அரபா தினம் எப்போது?

அஷ்ஷைக் பளீல்

இந்தக் கேள்வி தற்போது பரவலாக வினவப்படுகிறது.

அது பற்றிய சில அடிப்படையான உண்மைகள்.

இது நேற்று இன்று தோன்றிய கருத்து வேறுபாடு இல்லை. எனவே, இது கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட விவகாரமாக இருந்து வந்துள்ளது என்பதால் இது பற்றி எமது காலத்தில் மட்டும் தான் விவாதிக்கப்படுகிறது என்றோ மாற்றுக் கருத்தைக் கொண்டிருப்போர் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர் என்றோ எம்மில் எவரும் நினைக்கலாகாது.

அரபா தினம் பற்றி நிலவும் மிக முக்கியமான இரு கருத்து வேறுபாடுகளாவன:-

முதலாவது கருத்து:-

அரஃபாவுடைய தினம் என்பது ஹஜ்ஜாஜிகள் அரஃபா மைதானத்தில் தரிக்கும் தினமாகும். ஏனைய நாட்டவர்கள் அதற்கேற்பவே அரபாவை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர்களுக்கும் அதுதான் அரபாவுடைய தினமாகும். இக் இக்கருத்தை ஃபத்வா வழங்கும் உயர் தகுதி பெற்ற சில நிறுவனங்களும் சில உலமாக்களும் முன்வைத்துள்ளனர். உதாரணமாக

اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء،

دار الإفتاء المصرية،

والأستاذ الدكتور حسام الدين عفانة

والشيخ سليمان بن عبدالله الماجد

இரண்டாவது கருத்து:-

துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாவது நாள் தான் அரஃபாவுடைய தினமாகும். அது ஹஜ்ஜாஜிகள் அரபாவில் தரிக்கும் தினமாகவோ அல்லது மற்றொரு தினமாகவோ இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும் பிறை பார்த்தல் வித்தியாசப்படுகிறது. இக்கருத்தை:-

المجلس الأوربي للإفتاء

ومركز الفتوى

والعلامة محمد بن صالح العثيمين -رحمه الله

والشيخ عبدالله بن جبرين

والدكتور هاني بن عبدالله الجبير

والأستاذ الدكتور أحمد الحجي الكردي

والأستاذ الدكتور خالد المشيقيح

போன்ற தனி மனிதர்களும் அமைப்புகளும் முன் வைத்திருப்பதை மறந்துவிடலாகாது.

எனவே, தமக்குக் கிடைத்திருக்கின்ற ஆதாரங்களையும் தத்தமது இஜ்தி ஹாதுகளையும் வைத்துத் தான் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த விவகாரம் தமிழில் சொல்லப்படுவது போன்று ‘வெட்டு ஒன்று துண்டுகள் இரண்டு’ என்று திட்டவட்டமாகவே கூறுவதற்கான விவகாரம் அல்ல. எனவே, நாம் இந்த விவகாரத்தில் எல்லை மீறி தர்க்கித்துக் கொள்வதும் அதற்காக நேரத்தை வீணடிப்பதும் பெரும் அநியாயமாகும். ஆனால் அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணியும் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் எவ்வித தவறுமில்லை. அதனை இஸ்லாம் வரவேற்கிறது; ஊக்கப்படுத்துகிறது.

இவ்விவகாரமாக கருத்துக்களை வெளியிட்ட, நிலைப்பாடுகளை எடுத்த கண்ணியத்துக்குரிய உலமாக்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா நிச்சயமாக அருள் பாலிப்பான். அவர்களது நிய்யதிகளுக்கு ஏற்ப கூலிகளை வழங்க போதுமானவன். எனவே யாரும் எவரையும் குறை கூறிக் கொள்வது முறையல்ல.

அடுத்த விடயம் இப்படியான சுன்னத்தான விடயங்களுக்காக நாம் பிரச்சினைப்பட்டுக் கொள்கின்ற அளவுக்கு எமது சமூகத்தில் இருக்கின்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு எந்த அளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

தற்காலத்தில் சமூகம் மிகப்பெரிய சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் ஈமானுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. போதைவஸ்து பாவனை,அடிப்படையான கடமைகளில் குறைபாடு செய்வது, இளைஞர்களது ஒழுக்கப் பிரச்சினை, குடும்பங்கள் சிதைவு, ஸ்திரமற்ற பொருளாதார நிலை, பண்பாட்டுத் துறை வீழ்ச்சி போன்ற விவகாரங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து எம்மை சீர்செய்து கொள்வதற்கு முயற்சிக்கின்றோமா என்பது தான் கேள்வி .

எனவே எமது கால நேரங்கள் அனைத்தும் இதுபோன்ற விவகாரங்களில் செலவழிக்கப்படுவது கவலை தருகிறது.

அரஃபா தினத்தையும் பெருநாள் தினத்தையும் தீர்மானிக்கும் விடயத்தில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு உள்ளூர் உலமாக்கள் கூறுவது போன்று நடந்து கொண்டால் நிச்சயமாக எல்லாம் சிறப்பாக முடியும். இன்ஷா அல்லாஹ்.

இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. நாவைப் பேணிக் கொள்வோமாக! பிறரை நரகவாசிகள், வழிகேடர்கள் என்று ஃபத்வா கொடுக்கும் எமது நிலை மறுமை நாளில் என்னவாகுமோ தெரியாது.

நாம் உலகிற்கு வந்திருப்பது பிறருக்கு குப்ர் பத்வாக் கொடுத்து நரகிற்கு அனுப்புவதற்கன்றி நாமும் திருந்தி பிறரையும் திருத்துவதற்காகும்.நாம் போகின்ற சுவர்க்கத்து பிறரையும் அழைத்துச் செல்வதற்காகும்.மாறாக சுவர்க்கத்தின் வாசலில் நின்றுகொண்டு அங்கு வருவோருக்கு தடைபோடுவதற்கல்ல.

விவகாரங்களை பரந்த மனப்பான்மையுடன் அணுகுவோம்!

அனைவரையும் அன்பாகவும் இரக்கமாகவும் பார்ப்போம். மக்கள் தவறு செய்யும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் அவர்கள் தவறுசெய்யாதிருக்க உண்மையான அக்கறையுடன் பணியாற்றுவோம்!

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் பிறரைப் பற்றி பேசி பாவங்களை தேடிக் கொள்ளாமல் எமது அமல்கள் எம்மை கரை சேர்க்குமோ என்ற பயத்தோடு, எமது பாவங்களுக்காக கண்ணீர் மல்கிப் பிரார்த்தித்து அல்லாஹ்வை நெருங்குவோமாக!

ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-

“அரஃபா நாளில் பிரார்த்தனை தான் பிரார்த்தனைகளில் சிறந்ததாகும். நானும் எனக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்களும் உச்சரித்த சிறந்த பிரார்த்தனையாவது”:-

لا اله الا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

ஆதாரம்:-ஸுனனுத் திர்மிதீ

மேற்படி பிரார்த்தனையுடன்,

உலகை கொரோனாவிலிருந்து விடுதலையாக்கும் படியும் உலகில் அல்லல்படும் மக்களுக்கு விடிவைத் தரும்படியும் மறுமையில் எம் அனைவருக்கும் நிரந்தர விமோசனத்தை தரும்படியும் வல்லவன் அல்லாஹ்விடம் மன்றாடுவோமாக!

இந்த துல்ஹஜ் மாதத்தில் சிறப்பான அமல்களை செய்து அல்லாஹுத்த ஆலாவின் நெருக்கத்தை அடைந்த அடியார்களது கூட்டத்தில் எம்மையும் அவன் சேர்ப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top