அஷ்ஷைக் பளீல் (நளீமி)
கொரோனா வைரஸ் விவகாரத்தின் பின்னர் மக்கள் வீடுகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும், அனாவசியமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்றாடம் கூலித் தொழில் செய்து வந்த பலர் தமது தொழில்களை இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளை கண்டறிந்து உதவி செய்வது சமூகத்திலிருக்கின்ற தனவந்தர்கள் பொறுப்புதாரிகளுடைய உடனடிக் கடமையாகும்.
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களது காலத்திலும் முஹாஜிர்கள் மிகவும் வறுமைப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமது தேவைகளை மற்றவர்களிடத்தில் முறையிடவில்லை. அந்த நேரத்தில் பின்வரும் குர்ஆன் உடைய வசனம் இறங்கி அப்படியானவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று பணித்தது. அப்படியான உதவிகள் அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் என்ற கருத்தும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:-
وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ۚ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ (272) لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (273) الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (274)
“பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(2: 273, 274)
தக்வாவுடன் உலகில் வாழ்ந்தவர்களது பண்புகளையும் அவர்களுக்கு மறுமையில் வழங்கப்படவுள்ள வெகுமதிகளையும் பற்றி பின்வரும் குர்ஆன் வசனம் தெரிவிக்கிறது. அங்கும் கூட யாசகம் கேட்பதற்கு தயங்குபவர்கள் பற்றிய வசனம் இருக்கிறது.
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ (15) آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ (16) كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ (17) وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ (18) وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ (19)
“(இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
யாசிப்பவருக்கும், கேட்பதற்கு தயங்குபவருக்கும் (மஹ்ரூம்) அவர்களது செல்வங்களில் பங்கிருக்கிறது.(51:15-19)
இந்த வசனத்தில் வந்த ‘மஹ்ரூம்’ என்ற சொல்லுக்கு இமாம்களான கதாதா,ஸுஹ்ரி ஆகியோர் ‘சுயமரியாதை உள்ளவன். அவன் மக்களிடத்தில் எதனையும் கேட்கமாட்டான். அவனது தேவை பற்றி எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என விளக்கம் தந்துள்ளனர்.
இத்தகையவர்கள் இக்காலத்திலும் எக்காலத்திலும் இருக்க முடியும்.
எனவே, தற்கால சூழலில் தமது தேவைகளை முறையிட வெட்க்கப்பட்டிருக்கும் ஏழைகளது தேவைகளை அறிந்து உதவி செய்வதற்கு தனவந்தர்களும் இஸ்லாமிய இயக்கங்களும் சங்கங்களும் தம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த உதவிகள் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி தேவையுடைய முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ் தஆலா அனைவரையும் பாதுகாப்பாக!




