19.02.2026 அதிகாலை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான ஸஹர் சிந்தனை
அஷ்ஷைக் பளீல் (நளீமி)
வல்லவன் அல்லாஹ்வின் பெரும் பாக்கியங்களைச் சுமந்த புனிதமான ரமலான் மாதம் எம்மை வந்தடைந்திருக்கிறது. இதனை அடையச் செய்தமைக்காக வல்லவன் அல்லாஹுக்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!
நாம் எம்மை ஆத்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அறிவு ரீதியாக பக்குவப்படுத்தி, அல்லாஹ்வுக்கு நெருக்கமாகவர்களாக எம்மை மாற்றிக் கொள்வதற்காக இந்த மாதத்தை ரப்புல் ஆலமீன் எங்களுக்குத் தந்திருக்கிறான்.
எம்மை நாம் பாவக்கறைகளிலிருந்து பரிசுத்தமாக்கி உயர் பண்பாடுகளை எம்மில் ஏற்படுத்திக் கொள்வதற்கான ஓர் ஆன்மீகக் குளியலறை தான் ரமழான் என்று சொன்னால் கூட அது மிகையல்ல.
நாம் இந்த மாதம் தரப்பட்டதன் உண்மையான நோக்கங்களைப் புரிந்து அதன் ஒவ்வொரு நிமிடங்கள் எப்படிப் போனாலும் ஒவ்வொரு வினாடியையும் மிகச் சரியாகப் பயன்படுத்தினால் இன்ஷா அல்லாஹ் தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஏன் முழு உலகிலும் பாரிய மாற்றங்களை காண முடியும். இந்த ரமலானுடைய மாதத்து அமல்களான நோன்பு, திலாவதுல் குர்ஆன் இரவு வணக்கம், ஸதகா, இஃதிகாப் போன்ற அமல்கள் இதற்காகத் தான் தரப்பட்டிருக்கின்றன.
ரமழான் மாத நோன்பானது இஸ்லாம் என்ற மிகப்பிரமாண்டமான கட்டடத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
இதிலே தான் ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த புனித வேதம் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட லைலத்துல் கத்ர் என்ற இரவும் இருக்கிறது. இந்த மாதம் வந்துவிட்டால் அருளினதும் சுவர்க்கத்தினதும் வாயில்கள் திறக்கப்படும்.நரகத்தின் வாயில்கள் இழுத்து மூடப்படும். சைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள் என நபி (ஸல்) கூறினார்
إذا دخلَ رمضانُ ، فُتحَت أبوابُ الرَّحمةِ ، وغُلِّقت أبواب
جهنم وسلسلت الشياطين
எனவே நல்லமல்கள் செய்வதற்கான வளமான பூமியாக அல்லாஹ்வால் ரமலான் மாதம் தயார் செய்யப்படுவதோடு அமல்கள் செய்வதற்கான சகல தடைகளும் நீக்கப்படும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
அப்படிப்பட்ட வித்தியாசமான மாதமாக இது அமைந்திருக்கிறது.
الصوم لي وانا اجزي به
நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி வழங்குவேன் என அல்லாஹ் கூறியுள்ளான். அந்தவகையில் நோன்பு ஏனைய அனைத்து அமல்களை விடவும் அவனுக்கு விருப்பமான அமலாகவும் தனித்துவமான இபாதத்தாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரமலான் மாதத்து நோன்பு கடமையாக்கப்பட்டிருப்பதற்கு குர்ஆனில் வேறு எக்காரணத்தையும் அல்லாஹ் கூறாமல்
لعلكم تتقون
நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற எதிர்பார்க்கையோடு தான் அது கடமையாக்கப்பட்டுள்ளது என்ற ஒரே ஒரு காரணத்தையே அவன் குறிப்பிடுகிறான்.
அப்படியாயின் எம்மிடம் வரவேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கும் அந்த ‘தக்வா’ எனப்படும் விஷேடமான பண்பின் தன்மை, யதார்த்தம் என்ன என்பதை நாம் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உள்ள அல்லாஹ் பற்றிய அச்சம் தான் தக்வாவாகும். அவன் மீதான பயம், பக்தி, பிரக்ஞை என்று கூட அதனைக் கூறலாம். என்னை அல்லாஹ் அணுவணுவாக அவதானித்துக் கொண்டிருக்கின்றான்; அவனுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அடியானின் பயத்தைத் தான் தக்வா என்று கூற முடியும். அந்த உயர்ந்த மனநிலை அடியானிடம் வந்துவிட்டால் பாவங்களை அவன் வெறுப்பான். அவற்றிலிருந்து தூரமாகுவான். அதேவேளை நற்கருமங்களில் மிகவும் ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கும் இந்த தக்வா தான் அவனுக்கு உந்துசக்தியாக அமையும்.
பாவங்களுக்கான தூண்டற் காரணிகள் மலிந்து போயுள்ள ஒரு யுகத்தில் வாழுகின்றோம். இப்படியான சவால் மிக்க சூழலில் எமக்கு இப்படியான பலமான ஒரு கேடயம் மிகவுமே அவசியப்படுகிறது. இந்த உயிர் துடிப்பான, உயர் மனப்பாங்கை- பொக்கிஷத்தை அடைந்து கொள்ள நாம் ரமழானில் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.
முன்னர் உலகுக்கு வந்த எல்லா நபிமார்களும் தங்களுடைய சமூகங்களை பார்த்து :-
الا تتقون
“நீங்கள் அல்லாஹ்வை ‘தக்வா’ செய்வதில்லையா?” என்று தான் கேட்டிருக்கிறார்கள்.ஹூத், ஷுஐப், ஸாலிஹ், லூத் போன்ற அனைத்து நபிமார்களும் இவ்வாறான ஒரு வினாவை தமது சமூகங்களை நோக்கி விடுத்திருக்கிறார்கள்.
மேலும் அல்லாஹ்,
ان الله مع الذين اتقوا و الذين هم محسنون
“நிச்சயமாக அல்லாஹ் தக்வாதாரிகளுடனும் நற்கருமங்கள் செய்பவர்களோடும் இருக்கின்றான்” என்று குர்ஆனில் கூறுகிறான்.
தக்வாவை கடைப்பிடிக்கும் படி குர்ஆனில் 81 இடங்களில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து தக்வா எவ்வளவு தூரம் அவசியமானது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
ஆனால் ரமழானில் தக்வா உருவாக வேண்டுமாயின் பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும்:-
முதலாவதாக, ரமழானின் சகல அமல்களுக்கும் பின்னணியில் ஆழமான ஈமான் இருக்க வேண்டும்.அடுத்ததாக கூலியை அல்லாஹ்விடமிருந்து மாத்திரம் எதிர்பார்த்து இக்லாஸுடன் அவற்றில் ஈடுபடவேண்டும்.
من صام/ قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
“யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் இருந்து கூலியை எதிர்பார்த்தும் இந்த ரமலான் மாதத்தில் யார் நோன்பிருக்கிறாரோ நின்று வணங்குகிறாரோ அவரது கடந்த காலத்து பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹ் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் ‘இஹ்திஸாப்’ எனப்படும் அல்லாஹ்விடம் மட்டுமே வெகுமதியை எதிர்பார்க்கும் மனப்பாங்கும் இருக்க வேண்டும்.
மனிதர்கள் என்னைப் பார்க்கலாம்;பார்க்காமல் இருக்கலாம்;புகழலாம்; புகழாதிருக்கலாம்.ஆனால் நான் செய்கின்ற ஒவ்வொரு கருமமும் அல்லாஹ்வுக்கு என்று மாத்திரம் இருக்க வெண்டும்.
எனவே அந்த நிபந்தனை- அதாவது, ஈமானுடன் கூடிய இக்லாஸ் என்ற முதலாவது நிபந்தனை இங்கு இருக்க வேண்டும்.
அடுத்ததாக ரமழான் காலத்துப் பகல் காலங்களில் உண்ணாமல் குடிக்காமல் உடல் இன்பங்களை அனுபவிக்காமல் அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொள்வது அந்த தக்குவாவை அடைவதற்கான மிக முக்கியமான மற்றொரு நிபந்தனையாகும்.
அவ்வாறு நோன்பாளி தனது பசி, தாகம், பாலியல் ஆசை என்பவற்றை கட்டுப்படுத்திக் கொள்கின்ற பொழுது அவரது மனதின் மீதான அவரது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அதற்கு அவர் கடிவாளம் இடுகின்றார். அல்லாஹ் சொன்னால் நான் கட்டுப்படுவேன்.எனது ஆசைகளை ஒரு புறம் வைத்துவிட்டு அவனுடைய விருப்பத்துக்குத் தான் நான் முன்னுரிமை வழங்குவேன். எனது உடல் தேவைகளை விட எனது இறைவனின் விருப்பம் தான் எனக்கு முக்கியமானது என்ற பிரகடனத்தை நோன்பாளி செய்கிறார். இந்த மனக்கட்டுப்பாடு ‘தக்வா’வை உருவாக்குகிறது.
தக்வாவை உருவாக்குவதற்கான அடுத்த ரமலான் காலத்து அமலாக குர்ஆன் ஓதுவது அமைந்திருக்கிறது. “ரமழான் மாதத்தில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. எனவே அந்த மாதத்தை அடைந்தால் நோன்பு பிடியுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான் ஆகவே அல்குர்ஆனுக்கும் நோன்புக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது.எனவே, ரமழான் மாதம் என்பது ‘குர்ஆனுக்கு எடுக்கப்படுகின்ற ஒரு விழா’ என்று சொன்னால் அது மிகையல்ல. அல்குர்ஆனின் எல்லா போதனைகளையும் அமுல்படுத்துவதற்கான வளமான காலமாக இம்மாதத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, இம்மாதத்தில் அந்த அல்குர்ஆனை நாம் அதிகமதிகம் ஓதுவது, மனனமிடுவது, அதன் கருத்துக்களை ஆழ்ந்து படிப்பது, எம் வாழ்வில் முடிந்தவரை அதனை நடைமுறைப்படுத்துவதுடன் அதனுடைய கருத்துக்களை சமூகமயப்படுத்துவது போன்ற அமல்களில் ஈடுபட
வேண்டும்.மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் நோன்பும் அல்குர்ஆனும் அவ்விரண்டையும் பேணியவர்களுக்காக சிபாரிசு செய்யும் என்று நபியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே ரமலானுடைய காலத்தில் அல்குர்ஆனுக்கான எமது கடமைகளைச் செய்து எமது தக்வாவை நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதத்தில் தக்வாவை அதிகரித்துக் கொள்வதற்கான அடுத்த அமலாக இரவு காலத்தில் நின்று வணங்குவது அமைந்துள்ளது.ரமழான் அல்லாத ஏனைய காலங்களில் அல்லாஹ்வுக்கு மிகவுமே விருப்பமான அமலாக இரவில் நின்று வணங்குவது இருந்தாலும் ரமலான் காலத்தில் அது விசேடமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் நாம் இயன்றவரை அதிகமாக அல்குர்ஆனை ஓதி இந்த கியாமுல்லை அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
அதேபோன்று இந்த ரமலானுடைய காலத்திலே நாம் அதிகமாக நாவைப் பேணிக் கொள்ள வேண்டும். நாவை கட்டுப்படுத்தாமல் நோன்பிருப்பதால் எதிர்பார்க்கப்படும் தக்வா உருவாகமாட்டாது என்பதற்கும் அப்பால் யதார்த்தத்தில் நாவடக்கமின்மை நோன்பை முறிக்கவும் கூடும் என சில இமாம்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் “யார் பொய் சொல்வதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ,அவர் தனது உணவையும் பானத்தையும் தவிர்ப்பதில் அல்லாஹுத்தஆலாவுக்கு எந்தத் தேவையும் கிடையாது.” எனக் கூறினார்கள்.
எனவே, பொய், புறம், கோள், ஆபாசமான பேச்சுக்கள், தேவையில்லாத, பயனற்ற பேச்சுக்கள் அனைத்தையும் நோன்பாளி கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.நபி (ஸல்) அவர்கள்:-
الصِّيَامُ جُنَّةٌ فَلا يَرْفُثْ وَلا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ
“நோன்பு என்பது ஒரு கேடயமாகும்.நோன்பாளி ஆபாசமாக பேசவேண்டாம். கூச்சலிட வேண்டாம். மடத்தனமாக நடந்துகொள்ள வேண்டாம். அவருடன் யாராவது சண்டைக்கு வந்தால் அல்லது திட்டினால் நான் நோன்பாளி என்று இரண்டு தடவை கூறட்டும்” என்றார்கள்.
அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அல்லாஹ் எமக்கு நாவைத் தந்திருப்பது எதற்காக? நாம் அதன் மூலம் நன்மையை ஏவி தீமையை தடுப்பது, மற்றவர்களுக்கு பயனுள்ளவற்றைக் கற்றுக் கொடுப்பது,உண்மை பேசுவது சமாதானம் செய்து வைப்பது, ஆகுமானவற்றை பேசுவது போன்ற பயனுள்ள விடயங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமேயாகும். எனவே, அந்த மிக முக்கியமான உறுப்பை நாம் இந்த மாதத்தில் துஷ்பிரயோகம் செய்யாமல் அதனைப் பாதுகாத்து தக்வாவை அடைந்து கொள்ள வேண்டும்.
قال جابر رضي الله عنه:- إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكذب والمآثم ودع أذى الخادم وليكن عليك وقار وسكينة يوم صيامك ولا تجعل يوم فطرك ويوم صيامك سواء .
ஜாபிர் (ரலி) “நீ நோன்பிருந்தால் உனது காது, உனது கண் என்பன நோன்பிருக்கட்டும்.உனது நாவு பொய் பேசுவதில் இருந்தும் பாவங்கள் செய்வதிலிருந்தும் நோன்பிருக்கட்டும். உனது பணியாளுக்கு நோவினை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள். உன்னிடத்தில் ஒரு அமைதியும் கண்ணியமும் குடி கொள்ளட்டும்.நீ நோன்பு பிடிக்காத நாளையும் நோன்பு பிடிக்கும் நாளையும் சமனாக்கிக் கொள்ளாதே” எனக் என்றார்கள்.
எனவே, ரமலானுடைய காலத்தில் எமது நாவு, எமது செவி, எமது கண் அனைத்தையும் முற்று முழுதாக பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வோமாக! அப்போதுதான் அந்த தக்வா எமக்கு கிடைக்கும்.
தக்வாவை அடைந்து கொள்வதற்கான அடுத்த வழிமுறை ரமலானில் முடிந்தவரை அதிகமாக தர்மம் செய்வதாகும்.நபி (ஸல்) அவர்கள் ரமழானில் கட்டுப்பாடில்லாத காற்றைப் போன்று தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள் என்று சஹாபாக்கள் கூறினார்கள் . ரமலான் மாதம் நோன்பின் மூலம் ஏழைகளது பசியை அல்லாஹ் நோன்பாளிக்கு உணரச் செய்கின்றான். அந்தவகையில் இந்த புனித மாதத்தில் அதிகமாக வாரி வழங்கி ஏழை எளியவர்களது துயர்களை துடைப்போமாக. குறிப்பாக எமது உறவினர்கள் தேவையுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததாகும்.
அடுத்து இப்தார் செய்விப்பதும் ரமலான் காலத்தில் குறிப்பிடத்தக்க அமலாகும். குறிப்பாக ஏழைகள், எமது அயல்வீட்டார், நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களுக்கு நாம் நோன்பு திறக்கச் செய்ய வேண்டும். ஆனால் அது ஆடம்பரமாகவோ வீண் விரயமாகவோ அமைந்துவிடக் கூடாது.
அடுத்ததாக கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பதும் தக்வாவை அதிகரித்துக் கொள்வதற்கான மற்றொரு வழிமுறையாகும்.நபி(ஸல்) அவர்கள் தமது மனைவிமாரோடு பள்ளி வாயிலிலே கூடாரங்களை அடித்துக் கொண்டு இஃதிகாப் இருந்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் அழுத்தமாக குறிப்பிட வேண்டிய ஒரு விடயமும் காணப்படுகிறது. அதாவது, ஏனைய காலங்களில் பாவங்கள் செய்வதனை விடவும் ரமலானுடைய காலத்திலேயே பாவம் செய்வது என்பது மிகவும் பாரதூரமாக அமையும். இரட்டிப்பான தீமைகளைப் பெற்றுத் தரும் என்பதையும் நாம் மனதிலே இருத்த வேண்டும்.ரமழான் மாதத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் பாவங்கள் மன்னிக்கப்படாமல் ஒருவர் வெளியேறினால் அவர் அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்படட்டும் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்திக்க அதற்கு நபியவர்கள் ‘ஆமீன்’ என்று சொன்னார்கள். அந்த வகையில், நாம் இந்த ரமலானுடைய மாதத்தில் ஏனைய காலங்களை விடவும் பாவங்கள் செய்வதனை முற்றாக தவிர்ப்பதோடு கடந்த காலத்து பாவங்களுக்காக மனம் உருகி அல்லாஹ்விடத்தில் அடிக்கடி பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
எனவே, ரமலானுடைய காலத்தை உயிர்ப்பு மிக்க ஒரு காலமாக, எமது ஆன்மீகத்தையும் லெளகீகத்தையும் வளர்த்துப் போஷிப்பதற்கான ஒரு வசந்த காலமாக நாம் பயன்படுத்தி கொள்வோமாக!
இக்காலத்திலே அரட்டை அடிப்பத்து, நேரத்தை வீணாக்குவது, தொலைபேசியிலே காலத்தை அதிகம் கழிப்பது,அதிகம் தூங்குவது, உணவிலும் ஆடையிலும் வீண்விரயம் செய்வது போன்றவற்றை முற்றும் முழுதாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று நாம் ஒரு சிறுபான்மை நாட்டில் வாழுகின்றோம் என்ற வகையில் இந்த புனிதமான மாதத்தில் பிற சமுதாயத்தவர்களுக்கு இடையூறாக அமையும் விதத்தில் எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது. ஒலிபெருக்கிகளை சத்தமாக போடுவது, பாதைகளிலே விளையாடுவது, பொருத்தமற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
ரமலான் என்றாலே இந்த உலகத்திற்கு ஒரு அருட்கொடை என்று முஸ்லிம் அல்லாதவர்கள் நினைக்கின்ற அளவுக்கு எமது ரமலானுடைய காரியங்களை நாங்கள் மிகவுமே திட்டமிட்டு ஒழுங்காக அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
விசேடமான இந்த ரமழானிய சீசனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அவ்வப்போது வருகின்ற சீசன்களுக்காக விசேடமாக தயாராகுவர்கள்; வியாபாரத் தலங்களை அலங்கரிப்பார்கள்;அதிகமான சாமான்களை கொண்டுவந்து அவற்றை நிரப்புவார்கள்; விளம்பரங்களை விதவிதமாகச் செய்வார்கள்; பசித்து, தாகித்து விழித்திருப்பார்கள்; மும்முரமாக செயல்படுவார்கள்.ஆனால் அதனை விடவும் நாம் ரமலான் என்ற பருவ காலத்தை அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்காக, நரக விடுதலையைப் பெற்றுக் கொள்வதற்காக உயர்ந்த பட்சமாக பயன்படுத்திக் கொள்வோமாக.
அல்லாஹ் எம் அனைவரையும் ரமலானின் முழு பாக்கியங்களையும் பெற்ற கூட்டத்தில் ஆக்குவானாக!




