Easter Sunday

கிறிஸ்தவ சகோதரர்ககளுக்கான உயிர்த்த ஞாயிறு செய்தி

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)

கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என்றும் முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்றும் அழைக்கும் மனிதப் புனிதர் மனித சமுதாயத்தின் விடிவுக்காக உலகத்துக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது முஸ்லிம்களதும் ஆழமான நம்பிக்கை. அவர் மனித சமூகத்தின் ஈடேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அன்னாரது வாழ்க்கை மனித சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது.

மனித சமூகத்தின் துன்பங்களையும், கஷ்டங்களையும் அகற்றுவதற்கு அர்ப்பணிப்போடு செயற்படுவதும்,மனித நலன்களுக்காக உழைப்பதும் அவசியம் என்ற கருத்தை கிறிஸ்தவ சகோதரர்களின் உயிர்த்த ஞாயிறு செய்தி எமக்கும் உணர்த்துகிறது.

தற்போதுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நம்பிக்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் போன்ற விடயங்களில் சில பல வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் பொதுவான,உடன்பட்டு செயல்பட முடியுமான பல அம்சங்களும் காணப்படுகின்றன.

கிறிஸ்தவ சகோதரர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் ‘வேதத்துக்கு உரியவர்களே!’ என்று மிகவுமே மரியாதையாக அழைக்கிறான்.அவர்கள் அறுத்த மிருகங்களது மாமிசங்களை புசிக்ககவும் அவர்களது பெண்களை திருமணம் செய்யவும் முஸ்லிம்களுக்கு அனுமதியுண்டு.

ஈஸா (அலை) அவர்களை உண்மையாகவே பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அன்னாரது முன்மாதிரியைப் பின்பற்றி மனித நலன்களுக்காக உழைக்கும் உள்ளத்தைக் கொண்டவர்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:-
“பின்னர் அவர்களைத் தொடர்ந்து எமது தூதர்களை அனுப்பி வைத்தோம். மர்யமின் மகன் ஈஸாவையும் அவர்களின் பின்னால் அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம். அவரைப் பின்பற்றுவோரின் உள்ளங்களில் கருணையையும் இரக்கத்தையும் ஆக்கினோம்.” அல்குர்ஆன்: (57:27)

இப்பின்னணியில் இந்த நாளை அனுஷ்டிக்கும் கிறிஸ்தவ சகோதரர்களது உணர்வுகளை நாமும் மதிக்கிறோம். மனித சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலன்களுக்காக பாசத்தோடு உழைக்க நாம் அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைத்துக்கொள்வதன் அவசியத்தை பின்வரும் அல்குர்ஆனை வசனமும் எமக்கு வலியுறுத்ததுகிறது:-

“நேசம் பாராட்டுவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மிகவும் நெருக்கம் மிக்கவர்களாக தம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.ஏனெனில், அவர்களிடையே ஆழ்ந்த அறிவு கொண்ட மார்க்கத் தலைவர்களும் வணக்க வழிபாடுகளில் துறவு மனப்பாங்கு கொண்டவர்களும் உள்ளனர்.அத்தோடு அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.” (5:82)

அதேநேரம் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் சில தேவாலயங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும் நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதே நேரம் நியூசிலாந்தின் இரு பள்ளிவாயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. மதத்தின் பெயரால் இடம்பெறும் பயங்கரவாதத்துக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது.

அந்தவகையில் எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழவேண்டும் என்ற திட உறுதியை எம் அனைவரது உள்ளத்திலும் ஏற்படுத்திக் கொள்வதோடு இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெறாதிருக்க நாம் வழிவகை செய்ய வேண்டும்.

தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து திட்டமிட்டு ஒழுங்கு செய்த அனைவரையும் அவர்கள் எந்த மதத்தை, இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை வழங்கப்பட வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.

அன்பு பிரவாகமெருத்து ஒடட்டும் !
நீதி ஸ்தாபிக்கப்படட்டும் !!
பரஸ்பர புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இன செளஜன்யமும் நிலவட்டும் !!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top