அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதும் அளவுக்கதிக விலையேற்றமும்

அஷ்ஷைக் பளீல் நளீமி

ஊரடங்குச் சட்டம் மற்றும் வீட்டிலே அடங்கியிருக்க வேண்டும் என்ற கட்டளை போன்றவற்றின் காரணமாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வியாபார நிலையங்களில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சில இடங்களில் பொருட்களுக்கு ‘செயற்கையான தட்டுப்பாடு’ நிலவுவதாகக் கூறப்படுகிறது.

சிலபோது வியாபாரத் தலங்களில் அதிகமாக பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு அதனால் தட்டுபாடு ஏற்படலாம். ஆனால் பொருள்கள் கடையில் அல்லது களஞ்சியத்தில் இருக்க அவற்றை விற்காமல் மறைத்து வைத்துக்கொண்டு அவற்றின் விலையை கூட்டி பின்னர் விற்பதற்கு சிலர் தயாராகினால் அதற்கு நாம் பதுக்கல் என்போம்.

الاحتكار هو حبس مال أو منفعة أو عمل والامتناع عن بيعه وبذله حتى يغلو سعره مع شدة حاجة الناس إليه

ஒரு பொருளுக்கு அல்லது பயன்பாட்டுக்கு அல்லது சேவைக்கு மக்கள் மத்தியில் அதிக தேவை இருக்க அதனை வழங்காமல் அதற்கு எதிர்காலத்தில் விலை கூடட்டும் என்பதற்காக பதுக்கி மறைத்து வைத்திருப்பது தான் ‘பதுக்கல்’ எனப்படும்.

இதனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுதொடர்பான ரசூல்(ஸல்)அவர்களது சில நபிமொழிகள் வருமாறு:-

1.«لا يحتكر إلا خاطئ» أخرجه مسلم في صحيحه، كتاب المساقاة، باب تحريم الاحتكار في الأقوات حديث رقم 3098.

“தவறிழைப்பவனைத் தவிர வேறு யாரும் பதுக்கமாட்டார்கள்” (ஸஹீஹ் முஸ்லிம்)

2.«من احتكر على المسلمين طعامهم ضربه الله بالجذام والإفلاس» أخرجه ابن ماجة في سننه، كتاب التجارات، باب الحكرة والجلب، حديث رقم 2152،

“யார் முஸ்லிம்களுடைய உணவைப் பதுக்கி வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் குஷ்ட்டரோகத்தையும் வியாபாரத்தில் ஓட்டாண்டி தனத்தையும் சாட்டி விடுவான்” (ஸுனன் இப்னு மாஜா)

3.«من احتكر طعاماً أربعين ليلة فقد برئ من الله تعالى وبرئ الله تعالى منه» أخرجه أحمد في المسند – حديث رقم 4741

“நாற்பது இரவுகள் யார் ஒரு உணவை பதுக்கி வைக்கிறாரோ அவர் அல்லாஹ்விடம் இருந்து நீக்கிவிட்டார்.அவரிடமிருந்து அல்லாஹுத்தஆலா நீங்கிவிட்டான்” (முஸ்னத் அஹ்மத்)

4.” الجالب مرزوق والمحتكر ملعون ” . رواه ابن ماجه ، والدارمي

“பொருட்களை வெளியூர்களிலிருந்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்பவர் (மக்களது நலன்களை கருத்திற் கொண்டு வியாபாரம் செய்பவர்) அல்லாஹ்வுடைய ரிஸ்க்கை பெற்றவராவார். (சுயநலத்துக்காக இருக்கும் பொருட்களைக் கூட விற்பனை செய்யாமல்) பதுக்கல் செய்பவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்குட்பட்டவராவார்.” (ஸுனன் இப்னுமாஜா, தாரமீ)

எனவே, எமது பெரும்பாலான இமாம்கள் பதுக்கல் செய்வது ஹராம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

பதுக்கல் செய்யும் வியாபாரிகளது பொருட்களை ஆட்சியாளர்களுக்கு பறிமுதல் செய்ய முடியும் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாம் வியாபாரத்தை ஆகுமாக்கியிருக்கிறது. மனிதர்களுக்கு சொத்துரிமையைக் வழங்கிருக்கிறது. ஆனாலும் அந்த உரிமை அல்லது சுதந்திரம் பிறருக்கு தீங்கு பயக்கும் வகையில் அமையுமானால் அல்லது அந்த உரிமை எல்லையைத் தாண்டுமாயின், பொது நலனைப் பாதிக்குமாயின் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

எனவே, ஒருவர் தனது உழைப்பை ஆகுமானதாக்கிக் கொள்ள வேண்டுமாயின் மனிதர்களுடைய அன்பையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அல்லாஹ்வுடைய அருள் அவரது வியாபாரத்திற்கு கிடைக்க வேண்டுமாயின் மக்கள் மீது இரக்கம் காட்டி, வியாபாரத்தில் நெகிழ்ச்சித் தன்மையோடும் இரக்க சுபாவத்தோடும் நடந்துகொள்வது அவசியமாகும்.

குறிப்பாக தற்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுவது மிகப்பெரிய துரோகமாகும். ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என முஸ்லிம் வியாபாரி சிந்திக்கமாட்டான். ‘எரியும் கூரையில் சுருட்டுப் பற்றவைப்பது’ என்றும் இதனைச் சிலர் உவமிப்பார்கள்.

அல்லாஹ்வைப் பயந்த, மனிதர்கள் மீது இரக்கமுள்ள வியாபாரியின் நோக்கங்கள் இரண்டு:-

1.நியாயமான முறையில் இலாபமீட்டி உழைப்பது.

  1. மனித நலன்களை உயர்ந்த பட்சம் ஈட்டிக் கொடுப்பது.

இதனையே நாம் ‘இஸ்லாமிய வியாபாரம்’ என்று கூறுகிறோம்

அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top