பொலன்னறுவை மாவட்ட அதுகல கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் உஸனார் சேர் காலமானார்.
(நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே மீண்டு செல்வோம்)
அவர் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி,மாவனெல்லை ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் முன்னை நாள் அதிபரும் அதுகல பள்ளிவாசல் நிருவாக சபையின் நீண்டகால தலைவரும் விவசாயக் கழகத்தின் தலைவரும் ஆவார்.
எனது ஊர் அனுராதபுரம் – நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அவர் அதிபராக கடமையாற்றிய காலப் பிரிவில் அதனது வரலாற்றில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தினார் .அவருக்கு எனது தனிப்பட்ட துஆக்கள் என்றும் உரித்தாகும்.
நாச்சியாதீவு மண் இந்த மனிதரை என்றும் மறவாது. இன்று அந்த ஊர் அவரது வபாத்துச் செய்தி கேட்டு அழுது கொண்டிருக்கிறது.
அவர் அதிபராக இருந்த காலத்தில் பொதுமக்களுடனும் மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் அன்பாகவும் நெருக்கத்துடனும் பழகினார்.
அவரது மாணவர்களில் ஒருவரான ஸஹீல் ஷாகிர் அவரைப் பற்றி எழுதும் போது ‘ உஸனார் சேர் நாச்சியாதீவில் இருக்கும் போது 24 மணி நேரமும் பாடசலைக்கு உள்ளேயே தனது வாழ்க்கையை செலவிட்டார். எந்த ஒரு தோரணையும் பந்தாவும் அதிகார ஆசையும் இல்லாத வெகு சரளமான மனிதர். கட்டமைக்கப்பட்ட நிர்வாகி. உசனார் சேரின் வாழ்வியல் கிராமப்புர பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்களுக்கான எழுதப்படாத வழி காட்டி நூல். உங்களைப் போன்ற ஒரு ஆளுமையும் அன்பும் கொண்ட அதிபரை நான் கண்டதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். இது ஒரு மாணவரது சாட்சியமாகும். ஊரில் உள்ள அனைவரும் இந்த சாட்சியத்தைக் கூறுவார்கள்.
பாடசாலை நேரத்தில் பாடசாலை விடயமாக எந்த ஆசிரியரிடமும் கடுமையாக நடந்து கொண்டாலும் அதே நாளின் அந்த ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று சகஜமாக பழகி சிரித்துப் பேசும் அளவுக்கு நிர்வாகத்தையும் சொந்த வாழ்வையும் குழப்பிக் கொள்ளாத பக்குவப்பட்ட நல்ல மனிதர்.
வாழ்வில் மிக துயரமான சம்பவங்களை அவர் சந்தித்திருக்கிறார். வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப் பிரிவில் அவரது முழுக் குடும்பமும் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட அவர் மாத்திரம் அல்லாஹ்வின் அருளால் உயிர் தப்பினார்.
அவர் ஓய்வு பெற்ற காலத்திலும் கூட தொடர்ந்தும் தனது ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுபட்ட சமூக பணிகளில் முன்னின்று உழைத்து தலைமைத்துவம் வழங்கினார். தான் கடமை செய்த பல ஊர்களுக்கும் அடிக்கடி சென்று அவர்களது சுக துக்கங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்.
பழைய அழிஞ்சுப்பொத்தானை – புதிய அதுகல ஊருக்கு சேவை செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அந்த ஊர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு நான் அழைக்கப்பட்டு சென்றிருந்த பொழுது அன்னாரோடு மேலும் நெருக்கமாகப் பழகக் கிடைத்தது.
அந்த நிகழ்வில் அன்னாரின் சேவை நலன் பாராட்டும் வகையிலான விருதை வழங்கும்படி ஏற்பாட்டாளர்கள் என்னைக் கேட்டுக் கொண்டமையை எனக்கு கிடைத்த ஒரு கௌரவமாகவும் எனது ஊருக்கு அவர் செய்த சேவைக்கான என்னால் ஆன பணிவான ஒரு கைமாறாகவும் கருதுகிறேன்.அந்த சேவை நலன் பாராட்டும் வைபவத்தை – தருணத்தை இப்போது நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.
சில மாதங்களுக்கு முன்னர் அவர் தன்னோடு நெருக்கமாக பழகும் தனது பிரதேசத்தை சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு ஜாமிஆவுக்கு வருகை தந்து என்னைத் தேடி வந்து என்னோடு மிக நீண்ட நேரம் அளவளாவிச் சென்றதையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.
கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதர் பலராலும் விரும்பப்பட்டவர். அடக்கமானவர்; பரந்த மனப்பாங்கு கொண்டவர். நல்லதொரு அறிவாளுமை. முன்மாதிரியான மனிதர். அவரிடம் நாம் அனைவரும் பல முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லாஹ் அவரது அறிவுப் பணியை, தன்னலம் கருதாத சேவையைப் பொருந்திக் கொண்டு அவரது பாவங்களை மன்னித்து அவருக்கு மேலான சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை வழங்குவானாக.
அஷ்ஷைக் பளீல் (நளீமி)




