அஷ்ஷைக் பளீல் (நளீமி)
இம்முறை கல்வி பொதுத் தராதர (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களிலற் சிலர் பரீட்சையின் பின்னர் மிக மோசமான செயல்களில் ஈடுபட்டிருப்பது நாட்டின் சில பகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கல்வி மாணவனது அறிவை மாத்திரம் வளர்ப்பதற்காக வழங்கப்படுவது அல்ல. அறிவுடன் பண்பாடும் இணைய வேண்டும் பண்பாடற்ற கல்வி ஏட்டுச் சுரக்காய் போன்றது.
மனித விழுமியங்கள் குழி தோண்டி புதைக்கப்படுகின்ற காலத்தில் வாழுகிறோம் என்பது மிகப்பெரிய கவலையான விடயமாகும்.
பரீட்சை முடித்தவுடன் எல்லாவற்றுக்கும் முன்பதாக மாணவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி பின்னர் தமக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளது வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் . இதுதான் இஸ்லாமிய மாணவனின் பண்பு.
ஆனால் இவர்கள் தாம் கற்ற பாடசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிறார்கள். தமது சீருடையில் மைமையை பூசிக் கொண்டு பாதைகளில் அட்டகாசமாக நடந்து கொள்கிறார்கள்.
இவர்கள் தாம் கற்கும் காலத்தில் காதலித்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துவதற்கான வாசகங்களும் அவர்களது ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கற்கின்ற காலத்தில் இவர்களுடைய சிந்தனையும் போக்கும் எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகும்.
எனவே இளம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதனை படம் பிடித்து காட்டுவதற்கு இது தவிர வேறு ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் கிடையாது.
இதற்கு முதலில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் இவர்களது பெற்றோர்கள்.அடுத்ததாக இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள். அடுத்ததாக சமூக நிறுவனங்கள்.
அனைவரும் மீதும் அல்லாஹ் மகா பெரிய பொறுப்பை சுமத்தி இருக்கின்றான். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். இப்படியானவர்கள் தான் நாளை சமூக நிறுவனங்களை தமது தோள்களிலே சுமக்க வேண்டும். ஆனால் அதற்குரிய திராணியற்றவர்களாக அவர்கள் உருவாக இருக்கிறார்கள் என்பது எமது கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகும்.
எனவே இந்த நிலையில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.
அடுத்ததாக இந்த மாணவ மாணவியர்களுக்கான விசேடமான ஆன்மீக, பண்பாட்டு, எதிர்கால கல்வி வாழ்க்கை தொடர்பான வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக சமூக நிறுவனங்களும் பாடசாலைகளும் கைகோர்த்து பல முன்னேற்றகரமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.




