அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி)
- இந்த O/L பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியரும் அவர்களது பெற்றாரும் உற்றாரும் இந்த பெறுபேறு கிடைக்க காரணமாக அமைந்த காரணிகள் பற்றி முதலில் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அத்தகைய மாணவ மாணவியருக்குக் கொடுத்த மூளையும் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் ஏனைய திறமைகளும் அதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் இன்றி அது கிடைத்திருக்காது என்பது மட்டுமல்ல பலருக்குக் கொடுக்காததை அவர்களுக்கு தந்திருக்கிறானே என ஆழமாக உணர வேண்டும்.
எனவே, இவற்றுக்காக அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்து, வாயார அவனைப் புகழ்ந்து பெறுபேறு பற்றிய செய்தி கிட்டியவுடன் சுஜூதில் விழுந்திருக்க வேண்டும். லட்சக் கணக்கான மாணவ மாணவியர் பரீட்சைக்காக தோற்றியும் அவர்களில் பலர் சித்தியடையத் தவறி இன்னும் பலர் போதிய பெறுபேறு கிடைக்கவில்லையே என்று கவலையுடன் இருக்கும் போது அல்லாஹ் நல்ல பெறுபேற்றைத் தந்திருக்கிறானே என்று அந்த வல்லவனைப் புகழ வேண்டுமே தவிர அகங்காரமும் மமதையும் வந்துவிடக் கூடாது.
2.உயர் பெறுபேறுகளையும் நல்ல வாய்ப்புக்களையும் பெருமையாக கருதாமல் அவற்றை அமானிதங்களாகவும் ஏன் சோதனைகளாகவுமே கருத வேண்டும். அது தான் உண்மையும் கூட. உயர் கல்வித் தகமைகளைப் பெறாத வாய்ப்புகள், கிடைக்காத,திறமைகள் இல்லாதவர்களை விட அவற்றைப் பெற்றவர்களுக்கு நாளை மறுமையில் கேள்வி கணக்கு அதிகம்.
எனவே, உயர் பேறுபேறுகளைப் பெற்றவர்கள் வெற்றிக் களிப்பில் திரிய மாட்டார்கள். மாறாக தம்மை நம்பி அல்லாஹ் தந்த இந்தப் பாரத்தை எப்படி சமூகத்திடம் கொடுப்பது அதற்காக நாம் எப்படித் தான் பதில் சொல்வோமோ தெரியாது என்று தான் சிந்திக்க வேண்டும். எனவே அது பரிசோ கெளரவமோ அல்ல.மாறாக மிகத் தெளிவான சோதனை;அமானத்.
- பரீட்சையில் உரிய பெறுபேறுகள் கிடைக்கப்பெறாதவர்களைப்பொறுத்தவரையில் அவர்களோ அல்லது அவர்களது பெற்றார் உறவினர்களோ கவலைப்படத்தேவையில்லை.
காரணம், இன்று உயர் பதவிகளில் இருப்போர் எல்லோரும் O/Lல் நல்ல பெறுபேறுகளை எடுத்தவர்கள் அல்லர்.
அல்லாஹ் எதிலும் ஒரு நலவை வைத்திருப்பான்.
குர்ஆனில் அல்லாஹ் “நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் அதில் உங்களுக்கு நலவு இருக்கலாம்” என்று கூறுகிறான்.
எவராவது சித்தியடையாமல் போயிருந்தால் அல்லது எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெறாமல் போனமைக்குப் பின்னால் அல்லாஹ் ஒரு ‘கைரை’ வைத்திருக்கலாம். அது எமக்குத் தெரியாமல் இருக்கலாம்.
உலக இயக்க வேண்டுமாயின் வித்தியாசமான துறைகளுக்கு ஆட்கள் தேவை.
எல்லோரும் பல்கலைக்கழகம் போனால் ஏனைய துறைகளை யார் பார்ப்பது? அல்லாஹ் உலக சமநிலையை மிகக் கவனமாகப் பேணி வருகிறான். சிலருக்கு சில திறமைகளைக் கொடுப்பதற்கும் வேறு சிலருக்கு சில திறமைகளைக் கொடுக்காதிருப்பதற்கும் நிச்சயமாக அந்த அல்லாஹ் அவனிடத்தில் நியாயங்கள் இருக்கவே செய்யும்.
உச்சமாக முயற்சிப்பது எமது கடமை. முடிவுகளைத் தீர்மானிக்கும் உரிமை அவனுக்குண்டு. முயற்சிக்காமல் நல்ல ரிஸல்ட்ஸை எதிர்பார்ப்பதும் எமது தவறு. அத்துடன் முயற்சியை முழுமையாக செய்துவிட்டு பரீட்சை எழுதிய எல்லோருக்கும் நல்ல ரிஸல்ட் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தப்பு தான்.
- பெற்றாரும் மற்றோரும் பல தவறுகளைச் செய்கிறார்கள்:-
அதி உயர் சித்திகளைப் பெற்றவர்களை அளவு மீறிப் புகழ்ந்து அதனூடாக சித்தியடையத் தவறியவர்களை மானுஷீக ரீதியாக புண்படுத்துகிறார்கள்.
பாராட்டுவதும் உற்சாகப்படுத்துவதும் வாழ்த்துத் தெரிவிப்பதும் இஸ்லாமிய வழிமுறையாகும்.அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. பாராட்டுக்கள் என்பன சாதனை நிகழ்த்தியர்களுக்கு உளவியல் ரீதீயிலும் உட்சாக முயற்சிகள் பெரும் பலத்தைக் கொடுக்கும்.
ஆனால், அவை அளவை மீறும் போது தோற்றவர்களிலும் ஏன் வென்றவர்களிலும் அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய பல பிள்ளைகள் பட்ட பட்டுக்கொண்டிருக்கும் சித்திரவதைகள் ஏராளம். அது O/L ,A/L க்கும் பொருந்தும்.
அந்த பிஞ்சு உள்ளங்கள் ஏன் கசக்கிப் பிழியப்பபட வெண்டும்?
புகழும் போதும் இகழும் போதும் அவற்றின் பக்க விழைவுகளை சீர்தூக்கிப் பார்ப்போம்.
- பிள்ளையின் பெறுபேறு பலவீனமாக அமைந்தமைக்கு பல காரணிகள் பின்புலமாக இருந்திருக்கும் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்
– இயல்பிலேயே கெட்டித்தனம் குறைந்த நிலையில் இருக்கலாம்.
– அல்லது பாடசாலையில் உரிய பாட ஆசிரியர் உரிய முறையில் கற்பிக்காமல் இருந்திருக்கலாம்.
– அல்லது வீட்டு சூழல் கற்பதற்கு இடம் தராமல் இருந்திருக்கலாம்.
– அல்லது அல்லது அல்லது ……என பல தடைகள் இருந்திருக்கலாம்.
எனவே சித்தியடையாத மாணவ மாணவியரை மட்டும் குறை கூற முடியாது.
எனவே பாடசாலை நிர்வாகம் பெற்றார் மற்றோர் அனைவரும் இவற்றிலிருந்து பாடம் படித்து அடுத்தடுத்த கால பரீட்சை பெறுபேறுகளுக்காக இப்போதிருந்தே திட்டமிட வேண்டும்.
மாணாக்கரது உள நிலை அறிந்து செயல்படுவதற்கு அல்லாஹ் எமக்கு உதவியாக இருப்பானாக!




