அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்
இந்த ஆக்கத்தை பின்வரும் தகவலோடு ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்:
1990 களுக்கும் 2002 இடைப்பட்ட காலத்தில் துருக்கிய பொறியாளர் ஈதூன் தூர்ஷூன் நிர்மாணித்த 50ற்கு மேற்பட்ட தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் எதுவும் 2023ல் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைத்தால் பாதிக்கப்படவில்லை. அதாவது நிலநடுக்கத்துக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் அவை நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
அப்படியாயின் மனித முயற்சிகளால் அனர்தங்களைத் தவிர்க்க முடியுமா என்ற வினாவுக்கு இந்த ஆக்கம் விடை தேடுகிறது.
பொதுவாக அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பொழுது அவை அல்லாஹ்வின் ஏற்பாடுகள் என்று நாம் அழுத்தமாகக் கூறுகின்றோம்.
அது எந்தவகையிலும் மறுக்க முடியாத அடிப்படையான உண்மையாக இருப்பதுடன் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டின் ஆறு தூண்களில் அதுவும் ஒன்றாகும். அதனை மறுப்பவர் இஸ்லாத்தின் வட்டத்துக்குள் இருந்தே வெளியே போகின்றார்.பிரபஞ்சத்தில் எது நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் நாட்டுப்படியே நடக்கும் என்பதே அந்த நம்பிக்கையின் சாரம்சமாகும்.
ஆனால், அல்லாஹுதஆலா தனது நாட்டங்களை மனித முயற்சிகளுடனும் சம்பந்தப்படுத்திருக்கின்றான். மனித முயற்சிகள் கட்டாயம் தேவை என்று அவன் வலியுறுத்தியுமிருக்கின்றான்.
முன்னைய நபிமார்களும் நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பின்வந்த இமாம்களும் நல்லடியார்களும் தம்மால் இயன்ற அளவு முயற்சிகளை செய்த பின்னர் தான் அல்லாஹ்விடத்தில் ‘தவக்குல்’(பொறுப்புச் சாட்டல்) வைத்தார்கள். மாறாக எவ்வித முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அவர்கள் வெறுமனே இருந்து விடவில்லை. அத்தகைய முயற்சிகளை உச்சகட்டமாக மேற்கொண்ட பின்னரும் நாம் விரும்பாத ஏதும் நடக்குமாயின் அதுதான் அல்லாஹ்வின் நாட்டம், ஏற்பாடு, முடிவு என்ற திருப்தியுடன் இருந்தார்கள் என்ற உண்மையை நாம் தெளிவாகப் புரிந்திருப்பது அவசியமாகும்.
அந்தவகையில் அனர்த்தனங்களை ‘களா கத்ர்’ உடன் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகும். கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் நாம் தற்போதும் எதிர்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறியுள்ள ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
(அ) பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் எழுதப்பட்டும் பதிவுசெய்யப்பட்டும் உள்ளன:
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வால் முன்கூட்டியே எழுதப்பட்டும் பதிவுசெய்யப்பட்டும் உள்ளன என்பது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த எழுத்தின் விதம் என்ன, அது எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தின் இயல்பு என்ன என்பதை நாம் அறியாதபோதிலும், அல்லாஹ் உயர்ந்த இந்தப் பிரபஞ்சத்தை—அதன் பூமி, வானம், உயிரற்றவை, உயிருள்ளவை அனைத்தையும் தன்னிடத்தில் இருக்கும் அளவீட்டின்படி உருவாக்கியுள்ளான். அவன் அனைத்தையும் தனது அறிவால் சூழ்ந்திருக்கிறான்; அனைத்தையும் எண்ணிக்கையுடன் பதிவு செய்துள்ளான். இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொன்றும் அவனது அறிவினடியாகவும் சித்தத்தின் படியுமே நிகழ்கிறன என்பதே ‘களா கத்ர்’ நபிக்கையின் சாரம்சமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் “உங்கள் இறைவனிடமிருந்து பூமியிலோ வானிலோ ஒரு அணுவின் எடைக்குச் சமமானதும் கூட மறைவதில்லை; அதைவிடச் சிறியதோ பெரியதோ எதுவும் தெளிவான ஒரு பதிவேட்டில் இல்லாமல் இல்லை” (யூனுஸ் 61)என்றும்,
“ஒரு இலை விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இல்லை; பூமியின் இருள்களில் உள்ள ஒரு விதையும் கூட, ஈரமானதோ உலர்ந்ததோ எதுவும் தெளிவான ஒரு பதிவேட்டில் இல்லாமல் இல்லை” (அல்-அன்ஆம் 59).என்றும்
“பூமியிலோ, உங்கள் உயிர்களிலோ ஏற்படும் எந்தத் துன்பமும், நாம் அதை உருவாக்குவதற்கு முன்பே ஒரு பதிவேட்டில் இல்லாமல் இல்லை; நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு எளிதானதே” (அல்-ஹதீத் 22) என்றும் கூறுகிறான்.
(ஆ) அல்லாஹ்வின் இந்த முழுமையான அறிவும், துல்லியமான கணக்கீடும், சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே அவன் அனைத்தையும் பதிவு செய்திருப்பதும், மனிதன் வாழ்வில் முயற்சிகளைச் செய்வதற்கும் , செயல்படுவதற்கும் எவ்வகையிலும் தடையாக இருப்பதில்லை.
ஏனெனில், அல்லாஹ் விளைவுகளை எழுதிவைத்திருப்பது போலவே அவற்றுக்கான காரணங்களையும் எழுதிவைத்துள்ளான்; தனது முடிவுகளை நிர்ணயித்தது போலவே முன்னோடிகளையும்-முன்னேற்பாடுகளையும் நிர்ணயித்துள்ளான். ஒரு மாணவனுக்கு வெற்றியை மட்டும் எந்த வழியிலேயும் அடையலாம் என்று அவன் எழுதவில்லை; மாறாக, உழைப்பு, ஆர்வம், கவனம், விழிப்புணர்வு, பொறுமை, தாங்கும் வலிமை போன்ற வழிகளின் மூலம் மட்டுமே வெற்றியை எழுதுகிறான். இதுவும் எழுதப்பட்டதே; அதுவும் எழுதப்பட்டதே.
‘காரண காரிய விதி’யை அல்லாஹ் உலகில் செயல்படுத்துகிறான். முழுப்பிரபஞ்சமும் அதனால் பிணைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பொருளை நாம் மேலே வீசினால் அது கீழ்நோக்கி வருவது,நெருப்பு சுடுவது, கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் உடல் நோய்வாய்ப்படுவது என்பன காரண காரிய விதிகளுக்கான சான்றுகளாகும்.
காரணங்களை கடைப்பிடிப்பது விதி(கத்ர்)க்கு முரணானது அல்ல ; மாறாக அதுவும் கதரின் ஒரு பகுதிதான். அதனால் தான் நபி(ஸல்) அவர்களிடம், மருந்துகள் மற்றும் தீங்குகளைத் தவிர்க்கும் காரணங்கள் அல்லாஹ்வின் விதியைத் திருப்பிவிடுமா என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் “அவையும் அல்லாஹ்வின் விதியில் ஒரு பகுதி தான்” (அஹ்மத், இப்னு மாஜா, திர்மிதி; ஹஸன்).எனத் தெளிவாகக் கூறினார்கள்.
ஷாம் பிரதேசத்தில் தொற்று நோய் பரவியபோது, உமர்(ரலி) அவர்கள் சகாபாக்களின் ஆலோசனையுடன் அங்கு போகாமலிருக்க முடிவு செய்தார்கள். அப்போது, “அல்லாஹ்வின் விதியிலிருந்து தப்பி ஓடுகிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது, “ஆம், அல்லாஹ்வின் விதியிலிருந்து அல்லாஹ்வின் விதிக்கே தப்பி ஓடுகிறோம். இரண்டு நிலப்பகுதிகளுக்கு நீங்கள் செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒன்று வளமானது, மற்றொன்று வறண்டது. வளமான நிலத்தில் நீங்கள் உங்கள் கால்நடைகளை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிதான்; வறண்ட நிலத்தில் மேய்த்தாலும் அதுவும் அல்லாஹ்வின் விதியால் தான் அல்லவா?”எனக் கூறினார்கள்.
(இ) கத்ர் என்பது நமக்குப் மறைக்கப்பட்ட மறைபொருள்:
ஒரு விஷயம் நிகழ்ந்த பிறகே அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிகிறோம்.ஆனால், அது நிகழ்வதற்கு முன், பிரபஞ்சச் சட்டங்களை(விதிகளை)யும், மார்க்க வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, நம் மார்க்கத்திற்கும் உலகியலுக்கும் பயன்களைத் தேடும்படிதான் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.
“மறைவான விடயங்கள்(கைப்) என்பன உலகங்களின் இறைவன் மனிதர்களின் கண்களிலிருந்து பாதுகாத்து வைத்த ஒரு நூல்; நிகழ்காலத்தின் ஒரு பக்கமே மக்களுக்கு அதிலிருந்து இடையிடையே வெளியே வருகிறது” என ஒரு கவிஞர் கூறினார்.
அல்லாஹ்வின் பிரபஞ்சச் சட்டங்களும் மார்க்கச் சட்டங்களும், காரணங்களைப் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எமக்குக் கட்டாயமாக்குகின்றன. அல்லாஹ்வின் தீர்ப்பிலும் விதியிலும் மிக வலுவான நம்பிக்கை கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் இதை நடைமுறைப்படுத்தினார்கள்.
அன்னார் எச்சரிக்கையுடன் நடந்தார்கள்; படைகளைத் தயார் செய்தார்கள்; யுத்தம் நடக்க முன்னர் முன்னோடிக் குழுக்களையும் உளவாளிகளையும் அனுப்பினார்கள்; போராட்டத்தின் போது இரண்டு மார்புக் கவசங்களையும் தலைக் கவசத்தையும் அன்னார் அணிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்; பள்ளத்தாக்கின் வாயிலில் வில்லாளர்களை நிறுத்தினார்கள்; மதீனாவைச் சுற்றி அகழி தோண்டினார்கள்; ஹப்ஷாவிற்கும் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்ய தனது தோழர்களுக்கு அனுமதிவழங்கியது மட்டுமன்றி தாமும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள்; தனது ஹிஜ்ரத் பயனத்தின் போது முழுமையான முன்னெச்சரிக்கைகளை அவர்கள் மேற்கொண்டமையும் கவனிக்கத்தக்கதாகும்.
ஹிஜ்ரத் பயணத்தின் போதான அன்னாரது ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மூலோபோபாயத் திட்டங்களும் வரலாற்றுப் பிரசித்தமானவை. அந்தவகையில் ஹிஜ்ரத்துக்கான பயண மிருகங்களைத் தயார் செய்ததுடன் பொருத்தமான வழிகாட்டியையும் தெரிவு செய்து கொண்டார்கள். அன்னார் குகையில் மறைந்திருந்தமை, பயணத்தின் போது தேவைப்படும் உணவு, பானம் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டமை , மக்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குப் போகும் பாதை அல்லாத வழமைக்குப் புறம்பான பாதையை பயணத்துக்காக அன்னார் தெரிவு செய்தமை போன்ற ஏற்பாடுகள் திட்டமிட்டு அப்பயணம் மேற்கொள்ளபபட்டமைக்கான சான்றாகும்.
வானத்திலிருந்து தனக்கு நேரடியாக உணவு இறங்கும் என்று அன்னார் காத்திருக்கவில்லை.எனவே, உமர்(ரழி)அவர்கள் “நபி(ஸல்) அவர்கள் தனது குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கான உணவைச் சேமித்து வைத்தார்கள்” புஹாரி(5357), முஸ்லிம் (1757) எனக் கூறினார்கள்.
“ஒட்டகத்தை கட்டிவிட்டு அல்லாஹ்வில் நம்பிக்கை வைய்” என்று ஒருவருக்குக் கூறினார்கள்” (தக்ரீஜ் இப்னு ஹிப்பான்:731)
“சிங்கத்திடமிருந்து தப்பியோடுவது போல குஷ்டரோகியிடமிருந்து தப்பியோடு” (புஹாரி: 5707 ,முஸ்லிம்: 2220) என்றும்,
தொற்றைத் தவிர்ப்பதற்காக, “நோயுற்ற மிருகங்களை ஆரோக்கியமான மிருகங்களுடன் கலக்க வேண்டாம்”(முஸ்லிம்: 2221,இப்னு ஹிப்பான் :6115)” என்றும் கூறினார்கள்.
(ஈ) ‘களா கத்ர்’ இல் நம்பிக்கை வைத்திருப்பது, நாம் விரும்புவதை அடைந்துகொள்ளவும் விரும்பாததை தவிர்க்கவும் முயற்சி செய்வதற்கு எதிரானது அல்ல.எனவே சோம்பேறியும் அலட்சியமானவனும், தனது பாரங்களையும் தவறுகளையும் கத்ரின் மீது சுமத்த முடியாது. அது இயலாமைக்கான சான்று; பொறுப்பிலிருந்து தப்பும் முயற்சி.
அல்லாமா இக்பால்: “பலவீனமான முஸ்லிம் அல்லாஹ்வின் தீர்ப்பும் விதியுமே காரணம் எனக் கூறுகிறான்; ஆனால், வலிமையான முஸ்லிம் தன்னை தடுக்க முடியாத அல்லாஹ்வின் தீர்ப்பாகவும், வெல்ல முடியாத அவனது விதியாகவும் நம்புகிறான்.” எனக் கூறினார்.
முதல் தலைமுறை முஸ்லிம்களும் இதையே நம்பினர். இஸ்லாமிய வெற்றிப் போர்களின் போது முகீரா இப்னு ஷூஃபா (ரழி) அவர்களிடம், ரோமப் படைத்தளபதி ‘நீங்கள் யார்’ என வினவிய போது,முகீரா:“நாங்கள் அல்லாஹ்வின் விதி; அல்லாஹ் உங்களை எங்களால் சோதித்தான். நீங்கள் மேகத்தில் இருந்தாலும் நாங்கள் உங்களிடம் ஏறி வருவோம்.அல்லது நீங்கள் எங்களிடம் இறங்கி வருவீர்கள்!”எனக் கூறினார்.
மனிதன் தன் முழு முயற்சியையும் செய்த பின்பே, “இது அல்லாஹ்வின் தீர்ப்பு” என்று கூற வேண்டும். நபி(ஸல்) முன்னிலையில் இருவர் தீர்ப்பளிக்கக் கொண்டுவரப்பட்டு அவர்களில் ஒருவருக்கு எதிராக தீர்ப்பு அமைந்த போது அவர் ,“ஹஸ்பியல்லாஹ் வ நிஃமல் வகீல்”(எனக்கு அல்லாஹ் போதுமானவன்.அவன் சிறப்பாக பொறுப்பை ஏற்பவன் ) என்றார். அதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் இயலாமையைப் கண்டிக்கிறான்; புத்திசாலித்தனமாக செயல்படு; (அதன் பின் )ஏதாவது உன்னை மீறி நடந்தால், ‘ஹஸ்பியல்லாஹ் வ நிஃமல் வகீல்’ என்று சொல்” என்றார்கள். (அஹ்மத்:23983, அபூதவுத்: 3627)
அவரது பக்கம் தோற்றுப் போவதற்கு அவரே காரணமாக அமைந்து விட்டு அது அல்லாஹ்வின் ஏற்பாடு என நினைத்தமை நபிகளாரின் கண்டிப்புக்குக் காரணமாகும். எனவே, எமது காரியங்களில் நாம் விழிப்புடன் இருப்பது, திட்டமிடுவது நலன்களைக் கண்டறிவது ஒரு செயலின் பின் விளைவுகளை அறிய சிந்தனையைப் பயன்படுத்துவது என்பவற்றின் அவசியத்தை மேற்படி சம்பவம் உணர்த்துகிறது.
(உ) கதரும் தீர்ப்பிலும் நம்பிக்கையின் பயன்:
மனிதன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டு , அல்லாஹ்வின் புறத்திலிருந்து வர இருப்பவற்றிற்காகக் காத்திருக்கும் போது, இந்த நம்பிக்கை அவனுக்கு நம்பிக்கையின்மையின் தருணத்தில் உறுதியையும், போராட்டத்தில் உற்சாகத்தையும், ஆபத்து நேரத்தில் தைரியத்தையும், அதிர்ச்சியில் பொறுமையையும், உலகியலான வாய்ப்புகள் வித்தியாசப்பட்டாலும் ஹலால் சம்பாதிப்பில் திருப்தியையும் அளிக்கும்.
ஒரு முஸ்லிம் போராட்டத்தின் போது: “அல்லாஹ் எங்களுக்கு எழுதியதைத்தவிர வேறு எதுவும் எங்களைத் தாக்காது.”எனக் கூறுவான்.அவன் தனது எதிரிகளைப் பார்த்து : “யார் மீது போராட்டம் விதியாக்கப்பட்டதோ அவர்கள் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும் உங்கள் படுக்கைகளுக்கே வந்திருப்பார்கள்” (ஆல் இம்ரான் 154). எனக் கூறுவான். துன்பத்தின் போது அவன்: “இது அல்லாஹ்வின் தீர்ப்பு; அவர் விரும்பியதே நடந்தது” என்றும் கூறுவான்.
அநியாயக்கார அரசரிடம் அவன்: “என் ஆயுளை நீளமாக்க உன்னால் முடியாது; எனக்கென உள்ள ரிஸ்கை விட்டும் என்னை உன்னால் ஒரு போதும் தடுக்க முடியாது.” எனக் கூறுவான். களா கத்ரின் நம்பிக்கை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அது நம் சமூகத்தை உறுதியான, போராடும், வரலாற்றின் தலைமையை ஏற்கத் தகுதியான சமூகமாக மாற்றும்.
அனர்த்தங்களுக்கு மனித செயல்கள் காரணமா?
இப்போது மீண்டும் இயற்கை அனர்த்தங்களுக்கும் களா கத்ருக்கும் இடையிலான தொடர்பு பற்றி நோக்குவோம்.
இங்கு உதாரணத்திற்காக 2023ல் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தை பற்றிப் பேசலாம்.அதில் சுமார் 60,000 பேர் உயிரிழந்து,157 பில்லியன் டொலர் சேதமும் ஏற்பட்டது. நில நடுக்கத்தைத் தொடர்து செய்யப்பட்ட ஆய்வுகளின் போது துருக்கிய பொறியாளர் ஈதூன் தூர்ஷூன் 1990 ஆம் ஆண்டிற்கும் 2002 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்மாணித்த 50ற்கு மேற்பட்ட தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் எதுவும் அந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் நிலநடுக்கத்துக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் அவை நிர்மாணிக்கப்பட்டிருந்தததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த புவி நடுக்கம் தொடர்பில் கட்டுமானப் பொறியாளர்கள் நிறுவனத்தால் (Institution of Structural Engineers) ஓர் ஆய்வு அறிக்கை (Longitudinal study report) வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை பொறியியல் பேராசிரியரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கட்டடச் சூழல் இடர் ஆய்வு மையத்தின் (CURBE) இயக்குநருமான பேராசிரியர் எமிலி சோ மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் (UCL) பொறியியல் அறிவியல் புலத்தைச் சேர்ந்த டாக்டர் யாசெமின் டிடெம் அக்தாஸ் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.
பேராசிரியர் எமிலி சோ இவ்வறிக்கையில்: “எங்களது களப்பணி மற்றும் தொலைதூர ஆய்வுகள் இந்த நிலநடுக்க விவகாரத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளன. இதில் குறைந்த நில அதிர்வுத் திறன் கொண்ட, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் சிக்கலும் அடங்கும். கட்டிட விதிமுறை இணக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இலாப நோக்கமானது கட்டுமானத் துறையில் உள்ள அனைவரையும் குறுக்கு வழிகளைப் பின்பற்றத் தூண்டியுள்ளதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. முக்கியமாக வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (RC) கட்டமைப்புகளால் ஆன கட்டிடங்களே அதிக உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட தொழில்நுட்ப அறிவு, நவீன கட்டிட விதிகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் இருந்தபோதிலும், மிகப்புதிய கட்டிடங்களில் கூட குறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
எனவே இதன் வெளிச்சத்தில் நோக்கினால் இலங்கையில் கடந்த காலங்களிலும் அண்மைக்காலத்திலும் இடம்பெற்ற அனர்த்தங்களுக்கு மனிதர்களது பக்கத்தில் இருந்த பலவீனங்களும் கவனயீனங்களும் எவ்வளவு தூரம் பங்களித்துள்ளன என ஆராயப்பட வேண்டும்.




