அஷ்ஷெய்க் பளீல்
களா நோன்பு பிடிக்க வேண்டியவர் ஷவ்வாலின் ஆறு நோன்பு பிடிப்பது எப்படி?
ரமலானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் சுன்னத்தான ஆறு நோன்புகளை பிடிப்பதன் சிறப்புகளை வலியுறுத்தி ஸஹீஹான ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.
ஆனால், ரமளானில் நியாயமான காரணங்களுக்காக நோன்புகளை விட்டு அவற்றை களாச் செய்ய வேண்டிய நிலையில் இருப்போர் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பை முதலில் பிடிப்பதா அல்லது களாவான பர்ளான நோன்பை முதலில் படிப்பதா என்ற வினா எழுகிறது. அதாவது பர்ளு இருக்க சுன்னத்தை எப்படிச் செய்ய முடியும் என்பது நியாயமான கேள்வி தான்.
இது தொடர்பாக வந்துள்ள கருத்து வேறுபாடுகளை நாம் நோக்கினால், இமாம் அபூஹனீபா போன்றவர்கள் முதலில் ஷவ்வால் மாதத்தின் நோன்பை பிடிக்க அனுமதி உண்டு என்று கூற, மாலிகீ, ஷாபிஈ மத்ஹபுகளைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு அனுமதி இருந்தாலும் அது மக்ரூஹ் என்ற கருத்தையும் கொண்டிருக்கிறார்கள். இமாம் அஹ்மத் அவர்கள் முதலில் கடமையான நோன்பை நோற்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
ஷவ்வால் மாதம் கடந்துவிட்டதற்குப் பிறகு அந்த மாதத்திற்கே உரிய சுன்னத்தான நோன்புகளை வேறு மாதங்களில் பிடிக்க முடியாது என்பதால் அவற்றை முதலில் பிடிக்கலாம். களா நோன்பைப் பொறுத்த வரையில் அடுத்த ரமளான் வரும் வரை அதற்கான சந்தர்ப்பம் இருப்பதனால் அதனை உடனடியாக பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இது தான் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பை முற்படுத்த முடியும் என்ற கருத்தைக் கொண்டவர்கள் முன்வைக்கும் நியாயமாகும்.
ஆனால் பெரும்பாலான இமாம்கள் களா நோன்பு உள்ளவர்கள் ஷவ்வாலின் ஆறு நோன்புகளை முதலில் தோற்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க ரமலான் மாதத்தின் களா நோன்பை முதலில் பிடிக்கும் ஒருவர் ஷவ்வால் மாத நோன்புக்கும் சேர்த்து நிய்யத்து வைத்தால் அது இரண்டுக்குமான நன்மையை பெற்றுத்தருமா என்ற கேள்வி எழுந்தாலும் சில இமாம்கள் இவ்வாறு இரண்டைக்கும் சேர்த்து நிய்யத்து வைத்து பிடிக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனித்தனியாகப் பிடித்தால் கிடைக்கும் அதே அளவு நன்மை கிடைக்க மாட்டாது என்பதும் அவர்களது கருத்தாகும். அடிப்படையில் அவர் பர்ளுக்கே நிய்யத்து வைத்து அதனுடன் சுன்னத்தையும் இணைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை அம்மாதத்தின் எந்தவொரு பகுதியிலும் தொடராகவோ இடைவெளி விட்டோ ஆரம்ப பகுதி, நடுப்பகுதி, இறுதிப் பகுதி என்ற எப்பகுதியிலும் பிடிக்க முடியும். எனவே களா நோன்புகள் உள்ள ஒருவர் முதலில் அவற்றை நோற்று விட்டு பின்னர் ஷவ்வால் மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை நோற்பதே பொருத்தமாகத் தெரிகிறது.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!




