இப்படி ஒரு பிரகடனத்தை அனைத்து மதத் தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டால் நல்லது என்பது பணிவான எனது அபிப்பிராயம்.
அனைத்து மதத்தலைவர்களது ஏகோபித்த பிரகடனம்
- இந்த நாட்டில் முதலில் பிரிட்டிஷாராலும் அடுத்ததாக பதவிக்கு வந்த கட்சிகளாலும் பிரித்தாளும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்கு அல்லது ஆட்சியில் நிலைத்து நிற்பதற்கு மதம், இனம்,மொழி,பிரதேசம் ஆகிய நான்கையும் வைத்து மக்களுக்கு மத்தியில் பிரிவினைகள் உருவாக்கப்பட்டன.
1957, 1983, 1978 ஆகிய வருடங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளுக்கும் 30 வருட யுத்தத்துக்கும் அரசியல் அதிகாரத்தை அடைய வேண்டும் அல்லது அடைந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடிப்படையாக அமைந்தது. திகனை, தர்காநகர், காலி, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் அரசியல் அபிலாஷைகளே காரணமாகும். இதற்காக மதவாத உணர்வு தூண்டப்பட்டது.
எனவே, இந்த நாடு பலமான அரசியல் மற்றும் பொருளாதார நிலையை அடைந்து சுபீட்சமான சூழ்நிலை உருவாக வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் முக்கியம் என்ற வகையில் இதன் பிறகு இந்த நாட்டில் மதத்தை இனத்தை மொழியை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசாரங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- ஒவ்வோர் இனத்தினதும் மத நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், கலாசார விழுமியங்கள் என்பவற்றின் மீது பிறர் அத்துமீறல் செய்வதும் தலையீடு செய்வதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். அரசும் குடிமக்களும் பன்மைத்துவத்தை அங்கீகரித்து பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்போடும் அனைத்து இனத்தவரும் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- நியமனங்களின் போதும் ஆட்களைப் பதவிகளுக்கு சேர்க்கும் போதும் இனரீதியான பாகுபாடு பார்க்கப்படலாகாது. கல்வித் தகைமைகள், திறமை, போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே இவை தீர்மானிக்கப்பட வேண்டும்.
- நாட்டின் எப்பிரதேசத்தையாவது அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படுமாயின் அங்கு மதம், இனம், மொழி பாகுபாடுகள் கவனிக்கப்படாமல் அபி விருத்தி முயற்சிகள் இடம் பெற வேண்டும்.
- ஒவ்வொரு சமயத்தையும் சேர்ந்தவர்கள் பிற சமயங்களது போதனைகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றைத் தெரிந்து கொள்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உறுதிப் படுத்தப்பட வேண்டும். இதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
- இனத்தை, மதத்தை, பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். ஏற்கனவே அக்கட்சிகளை உருவாக்கியவர்கள் கூறுகின்ற நியாயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு குறைபாடுகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
(மேலே கூறப்பட்டவை பற்றியும் இணைக்கப்பட வேண்டிய நீக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றியும் அபிப்பிராயங்களை தெரிவியுங்கள்.)




