சகவாழ்வு என்ற பெயரில் நடக்கும் தவறுகள்???

அண்மை காலங்களில் சமாதான சக வாழ்வை அடையும் நோக்கில் முஸ்லிம்களில் சிலர் பிற மத கிரியைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படும் செய்திகளை மீடியாக்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இவ்வளவு தூரம் முஸ்லிம்கள் இறங்கிப் போக வேண்டும் என்று நிச்சயமாக முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒன்றில் சரணாகதியாய் இருக்கலாம்.அல்லது பயமாக இருக்கலாம். அல்லது இஸ்லாம் பற்றிய அறிவீனமாக இருக்கலாம்.

அவர்களது மனங்களை வெல்ல வேண்டுமாயின் இப்படி நடப்பது அவசியம் என்று நினைக்கலாகாது. அல்லாஹ்வை கோபித்துக் கொண்டு மனிதர்களை திருப்தி படுத்த முடியாது என்பதை உறுதியாக மனதிற் கொள்ள வேண்டும். சிலபோது பிறசமயத்தவர்கள் தமது மதம் அல்லாத வேறு மதங்களது வழிபாடுகளையும் தமது வழிபாடுகளோடு சேர்த்து செய்வார்கள். அதனை ஒரு பொருட்டாக அவர்கள் கொள்ள மாட்டார்கள். அது பற்றிய கடுமையான கட்டளைகள் அம்மதங்களில் வந்திருக்கமாட்டாது. அதற்கு அவர்களிடம் உள்ள மத நம்பிக்கைகளது தன்மை ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கோட்பாடுகள், இபாதத்கள், ஹலால், ஹாலாம் வரையறைகள் தொடர்பான மிகவும் தெளிவான ஆணித்தரமான கட்டளைகள் வந்திருக்கின்றன. அவற்றை மீறும் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வரம்புகளை விட்டு வெளியே செல்கின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.ஒவ்வொரு செயல்பாட்டினதும் பாரதூரத்தைப் பொறுத்தது.

எனவே எமக்கும் அவர்களுக்கும் இடையிலான வரம்புகள் வரையறைகளை கட்டாயம் நாம் பேணிக்கொள்வதோடு உலக வாழ்க்கையின் பொதுக் காரியங்களில், வியாபாரம் கொடுக்கல் வாங்கல்கள் அயல்வீட்டார் உறவுகள், சமூக உறவுகள் போன்ற விடயங்களில் மிகவும் உயர்ந்த இஸ்லாமிய பண்பாடுகளை அவர்களுக்கு நாம் காட்ட முடியும். பிற சமயத்தவர்களுடனான உறவுகளின் போது அதனைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்களும் எம்மிடமிருந்து அதனைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.நாம் பிற சமயத்தவர்களது கிரியைகளில் சம்பந்தப்படுவதை விடவும் வியாபாரத்தில் நியாயமானவர்களாக, உண்மை பேசுபவர்களாக, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பவர்களாக, அரசியலில் நீதி நியாயத்துக்கு மாத்திரம் ஒத்துழைப்பவர்களாக என்றெல்லாம் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நாம் அவற்றை செய்யாமல் இப்படியான காரியங்களில் ஈடுபடுவது என்பது தலைகீழான முறைமையாகும்.

முஸ்லிம் அல்லாதவர்களோடு பகைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டது அல்ல என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக எமது சமய கலாசார தனித்துவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை புரிவதற்கான முயற்சியாகும். அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்குரியது எமது மார்க்கம் எமக்குரியது.”லகும் தீனுகும் வலிய தீன்”.

நம்பிக்கை கோட்பாடுகள்(அகீதா), வணக்க வழிபாடுகள் (இபாதா)அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஷரீஆவின் சட்டதிட்டங்கள்(ஹலால்- ஹராம்) என்பவற்றில் நாம் அவர்களோடு இணைய முடியாது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.

எனவே இந்த உண்மைகளை புரிந்த நிலையில் தனித்துவத்தைப் பேணி சமாதான சகவாழ்வை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

 

முழுமையான ஆக்கத்தை வாசிக்க:-

https://shmfaleel.lk/2023/05/blog-post.html?m=1

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top