முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை கொடுக்கலாமா என்ற விடயத்தில் பின்வரும் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.

ஷாபி மத்ஹபின் கருத்து அவ்வாறு கொடுக்க முடியாது என்பதாகும். காரணம் உழ்ஹிய்யா என்பது முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதற்கென்று தான் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இமாம் மாலிகின் கருத்துப்படி அவ்வாறு கொடுப்பது மக்ரூஹாகும். ஆனால், பெறுபவர் உழ்ஹிய்யா கொடுப்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பின் அவ்வாறு கொடுக்கலாம் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

ஹம்பலி மற்றும் ஹனபி மத்ஹப்களைச் சேர்ந்த பெரும்பாலான இமாம்கள் அவ்வாறு கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இமாம் இப்னு குதாமா அவர்கள் உழ்ஹிய்யா என்பது ஒரு சுன்னத்தான ஸதகா என்பதால் காபிரான ஒருவருக்கும் அதனைக் கொடுக்க முடியும் என்றும் ஏனைய சுன்னத்தான ஸதகாக்களைப் போல் அதனை (முஸ்லிம் நாட்டில் இருக்கும் முஸ்லிம்களது பாதுகாப்பில் வாழும்) திம்மீக்கும் கைதிக்கும் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.(அல்முக்னீ-9/450)

கொடுக்க முடியும் என்பதற்கு பின்வரும் நியாயங்கள் உள்ளன:-

  1. அவ்வாறு கொடுப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களது உள்ளங்களை வென்று கொள்ள முடியும். ஸதகாக்களையும் அன்பளிப்புக்களையும் பொதுவாக அவர்களுக்கு கொடுக்க முடியும் என்ற வகையில் உழ்ஹிய்யாவையும் நாம் கொடுக்க முடியும். உழ்ஹிய்யாவை முஸ்லிம்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை கிடையாது. அவ்வாறு கொடுக்கக் கூடாது என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் இல்லை.
  2. அல்லாஹுத்தஆலா நல்லடியார்களின் பண்புகள் பற்றி கூறும் போது “அந்த உணவை அவர்கள் நேசித்த பொழுதிலும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் அதனைக் கொடுப்பார்கள்” என்று குர்ஆனில் கூறுகிறான். இங்கு வந்திருக்கின்ற கைதிகள் என்போர் முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிக்கும் என்று இப்னு ஜுரைஜ், அல்ஹசன், கத்தாதா போன்றது கருத்தாகும். முஸ்லிம் அல்லாத கைதிகளுக்கு உணவளிப்பது என்ற பிரிவில் உழ்ஹிய்யாவை கொடுப்பதையும் உள்ளடக்க முடியும்.
  3. ஆடொன்று அறுக்கப்பட்டு அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் “நீங்கள் எனது பக்கத்து வீட்டில் இருக்கும் யூதருக்கும் பங்கு கொடுத்தீர்களா” என்று விசாரித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரஈல்(அலை) அவர்கள் தொடர்ந்தும் பக்கத்து விட்டான் தொடர்பாக உபதேசித்துக் கொண்டிருந்தார்கள் என்ற ஹதீஸையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
  4. ‘அல்லஜ்னதுத் தாஇமா’ என்ற பத்வா மன்றம் வழங்கிய பதுவாவில் ஒருவர் (இஸ்லாமிய நாட்டுடன்) உடன்படிக்கை செய்திருக்கும் காபிரானவராகவோ கைதியாகவோ இருக்கும் நிலையில் அவர் ஏழையாக அல்லது உறவுக்காரராக அல்லது பக்கத்து வீட்டுக்காரராகவும் இருந்தால் அவருக்கு உழ்ஹிய்யா இறைச்சியிலிருந்து கொடுக்கலாம் என்றும் இத்தகையோரது உள்ளங்களை வென்று கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு பின்வரும் குர்ஆன் வசனத்தை அவர்கள் ஆதாரமாக காட்டுகிறார்கள். “உங்களுடன் மார்க்க விவகாரத்திற்காக போராடாத உங்களை உங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதை விட்டும் அவர்களுடன் நீதியாக நடந்து கொள்வதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான்”(60:8)

அஸ்மா (ரலி) அவர்களது முஸ்லிம் அல்லாத தாயார் மதீனா வந்திருந்த போது அவர்களை சேர்ந்து நடக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அதாவது அந்த தாய்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் படியான கட்டளையாக அது அமைந்தது. இந்த சம்பவமும் மேலுள்ள கருத்தைப் பலப்படுத்துகிறது.

எகிப்து நாட்டின் பத்வா மன்றமான தாருல் இப்தா அல்மிஸ்ரிய்யாவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இறுதியாக, அடிப்படையில் உழ்ஹிய்யாவை முஸ்லிம்களுக்கு கொடுத்தால் தான் அதிகமான நன்மை கிட்டும். எனவே முஸ்லிம்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், பிற சமயத்தினர் அயல்வீட்டாராக, நெருங்கிய நண்பர்களாக இருந்து உழ்ஹிய்யா இறைச்சியின் பால் தேவையுடையோராகவும் இருந்தால் அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து அவர்களுக்கு வழங்குவதனால் பல நலன்களை அடைந்து கொள்ள முடியும் என்றிருப்பின் அவர்களுக்கும் அவ்வாறு கொடுக்க முடியும். ஏழ்மையும் பசி பட்டினியும் தாண்டவமாடும் தற்கால சூழ்நிலையில் எல்லோரும் மனிதர்கள் என்ற வகையில் இரக்க சுபாவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உழ்ஹியாவையும் தாண்டி வேறு உதவிகளையும் செய்து அல்லாஹ்வின் கூலியை பெறுவோமாக!

வல்லவன் அல்லாஹ் எமது நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top