கொரோனா வைரஸால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட மாணாக்கர்களும் கூலி தொழிலாளர்களும்

அஷ்ஷைக் பளீல்

மாணவ மாணவியர்

பாடசாலைகள், மதரசாக்கள், மக்தப்கள், பல்கலைக்கழகங்கள், டியூஷன் வகுப்புகள், மதரசாக்கள், போன்றன தற்போது மூடப்பட்டிருக்கின்றன. எனவே, அனைத்து மாணவர்களும் தமது வீடுகளுக்குள் அடங்கிப் போயிருக்கிறார்கள். பலர் தமது நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதிலிருந்தும் தூரமாக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த மாணவர்கள் வீட்டில் இருக்கும் போது என்ன செய்வது? எவ்வாறுஅவர்களை பராமரிப்பது என்ற பிரச்சினை பெற்றோருக்கு ஒரு பெரிய சவாலாக மாறி இருக்கிறது.

பல மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளுக்குள்ளும் தொலைக்காட்சிகளுக்குள்ளும் சங்கமித்துவிட்டார்கள். கொரோனா பற்றிய பயம் – அச்சம் அவர்களது உள்ளத்திலே பயங்கரமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனவே வீட்டில் இருக்கின்ற இந்த பிள்ளைகளை என்ன செய்யலாம் என்பது ஒரு பிரச்சினை தான்.

#அவர்கள் பாடசாலைகளில் கற்கும் பாடநூல்களை வீட்டிலிருந்து கற்பதற்கு பெற்றோர் தூண்டலாம்.மூத்த சகோதர சகோதரிகள் இளையவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். முடிந்தால் பெற்றாரும் இதனைச் செய்யலாம்.

#வீட்டில் இருக்கின்ற வாசிகசாலையில் இருந்து மேலதிகமான நூல்களை வாசிக்கத் தூண்டலாம். பயிற்சிகளைக் கொடுத்து செய்யும் படி கூறலாம்.

#வீட்டு முற்றத்திலே சகோதர சகோதரிகளோடு விளையாடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஊஞ்சல்களை கட்டி விளையாடத் கூறலாம். அல்லது சைக்கிள் ஓட அனுமதிக்கலாம்.

#தொழுகைகளையும் வீட்டிலே தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் மனனமிடவும் அவர்களை ஊக்குவிக்கலாம்.

#ஆனால், கொரோனா தொடர்பான அளவுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்திவிடலாகாது. பயமுறுத்தும் வீடியோக்களை அல்லது தகவல்களை அவர்கள் பார்ப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அவர்களது உள்ளம் அவற்றைத் தாங்கமாட்டாது.

தொழிலாளர்கள்

அன்றாடம் கூலி வேலை செய்து ஊதியம் பெற்று வந்த தொழிலாளர்களது நிலையும் கொரோனா வைரஸ் பீதியின் பின்னர் கவலைக்கிடமாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு தொழில் வழங்கிய சிலர் தொழில்களை நிறுத்தி இருக்கிறார்கள். அல்லது அந்த தொழிலாளர்கள் தொழிலுக்கு போகாமல் வீடுகளுக்குள் அடங்கி இருக்கிறார்கள். நாளாந்த கூலியில் தங்கியிருக்கும் அவர்கள் தமது அன்றாட குடும்ப செலவுகளுக்கு என்ன செய்வது என்ற பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

பெரிய பணக்காரர்கள் கடைகளுக்குச் சென்று அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே சேமித்து விட்டார்கள். ஏழைகளுக்கு எங்கே பணம்?

எனவே, வீட்டிலேயே அடைபட்டிருக்கின்ற இந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களது குடும்பங்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்ய முடியுமா என்று பள்ளிவாயல் நிர்வாகங்களும் சமூக சேவை அமைப்புகளும் யோசிக்கவேண்டும்.

#உலர் உணவுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கலாம். சீனி, அரிசி,பருப்பு போன்ற பொருட்களை அவர்களுக்கு கொண்டு போய்க் கொடுக்கலாம்.

மேற்சொன்ன இரண்டு தகவல்களும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. இன்று நடைமுறையில் இருக்கின்ற இரண்டு முக்கியமான சிக்கல்கள். இவற்றை நாம் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.

கொரோனா ஆபத்து நீடிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினைகளது பாரதூரமும் அதிகரிக்கும்.

அல்லாஹுத்தஆலா இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அனைவரையும் கூடிய சீக்கிரம் பாதுகாத்து அருள்பாலிப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top