அஷ்ஷைக் பளீல்
சர்வதேச மகளிர் தினத்தை (8.3.2020) முன்னிட்டு லங்காதீப பத்திரிகையின் இன்றைய (7) ஆசிரியர் கருத்து “வேலையிலிருந்து வேலைக்குப் போவது” என்ற கூற்றைக் கூறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் காரியாலயங்களில் பகல் முழுக்கவும் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்ற கருத்தை அந்த வாசகம் காட்டுகிறது.
அந்த ஆசிரியர் கருத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் சென்று அடிமைகளாக வேலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு கருத்துக்களையும் நோக்குகின்ற பொழுது சில உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்.
காரியாலயத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிலும் வேலை செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய கருத்து அல்ல. பெண்கள் கட்டாயம் தொழில் செய்துதான் வாழ வேண்டும் என்ற கடப்பாட்டை இஸ்லாம் அவர்கள் மீது சுமத்தவில்லை.அவர்கள் விரும்பினால் தொழில் செய்யலாம்.
لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبُوا ۖ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ
“ஆண்களுக்கு தாம் சம்பாதித்தவற்றிலிருந்து ஒரு பங்கும் பெண்களுக்கு தாம் சம்பாதித்தவற்றிலிருந்து ஒரு பங்கும் உண்டு” என்பது குர்ஆனிய வசனமாகும்.
எனவே, தொழில் செய்வதற்கான ஆற்றலும் திறமையும் விருப்பமும் அவர்களிடம் இருந்தால் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அவர்கள் தொழில் செய்யலாம். ஆனால் அது அவர்கள் மீதான கட்டாயமில்லை அவர்களுக்கு தேவையான அனைத்து செலவினங்களையும் வழங்குவது அவர்களுடைய பொறுப்புதாரிகளான ஆண்களது பொறுப்பாகும்.
முதலில் அது தந்தையாக இருக்கலாம். தந்தை இல்லாத போது பாதுகாவலர்களாக இருப்போரது பொறுப்பாக அமையும்.
இரண்டாவது அது கணவராக இருக்கலாம். கணவர் ‘நபகா’ எனப்படும் செலவினத்தை கட்டாயமாக பெண்ணுக்கு கொடுத்தாக வேண்டும் அது அவருடைய கடமையாக இருக்கிறது.
ஆனால் குடும்ப செலவினங்களுக்கு ஆண் உழைப்பது போதாது என்று காணுகின்ற பொழுதும் பெண்ணின் சேவை வேண்டப்படுகின்ற பொழுதும் பெண் தொழிலுக்கு போகலாம் ஆனால் அவள் மீதான கடமையாகாது.
வேலைத்தலங்களிலும் பொதுப் போக்குவரத்து சாதனங்களிலும் பெண்கள் முகம்கொடுக்கும் பாலியல் ரீதியான சேஷ்டைகள் ஒருபுறம். அவர்களால் சுமக்க முடியாத வேலைப் பளுக்கள் அவர்கள் மீது சுமத்தப்படுவதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் இன்னொரு புறம்.இது நவயுகத்தின் நச்சுக் கனிகள்.பெண் விடுதலை வீரர்கள் தேடிக் கொண்டவை.
எனவே வேலையிலிருந்து வேலைக்கு போவது என்ற அந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது ஜாஹிலிய , சடவாத சமூக அமைப்பில் இருக்கின்ற பிழையான நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
அடுத்ததாக மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் சென்று அடிமைகளாக வேலை செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தொழில் செய்ய வரும்படி இலங்கை பெண்களை அங்குள்ள அரபிகள் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பினால் போகலாம் அல்லது நாம் போகாமல் இருக்கலாம்.அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுவதாக இங்குள்ளவர்கள் கருதினால் இங்கு உள்ள பெண்களை அனுப்பாமல் இருக்கலாம். எனவே இங்கிருந்து அனுப்பி விட்டு அங்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. அவர்கள் தமக்கு கீழால் தொழில் புரிபவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது அவர்களுடைய பொறுப்பு. இஸ்லாமும் அதனைத்தான் சொல்லுகிறது ஆனால் அவர்கள் அப்படி அந்த தொழிலாளர்களை நடத்த வில்லை என்பதற்காக மறைமுகமாக இஸ்லாமிய நாடுகளை சாடுவது முறையல்ல. அங்கு இருக்கின்றவர்கள் செய்கின்ற தப்புக்கு இஸ்லாம் பொறுப்பல்ல.
எனவே சர்வதேச மகளிர் தினத்தில் இப்படியான கருத்துக்களும் இலங்கை ஊடகங்களில் வெளிவருகின்றன என்பதை நாம் தெரிந்து இருக்க வேண்டும்.
இஸ்லாம் பெண்ணுக்கு கொடுத்திருக்கின்ற அந்தஸ்து மிக உயர்வானது. தகப்பனை விடவும் தாய்க்கு தான் முன்னுரிமை இஸ்லாத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. தாய் செய்த தியாகங்களை தான் அல்குர்ஆன் மடக்கி மடக்கிப் பேசுகிறது. திருமணம் முடிப்பதற்கு முன்னால் அந்தப்பெண்ணுக்கு மரியாதை செய்யும் நோக்கில் மஹர் கொடுக்கப்படவேண்டும்.அவளது அந்தஸ்துக்கும் தகுதிக்கும் ஏற்ப செலவினங்கள் ‘நபக்கா’ என்ற பெயரில் வழங்கப்பட வேண்டும்.அவர்களோடு மிகவும் நல்ல முறையில் கணவன்மார் நடந்து கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்களை பார்க்கின்ற பொழுது பெண்ணினத்தை மிகவும் கௌரவமாக இஸ்லாம் பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது அவர்களுக்கான ஆடை அவர்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனம் அல்ல. அவர்களது கற்பையும் மானத்தையும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த ஒரு கிரீடம்.
பெண்ணை போகப்பொருளாக,விளம்பரப் பண்டமாக மாற்றியுள்ள இக்காலகட்டத்தில் அவள் கட்டாயம் தொழிலுக்குச் சென்று உழைத்து தான் ஆகவேண்டும் என்று தொழிலை அவள் மீது திணிக்கின்ற இந்த உலகத்தில் இஸ்லாம் பெண்ணை கண்ணியமாகவே பார்த்திருக்கிறது.
அல்லாஹ்வுடைய தீனில் அதற்கான சகல ஏற்பாடுகளும் இருக்கின்றன.
அல்ஹம்துலில்லாஹ்!




