ் சிலவற்றை தண்டனைகளாக இறக்குகிறான்.

ظَهَرَ ٱلْفَسَادُ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِى ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ ٱلَّذِى عَمِلُواْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

“மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. அவர்கள் திருந்துவதற்காக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வான்.”(30:41)

சூழலின் மீது மனிதன் அத்துமீறல் செய்கின்ற பொழுது வெள்ளமோ அல்லது வறட்சியோ ஏற்படுகின்றது. இயற்கையின் சமநிலையை மனிதன் குலைக்கின்ற பொழுது, சூழலை பேணத் தவறுகின்ற பொழுது சூழல் அவனுக்கு எதிரியாக மாறி அவனையே அழித்து விடும். அதாவது சூழலை மதிக்காத பாதுகாக்காத சமுதாயத்தை அல்லாஹ் தண்டிப்பான்.

அந்த வகையில் மனிதன் சமூகமாக வாழ்கின்ற பொழுது பிறரும் தன்னோடு வாழுகிறார்கள் என்ற உணர்வோடு உலகத்தில் அவன் சகல கருமங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மக்கள் பயணம் செய்யும் பாதைகளை அவர்களுக்கு சௌகரியமாக அமைத்துக் கொடுப்பதும் அப்பதையில் இருக்கும் தடைகளை அகற்றுவதும் இஸ்லாத்தில் மிகவும் வரவேற்கத்தக்க,புண்ணிய கருமங்களாகவே கருதப்படுகின்றன.

தற்காலத்தில் பாதைகளில் மக்கள் பயணிப்பதற்கு பெரும் இடையூறாக இருப்பது பாதைகளில் அல்லது பாதை ஓரங்களில் குப்பைகள், உடைந்த போத்தல்கள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை போடுவதாகும்.அங்கு துர்நாற்றம் ஏற்படும்.அதே நேரத்தில் பாதசாரிகளுக்கும் வாகனங்களை செலுத்துபவர்களுக்கும் அது பெரும் தொந்தரவாக அமைகிறது. சிலப்பிரதேசங்களில் மக்கள் தத்தமது வீடுகளது குப்பைகளை சேர்த்து வைத்திருந்து தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் அல்லது பாதையின் ஓரத்தில் போட்டு விட்டு போய்விடுகிறார்கள்.

சிலர் தமது ஆடு, மாடுகளை உரிய இடங்களில் மேயவிடாமல் பாதை ஓரங்களில் கட்டாக்காலிகள் போன்று விட்டு விடுவது வாகன விபத்துக்கள் இடம் பெறுவதற்கு அல்லது வாகன நெரிசல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைகிறது.

ஆறுகளது இரு ஓரங்களிலும் வீடுகளையோ கடைகளையோ அமைப்பது மழை காலங்களில் அந்த ஆறுகள் பெருக்கெடுத்து சுதந்திரமாக ஓடுவதற்கு பெரும் தடையாக அமைகிறது. வெள்ளம் வரும் பொழுது அருகில் இருக்கின்ற வீடுகள், கடைகள் மற்றும் பாதைகள் நீரில் மூழ்க வாய்ப்பு அதிகம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்:-

إماطة الأذى عن الطريق صدقة .(رواه مسلم 1668 وأبو داود 1285 )

“பாதையில் இருக்கும் தீங்கு பயப்பவற்றை அப்புறப்படுத்துவதும் ஸதகா( தர்மமாகும்)” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

وإماطتُكَ الحجرَ والشَّوْكَ والعظمَ عنِ الطَّريقِ لَكَ صدقةٌ

أخرجه الترمذي (1956) واللفظ له، وابن حبان (529)

“நீ பாதையிலிருந்து கற்களை, முட்களை எலும்புகளை அப்புறப்படுத்துவதும் உனக்கு தர்மமாக அமையும்” (திர்மிதீ, இப்னு ஹிப்பான்) என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே,தர்மத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உயர்தரனமான சுவர்க்கத்தில் நுழைய வேண்டுமாயின் பாதைத் துப்புரவுப் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அல்லது பாதைகளுக்கு இடையூறாக அமையும் எதனையும் அங்கு போடக்கூடாது.

الإِيمانُ بضْعٌ وسَبْعُونَ، أوْ بضْعٌ وسِتُّونَ، شُعْبَةً، فأفْضَلُها قَوْلُ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَدْناها إماطَةُ الأذَى عَنِ الطَّرِيقِ (صحيح مسلم 35)

“ஈமானுக்கு 70 சொச்சம் கிளைகள் இருக்கின்றன. அதில் மிக சிரேஷ்டமானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவாகும். அவற்றில் தாழ்ந்த கிளை பாதையில் இருக்கும் மனிதர்களுக்கு தொந்தரவு தரும் அம்சங்களை அகற்றுவதாகும்” (ஸஹீஹ் முஸ்லிம்) என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.

بيْنَما رَجُلٌ يَمْشِي بطَرِيقٍ وجَدَ غُصْنَ شَوْكٍ علَى الطَّرِيقِ فأخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ له فَغَفَرَ له.

(أخرجه البخاري (652)، ومسلم (1914)

நபி( ஸல்) அவர்கள்:- “ஒருவர் பாதையில் நடந்து செல்லும் போது முற்களைக் கொண்ட மரக்கிளை ஒன்றைக் கண்டு அதனை அப்புறப்படுத்தினால் அவருக்கு அல்லாஹ் நன்றி கூறி அவருக்கு மன்னிப்பு வழங்குகிறான்.” (புகாரி, முஸ்லிம்) என்றார்கள்.

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்றி கூறுகிறான் என்றால் இதனை விடவும் உயர்ந்த பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும்?

من رفع حجرًا من الطريقِ ؛ كُتِبتْ له حسنةٌ ، ومن كانت له حسنةٌ ؛ دخل الجنَّةَ (أخرجه الطبراني (20/101) (198)، والبيهقي في ((شعب الإيمان)) (11174).

நபி( ஸல்) அவர்கள்:- “பாதையிலிருந்து கல்லை தூக்கும் ஒருவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். யாரிடம் ஒரு நன்மை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விட்டார்” (தபரானி,பைஹகீ) என்றார்கள்.

ஓர் அரசியல்வாதி அல்லது தனவந்தர் நன்நோக்கோடு ஒரு பாதையை அமைத்துக் கொடுப்பாராயின் அல்லது செப்பனிடுவாராயின் அவருக்கு மிகப் பிரமாண்டமான அளவு நன்மைகள் கிடைக்கும். மக்கள் அப்பாதையில் பிரயாணம் செய்து பயனடையும் வரைக்கும் அவருடைய கப்ருக்கு அதனுடைய நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல மக்கள் தொந்தரவுக்கு உள்ளாகும் வகையில் பாதைகளை பயன்படுத்துவோர் மனிதர்களதும் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளார்கள்.

أنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ قالَ: اتَّقُوا اللَّعَّانَيْنِ قالوا: وَما اللَّعَّانَانِ يا رَسُولَ اللهِ؟ قالَ: الذي يَتَخَلَّى في طَرِيقِ النَّاسِ، أَوْ في ظِلِّهِمْ (صحيح مسلم 269)

நபி( ஸல்) அவர்கள்:- “(அல்லாஹ்வினதும் மக்களதும்) சாபத்தைப் பெற்று தரும் இரண்டு கருமங்களை பயந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் ‘சாபத்தைப் பெற்று தரும் இரண்டு கருமங்கள் யாவை?’ என்று கேட்ட பொழுது, “மக்கள் பயணிக்கும் பாதையில் அல்லது அவர்களது மரங்கள் நிழல் தரும் இடங்களில் மலசலம் கழிப்பதாகும்.” என்றார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்)

எனவே, பாதைகளை தேவையான அளவு விசாலமாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது அடிப்படையான மார்க்கக் கடமையாகும். அதேபோல் பாதசாரிகளுக்கோ வாகனங்களுக்கோ தொந்தரவை, இடையூறை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் ஈமானையே பாதித்துவிடும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஒருவர் தனது வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்த முன்னர் அவ்விடம் வாகனம் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடமா என்பதை கவனத்தில் கொள்வதோடு தான் வாகனத்தை நிறுத்தினால் ஏனைய வாகனங்களை அங்கு நிறுத்துவதற்கு முடியாத நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் பாதை ஓரங்களில் நின்ற வண்ணம் கதைத்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ தமது வாகனத்தை இரவில் செலுத்தும் போது head light ஐ அவ்வாறே ஒளிரவிடுவர்.

ஒருவர் உப பாதையொன்றில் இருந்து பிரதான பாதைக்கு தனது வாகனத்தை செலுத்தும் போது திடீரென முன் பின் பார்க்காமல் வந்த வேகத்தில் செலுத்துவதைப் பார்க்கிறோம். இவை விபத்துக்களுக்கு பிரதான காரணமாக அமைகின்றன.

.لا يُؤْمِنُ أحَدُكُمْ حتَّى يُحِبَّ لأَخِيهِ (أَوْ قالَ: لِجارِهِ) ما يُحِبُّ لِنَفْسِهِ.(صحيح مسلم : 45)

நபி( ஸல்) அவர்கள்:-

“உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவது ஏன் தன சகோதரருக்கும் விரும்பு வரைக்கும் ஈமான் கொண்டவராக மாட்டார்” என்று கூறினார்கள்.

எமது வீட்டுக்கு முன்னால் இருக்கின்ற பாதை துர்நாற்றம் வீசுவதாகவோ ஒடுங்கியதாகவோ இருப்பதை நாம் விரும்ப மாட்டோம். எனவே உலகின் எந்த மூலை முடுக்கில் இருக்கும் பாதையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, சூழலை சுத்தமாக வைத்திருந்தால் வடிகால்களை சுதந்திரமாக ஓடவிட்டால் வெள்ளப்பெருக்கையும் வறட்சிகளையும் இன்ஷா அல்லாஹ் இயன்ற வரை தவிர்க்க முடியும்.

பாதைகளில் வாகன நெரிசலை தவிர்க்கவும் வாகன விபத்துக்களை குறைக்கவும் பாதைகளுக்குரிய உரிமைகளை மக்கள் கொடுக்க வேண்டும். அப்போது பாதைகள் மக்களும் வாகனமும் பயணிப்பதற்கான பாதுகாப்பான இடங்களாக இருக்கும்.

25.12.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top