தேசிய சமாதானப் பேரவையின் மன்னார் மற்றும் பேருவளை சர்வமத குழுக்கள் இம்மாதம் 9ஆம் திகதி பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கடந்த 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை பேருவளையில் தேசிய சமாதான பேரவை NPC(National Peace Council)உம் அதன் பிராந்திய அமைப்பான LIRC (Local Interfaith Religious Council- மதங்களுக்கிடையிலான பிராந்திய சமயப் பேரவை)யும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மன்னார் மற்றும் பேருவளை சர்வமத குழுக்களுக்கு இடையிலான பரிமாற்ற (Exchange Visit) விஜயத்தின் போது இந்நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் தேசிய சமாதான பேரவையானது நடைமுறைப்படுத்தி வரும் “சமய சக வாழ்விற்கான கூட்டு ஈடுபாடு” எனும் தொனிப்பொருளிலான செயல் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பேருவளை மொல்லியமலை பள்ளிவாயல் பிரதம பேஷ் இமாமும் விவாகப் பதிவாளருமான அஷ்ஷெய்க் பாஸில் ஹஸ்ரத், மக்கொனை சென்ட் வின்சென்ட் தேவாலய பிரதான பாதிரி அருட்தந்தை ரோஷன் சில்வா, மன்னார் மாவட்ட சர்வமத குழுத் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் உட்பட மன்னார் மாவட்ட கிறிஸ்தவ போதகர் சங்க போதகர்கள், பேருவளை மற்றும் மன்னார் மாவட்ட அரச உத்தியோகஸ்தர்கள், பேருவளை பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்களான அல்ஹாஜ் உவைன், அல்ஹாஜ் கிதாம் ஆகியோரும் கலந்து கொண்டனர் அஷ்ஷெய்க் முப்தி மதனி இஸ்லாஹிஆகியோர் நழீமிய்யாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கான இணைப்பாளர்களாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜாமியா நளீமியாவின் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜாமியா நளீமியாவின் தோற்றம், வளர்ச்சி, இலக்குகள், இதுவரை எட்டப்பட்ட சாதனைகள், குறிப்பாக சமாதான சக வாழ்வுக்காக ஜாமிஆ மேற்கொண்ட கடந்த கால முயற்சிகள் தொடர்பாகவும் ஜாமிஆ தொடர்பாக எழுப்பப்பட்டத சில வினாக்களுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பேருவளை பிரதேச மக்களுக்கும் ஜாமியா நளீமியாவுக்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் குறிப்பாக பிற சமயத்தவர்கள் ஜாமிஆவுக்கு வருகை தந்து இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.







