அஷ்ஷைக் பளீல்
அல்குர்ஆனின் கருத்துப்படி சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது போகாமல் இருப்பது பாவமாகும்.
ولا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا ۚ
“சாட்சிகள் (சாட்சியமளிக்க) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்.”
وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ﴾ [البقرة: 283
“சாட்சியத்தை மறைக்க வேண்டாம். யார் அதனை மறைக்கிறாரோ அவரது உள்ளம் பாவம் செய்கிறது நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தஆலா நன்கறிந்தவனாக இருக்கிறான்.”
அதேவேளை, மோசமான, தகுதியற்ற ஒருவருக்கு வாக்களிப்பதும் குற்றமாகும். அதனை பொய் சாட்சியமளிப்பதற்கு ஒப்பிடலாம்.பொய்ச்சாட்சியமளிப்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெரும் பாவமாகும்.
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ ﴾ [الحج: 30، 31
“அழுக்கான சிலைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.மேலும் பொய்சாட்சியமளிப்பதையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.”
மேற்படி வசனத்தின் படி பொய் சாட்சியமளிப்பது சிலை வணக்கத்திற்கு ஒப்பான குற்றமாகும்.
((ألا أنبئكم بأكبر الكبائر؟))، قالوا: بلى يا رسول الله، قال ثلاثًا، قال: ((الإشراك بالله، وعقوق الوالدين))، وكان مُتَّكئًا فجلس، فقال: ((ألا وقول الزور، وشهادة الزور))، فما زال يقولها، حتى قلت: لا يَسْكُتُ”.
‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’பொய் சாட்சி’ என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
(இதைக் கண்ட) நாங்கள் ‘அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!’ என்று கூறினோம்.(ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்)
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُواْ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُواْ ۚ وَإِن تَلْوُۥٓاْ أَوْ تُعْرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا.
எனவே,தேர்தலில் வாக்களிக்கும் போது மிகவுமே ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளுக்கோ அற்ப இலாபங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. தற்போதுள்ள நிலை கவலைக்கிடமானது.
பெரும்பாலும் வாக்காளர்கள் பின்வரும் காரணங்களில் ஓன்றுக்காக அல்லது பலதுக்காகவே வாக்களிக்கின்றனர்:
- வாக்கு கேட்பவர் தனது உறவினர் அல்லது நண்பர் என்பதற்காக,
- வாக்குக் கேட்பவர் வாக்காளருக்கோ குடும்பத்தில் இருக்கின்ற ஒருவருக்கோ அல்லது நண்பர் ஒருவருக்கோ தொழில் வழங்கினார் என்பதற்காக,
- பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ வாக்காளருக்கு உதவி ஒன்றை செய்திருக்கிறார் என்பதற்காக,
- வாக்குக் கேட்பவர் இந்த வாக்காளரது தனிப்பட்ட எதிரியின் எதிரி என்பதற்காக,
- தொலைக்காட்சி விளம்பரத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தியமைக்காக,
- கடந்த தடவையும் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறார் என்பதனால் அவரை தெரிவு செய்வது நல்லது என சிந்திப்பதனால்.
இப்படி பார்க்கின்ற பொழுது அறிவும் பண்பாடும் தூர நோக்கும் சாதிக்கும் திறமையும் கொண்டவர்கள் பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவது குறைவு.
தேர்தல் காலங்களில் அதிகமாக பணத்தை வாரி இறைக்கும், வாக்குக்கு பணம் கொடுக்கும் சிலபோது மதுவை பரிமாறும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
ஆனால் அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா நாம் நீதியாகவும் நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் நடந்து கொள்ள வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துகின்றான்:-
“முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.”
தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை என்பதற்கும் அப்பால் அது ஒரு இபாதத்தாக இருக்க முடியும். காரணம் மனித வாழ்வில் இருக்கின்ற எந்த நடவடிக்கைகளும் நிய்யத்தை பொறுத்தே அமைகின்றன. நல்லெண்ணத்துடன் ஒரு காரியத்தை செய்கின்ற பொழுது அதற்கு நிச்சயம் அல்லாஹுத்தஆலா கூலி வழங்குவான். அதேபோன்று மோசமான, குறுகிய, அற்பமான,லோகாயத நோக்கங்களுக்காக ஒரு காரியத்தை செய்கின்ற பொழுது அது தண்டனையாக அமையும் .
எனவே வாக்களிக்க முன்னர் இது எனக்கு தண்டனையை பெற்றுத் தருமா அல்லது என்னை கரை சேர்க்குமா என்று யோசித்து வாக்களிப்பது நல்லது.
ஒரு வேட்பாளரை தெரிவு செய்கின்ற பொழுது அவர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை உண்டுபண்ணுவது, நாட்டை கட்டியெழுப்பபுவது, மனித நலனுக்கு முன்னுரிமை வழங்குவது போன்ற தன்மைகளை பெற்றிருக்கிறாரா என்பதையும் அதே நேரம் அவருடைய கடந்த கால வரலாற்றில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதனையும் கவனமாக நோட்டமிட்டு வாக்களிக்க வேண்டும்.
இல்லாத போது அடுத்த பாராளுமன்றத்திலும் பிரதிநிதிகள் இந்த நாட்டை பாதாளத்தில் தள்ளுவார்கள் என்பதனால் நாம் ஒருவரை சிறந்தவர் என்று சாட்சியம் அளிக்கையில் அவர் மோசமாக நடந்து கொள்கின்ற பொழுது அவர் செய்கின்ற பாவங்கள் அனைத்துக்கும் நாமும் பொறுப்பாளிகளாக மாறுவோம்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.




